General Story

கல்விக்கும் உண்டோ அடைக்கும் தாழ் ?

[சிகாகோ தமிழ்ச் சங்கம், 2014ஆம் ஆண்டு முன்னின்று நடத்திய, தமிழ்நாடு அறக்கட்டளை (TNF) மாநாட்டு மலருக்காக எழுதி வெளியான எனது தமிழ்ச் சிறுகதை.]

சுப்பையா வாத்தியார் பள்ளிக்கூடம் சென்ற போது, இவர் எதுக்கு இங்கு வருகிறார் என்ற சந்தேகத்தோடு, வாட்ச்மேன் செபாஸ்டின் பார்த்தான். அவரை உள்ளே விடக்கூடாது என்று பள்ளி நிர்வாகம் உத்தரவு இட்டிருந்தது.

“என்ன செபாஸ்டின்,  எப்படி இருக்க ? எட்மாஸ்டர் இருக்காரா ?“ சுப்பையா சார் கேட்டதும், செபஸ்டின் முகத்தைத் திருப்பிக்கொண்டு காதில் வாங்காதவன் போல் நின்று கொண்டிருந்தான்.  

சுப்பையா வாத்தியார், கிட்டத்தட்ட நாற்பத்திரெண்டு வருடங்கள் அந்தப் பள்ளியின் ஆசிரியராக இருந்து சில வருடங்கள் முன் ஓய்வு பெற்றவர். தமிழ், ஆங்கிலம், கணக்கு, சரித்திரம், பூகோளம் என்று ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அப் பள்ளி மாணவர்களுக்குப் பாடம் சொல்லி கொடுத்தவர்.. ஏகப்பட்ட மாணவர்கள், பல்வேறு ஆசிரியர்கள், பனிரெண்டு ஹெட்மாஸ்டர்கள் என்று தம் ஆசிரிய வாழ்க்கையில் சகலமும் பார்த்தவர். பள்ளி மானேஜ்மென்டுக்கு  இவர் மீது நல்ல அபிப்ராயம் இருந்தது. அதற்குக் காரணம்,  சுப்பையா வாத்தியார், தம் தொழிலையும், அந்தப் பள்ளியையும் நேசித்த விதம். தம் வாழ்க்கை முழுதும் அந்தப் பள்ளிக்கே அர்ப்பணித்தார். 

அக்காலத்தில் வெறும் டீச்சர் ட்ரைனிங் மட்டும் முடித்து பள்ளியில் சேர்ந்த அவர், படிப்படியாக அஞ்சல் வழிக் கல்வி மூலம் தமிழ், ஆங்கிலம், கணக்கு என்று பயின்று ஒவ்வொரு பாடத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றார். பாடம் சொல்லிக்கொடுப்பதிலும், மாணவர்களை ஊக்கம் சொல்லி வளர்ப்பதிலும் கில்லாடி. அவர் வகுப்பு மாணவர்கள், பள்ளி இறுதித் தேர்வுகளில் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்றனர்.

ஊதியம் வாங்காமல், ட்யூஷன் கிளாஸ் எடுப்பார். மேனேஜ்மெண்ட் என்ன சம்பளம் கொடுக்கிறதோ, அதைப் பேசாமல் வாங்கிக்கொள்வார். திருமணம் பற்றி எல்லாம் அவர் சிந்தித்துப் பார்க்கவே இல்லை. எனவே அவருக்கென்று குடும்பமோ, அதன் மூலம் ஏற்படும் செலவோ இல்லை. காலையில் முக்கு மணி அய்யர் கடையில் டிபன், மதியம் அம்பாள் மெஸ்ஸில் வஞ்சர மீன் சாப்பாடு, இரவு திரும்பவும் முக்கு மணி அய்யர் கடை என்ற ஒழுங்கில் ஒரு நாளும் தவறியதே இல்லை. இந்தக் கடைகள் விடுமுறை விட்டால் மட்டுமே வேறு இடங்களுக்குச் சென்று சாப்பிடுவார். ஒரு பழைய டேப் ரெகார்டரில், பாகவதர், வசந்தகோகிலம், மகாலிங்கம்  என்று அந்த நாளைய பாடல்கள் கேட்பார். எப்போதாவது பார்வதி டாக்கீசில் அவர்கள் நடித்த படம் வந்தால் பார்ப்பார்.

