Devotion General

கனவிலே வந்த கணநாதன் !

PRESS PLAY BUTTON