மூன்று வருடங்களுக்கு முன் மேனேஜ்மெண்ட் அவருக்கு ரிடயர்மென்ட் கொடுத்தது. நிறைய பரிசுப் பொருட்களும், பொன்னாடைகளும், மாவட்ட கல்வி அதிகாரியின் பாராட்டுப் பத்திரமும் கொடுக்கப்பட்டன. எல்லாம் மகிழ்ச்சி தந்தாலும், இரவு உறங்கப்போகும்போது தான் உண்மை உறைத்தது. இனி மறுநாள் முதல் பள்ளிக்குச் செல்ல முடியாது என்பதை உணர்ந்ததும், அவரால் அதைத் தாங்க முடியவில்லை. என்ன செய்யப்போகிறோம் என்று தவித்தார். புத்தகங்ககளையும், வகுப்புகளையும், மாணவர்களையும் விட்டால் அவருக்கு வேறு ஒன்றும் தெரியாது.

ஓய்வு பெற்ற முதல் வாரம் வெறுமனே ஊரைச் சுற்றி வந்தார். பிறகு தாங்க முடியாமல், ஹெட்மாஸ்டரையும், மேனேஜ்மெண்ட்டையும் சந்தித்து தம் மனக்குறையைச் சொன்னார். அவர்களும் ஒரு வாரம் யோசித்து விட்டு, மேலும் ஒரு வருடத்துக்கு அவருக்குப் பணி நீட்டிப்பு கொடுத்தனர். ஆனால், வாரத்துக்கு ஒரே ஒரு வகுப்பு (சப்பை வகுப்பு, மாரல் இன்ஸ்ட்ரக்சன்)  மட்டும் எடுக்கலாம். வினாத்தாள், பாடத்திட்டம் அமைப்பில் பிற ஆசிரியர்களுக்கு உதவி செய்தல் என்று பல நிபந்தனைகளோடு ஒப்பந்தம் போட்டு, அதற்கு சொற்ப தொகை ஒன்றை ஊதியமாகவும் கொடுத்து அவரை வைத்துக்கொண்டனர்.

இரண்டு ஆண்டுகள் இப்படியே சென்றன. சுப்பையா அதில் ஏதோ வெறுமையை உணர்ந்தார். தனக்கு கூடுதல் பொறுப்பு அளிக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திடம் கேட்டார். அதற்காகத் தனக்கு எந்த ஊதியமும் தனியாகத் தர வேண்டாம் என்றும் சொன்னார்.

பிற ஆசிரியர்களோடு நிர்வாகம் ஆலோசனை நடத்தியது. இளம் ஆசிரியர்கள் சிலர் சுப்பையா மீது சில குறைகள் வைத்தனர். அவருக்குப் புதிய பாடத் திட்டங்களில் பரிச்சயம் இல்லாததால் வினாத்தாள் வடிவமைப்பில் பல கோளாறுகள் இருப்பதாகச் சொன்னார்கள். மேலும், பள்ளியில் கணினியின் உதவி கொண்டு பாடத்திட்டங்களும், வினாத்தாட்களும் வரும் ஆண்டு முதல் அமைக்க இருப்பதால், சுப்பையாவின் உதவி இனி தேவைப்படாது என்று முடிவு செய்தனர்.

பிறகு மிகுந்த நெருக்கடிக்கிடையே,  நிர்வாகம் ஒரு நாள் சுப்பையாவை அழைத்து இனி அவர் பள்ளிக்கு வரவேண்டாம் என்று சொல்லியது. மேலும், மற்ற பள்ளிகளில் சுப்பையாவின் திறமை பற்றிக் கூறியிருப்பதாகவும், அப்பள்ளிகளில் ஏதாவது வாய்ப்பு வந்தால், சுப்பையா பெயரைப் பரிந்துரை செய்வதாகவும், அவரிடம் ஆறுதலாகச் சொல்லி வைத்தனர்.

ஆனால் சுப்பையா  தினமும் பள்ளிக்கு வந்தார். கொஞ்ச நேரம் சயின்ஸ் லாப் அருகே இருக்கும் வேப்ப மரத்தின் நிழலில் நிற்பார். அந்த மரம் அவர் நட்டு வைத்தது. இன்று பெரிதாக வளர்ந்து தலை நிமிர்ந்து நிற்கிறது. ‘நிர்வாகம் வேண்டாம் என்று என்னை ஒதுக்குகிறது,  உன்னையும் ஒரு நா ஒதுக்க போகுது, ஜாக்கிரதையா இருந்துக்க’,  என்று அந்த மரத்திடம் பேசுவார். பிறகு ஸ்டாஃப் ரூமில் உட்காருவார். மற்ற வாத்தியார்களின் மேசையில் அடுக்கி இருக்கும் மாணவர்களின் கட்டுரை நோட்டுக்களை எடுத்து, அவற்றில் பிழை திருத்தி மதிப்பெண் இடுவார். வகுப்பு வராண்டாவில் உலாத்துவார். ஏதாவது வகுப்பில் ஆசிரியர் வராமல் மாணவர்கள் சத்தம் போட்டுக் கொண்டிருந்தால், அந்த வகுப்பில் நுழைந்து ஏதாவது பாடம் நடத்துவார். இவரது நடவடிக்கைகளைக் கண்டு கொதித்துப் போன மற்ற ஆசிரியர்கள் நிர்வாகத்திடம் முறையிட்டனர்.

நிர்வாகம் சுப்பையாவை அழைத்து, கடுமையாக எச்சரிக்கை செய்து, இனிமேல் பள்ளிக்கு வரவேண்டாம் என்று கண்டிப்பாக சொன்னது. மேலும் வாட்ச்மேன் செபாஸ்டினிடம்  சுப்பையா வாத்தியாரை இனி உள்ளே விடக்கூடாது என்று உத்தரவு போட்டது.

இது நடந்து கிட்டத்தட்ட நான்கு வாரம் ஆயிற்று. சுப்பையாவால் தாங்க முடியவில்லை. இன்று ஒரு முடிவு தெரியாமல் வரக்கூடாது என்று, ஹெட்மாஸ்டெரையும், நிர்வாகத்தையும் பார்க்க கிளம்பி விட்டார்.

வாட்ச்மேன் செபாஸ்டின் அருகே சென்று, அவன் தோளைத் தட்டினார்.

“என்ன விஷயமா வந்தீங்க சார் ?  உங்களை உள்ளே வரக்கூடாதுணு சொல்லிருக்காங்களே சார்” என்றான் குரலில் சிறிது அக்கறை காட்டி. சுப்பையா அவனுக்கு ஐம்பதும், நூறுமாக நிறையத் தடவை கொடுத்து உதவியிருக்கிறார்.

“இல்லப்பா, ஹெட் மாஸ்டரை அவசரமா பாக்கணும்”

அப்போது ஒரு பெரிய வேன் கதவருகே நின்றது. வேனிலிருந்து டிரைவர் இறங்கி செபாஸ்டினிடம் சென்று ஒரு பேப்பரைக் காண்பித்து, “வேன்ல கம்ப்யூட்டர் வந்திருக்கு, கதவைத் திறங்க. கொண்டுபோய் இறக்கணும்.. ” என்றான்.

வேன் உள்ளே போவதற்குத் திறந்த கதவின் இடைவெளியில், சடக்கென்று சுப்பையா உள்ளே நுழைந்தார். வேகமாக நடந்தார். பின்னால் செபாஸ்டின், “சுப்பையா சார் உள்ள போகாதீங்க” என்று கத்தியதை சட்டை செய்யாமல், கிடு கிடுவென ஹெட் மாஸ்டர் ரூம் சென்று கதவைத் தட்டி, உள்ளே நுழைந்தார்.

திடுக்கிட்டு நிமிர்ந்த ஹெட்மாஸ்டர், “ஓ ! வாங்க மிஸ்டர் சுப்பையா, எப்படி உள்ள ..?  என்ன விஷயம்”, அவர் பார்வையில் முன்னர் இருந்த சிநேகபாவம் இல்லை. “பிளீஸ் சிட்” என்று எதிரே இருக்கையைக் காட்டினார்.

“ஆஃப்டர்னூன் சார். என்னால வீட்ல சும்மா இருக்க முடியலை. பள்ளிக்கூடம், வகுப்பறை பாக்காம, சாப்பாடு, தூக்கம் எதுவும் செல்ல மாட்டேங்குது.  எப்பப் பாத்தாலும் ஸ்கூல் நெனப்பாவே இருக்கு.  திருப்பி சேத்துக்கங்களேன்” என்றார்.

“லுக் மிஸ்டர் சுப்பையா. உங்களுக்கு நானும், மேனேஜ்மெண்டும் ஏகப்பட்ட சலுகைகள் ஏற்கனவே எங்க தகுதி மீறி கொடுத்துட்டோம். மற்ற ஸ்டாஃப்ஸெல்லாம் நிறைய கம்ப்ளைண்ட் பண்றாங்க. அவங்க விஷயத்தில நீங்க அனாவசியமா தலையீடு செய்றதை யாரும் விரும்பலை. உங்களைத் திரும்ப நாங்க எடுத்துக்க முடியாது. லீகல் காம்ப்ளிகேஷன்ஸ் நிறைய இருக்கு. ஏன் இவ்வளவு அடமன்ட்டா இருக்கீங்க ?  ரிடையர் ஆயிட்டீங்க. குடும்பம், கொழந்த குட்டினு ஒங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. பேசாம ஒரு ஆல் இந்தியா டூர் போயிட்டு வாங்க.. இல்லைனா பக்கத்துல சிங்கப்பூர், மலேஷியா ட்ரிப் அடிங்க. எனக்கு தெரிஞ்சவங்க அங்க இருக்காங்க. அங்க தங்கிக்கலாம் …”

“சார், ரொம்ப தாங்க்ஸ் சார். ஆனா, அங்கெல்லாம் நம்ப பள்ளிக்கூடம் இல்லியே சார். என்னால நம்ப பள்ளிக்கூடத்த ஒரு நா கூட பாக்கமா இருக்க முடியாது சார். ஸ்டாஃப் ரூம், , கிளாஸ் ரூம்ஸ், நான் வெச்ச வேப்ப மரம். விளையாட்டு மைதானம்,  எட்செட்ரா.. எட்செட்ரா..”

“சுப்பையா சார், ஐ திங் யூ ஹாவ் கம்பல்ஷன் டிஸாடர். ஐ மீன் ஓ‌சி‌டி. நல்ல டாக்டரைப் பாத்து ட்ரீட்மெண்ட்…. “

வாக்கியத்தை முடிக்காமல், ஹெச்செம் டக்கென்று பேச்சை நிறுத்திக் கதவை நோக்கி, “வாங்க ராமகிருஷ்ணன்.”

ராமகிருஷ்ணன் ஒரு பைலுடன் உள்ளே நுழைந்தார். சுப்பையாவை வேண்டா வெறுப்பாகப் பார்த்து லேசாக சிரித்தார். பிறகு  “எச்‌எம் சார், நம்ப புதுசா ஆரம்பிக்கிற சம்மர் கம்ப்யூட்டர் டிப்ளோமா கிளாஸுக்கு இதுவரைக்கும் நம்ப ஸ்டாப்ஸ் எட்டு பேர் என்ரோல் பண்ணி இருக்காங்க. பக்கத்துல இருக்கிற பாங்க் ஸ்டாஃப்ஸ் ஒரு பத்து பேர். கிளாஸ் ஷெட்யூல் போட்டிருக்கேன் சார். நீங்க பாத்து ஓகே சொல்லிட்டீங்கனா எல்லாருக்கும் அஃபிசியலா லெட்டர் அனுப்பிரலாம்… ”

அவர் கொடுத்த பைலை ஹெச்செம் பார்த்தார், ஏதோ கேள்விகள் ராமகிருஷ்ணனிடம் கேட்டார். சுப்பையா மவுனமாக இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார். தானும் இதேபோல் சில வருடங்களுக்கு முன்பு வேறொரு ஹெச்செம்மிடம் இது போல் ஒரு ஷெட்யூல் காண்பித்தது நினைவு வந்தது. ஒரு பத்து நிமிடம் கழிந்தது.

“வெரி குட் ராமகிருஷ்ணன். எவ்ரிதிங் லுக்ஸ் குட். கம்ப்யூட்டர் கிளாஸ் மே 16ஆம் தேதி ஆரம்பிக்கிறதா எல்லாருக்கும் இன்ஃபார்ம் பண்ணிடுங்க”

“ஷூர் சார். தேங்க்யூ” என்று ராமகிருஷ்ணன் வெளியேறினார்.

“ஓ ! சுப்பையா சார்,  நீங்க இன்னும் போகலையா ? இட்ஸ் கெட்டிங் லேட் ஃபார் மி .. கடைசியா உங்ககிட்ட. என்ன சொல்லிட்டுருந்தேன்.” தன் நெற்றியில் விரலால் லேசாகத் தட்டிக்கொண்டே, “ஆ கரெக்ட். நவ் ஐ ரிமெம்பர்.. சைக்யாடி‌ரிஸ்ட் டாக்டர் வசந்திக்கு ஒரு நோட் கொடுக்கறேன்.  அவங்களை உடனே போயி பாருங்க” என்றார்.

“சார், ஐ ஆம் ஆல்ரைட், ஐ ஆம் நாட் இன்ஸேன். பட், தாங்க்ஸ் ஃபார் யுவர் கன்சர்ன். அதெல்லாம் இருக்கட்டும் சார்.  ஒண்ணு கேப்பேன் செய்வீங்களா ?”

“என்ன ? டெல் மீ”

“இப்போ ஏதோ கம்ப்யூட்டர் டிப்ளோமா கிளாஸ் பத்தி பேசிக்கிட்டு இருந்தீங்களே” சுப்பையா இழுத்தார்.

“எஸ். சம்மர்ல ஆரம்பிக்கிறோம். அதுக்கென்ன இப்போ ? ஓ !! புரியுது. அந்தக் கோர்சை நான் டீச் பண்ண வரட்டுமானு கேக்கப் போறீங்களா… ஹ.. ஹா ?” என்று உரக்கச் சிரித்தார்.

“நோ சார். ஐ வான்ட் டு என்ரோல் ஆஸ் எ ஸ்டூடண்ட்”

“வ்வ்வ்வ்வாட் ?” ஹெச்செம் முகத்தில் அத்தனை அதிர்ச்சி.

“ஆமா சார், முன்ன மாதிரி ஆசிரியரா நான் ஸ்கூலுக்குள்ளே வரக்கூடாதுணு சொல்லிட்டீங்க. என் மீது நீங்க எல்லாரும் வச்சிருந்த அன்பு இப்ப ரொம்பக் கொறஞ்சு போச்சு. சாரி, கொறையலை…சுத்தமா அன்பே இல்லாமப் போச்சு. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்னு சொன்னதெல்லாம் பொய்யா போய்டிச்சு. நான் உள்ள வரக்கூடாதுணு பள்ளிக்கூட கேட் தாழ்ப்பாள் போட்டீங்க.. வாட்ச்மேனை வச்சு உள்ள வராமத் தடுத்தீங்க.. இப்ப நான் மாணவனா  இந்த ஸ்கூல் காம்பவுண்டுக்குள்ளே  வரலாமே சார் !  அதுக்கு எந்தத் தடையும் இருக்காதில்ல ? தயவுசெய்து என்னை அந்த கம்ப்யூட்டர் கோர்சுல ஸ்டூடண்ட்-ஆ சேத்துக்கங்க சார்…. அன்புக்கு தாழ் போட்டீங்க. கல்விக்கு போடாதீங்க சார். கல்விக்கும் உண்டோ அடைக்கும் தாழ் ?” என்று அழுதார் சுப்பையா.

விக்கித்துப் போனார் ஹெச்செம்.

இண்டெர்காமில் ராமகிருஷ்ணனை அழைத்து, “இன்னொரு ஸ்டூடண்ட் கம்ப்யூட்டர் கிளாஸ்-ல சேரப்போறார். மேனேஜ்மெண்ட் கோட்டா. நோ டூஷன் ஃபீஸ். நோ லாப் ஃபீஸ். ஸ்டூடண்ட் பேரு சுப்பையா.. ஆமா நம்ப சுப்பையா சார் தான்”.

[சிகாகோ தமிழ்ச் சங்கம், 2014ஆம் ஆண்டு முன்னின்று நடத்திய, தமிழ்நாடு அறக்கட்டளை (TNF) மாநாட்டு மலருக்காக எழுதி வெளியான எனது தமிழ்ச் சிறுகதை.]

2 thoughts on “கல்விக்கும் உண்டோ அடைக்கும் தாழ் ?

  1. மனதை நெகிழவைத்தது. அற்புதம் சேகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *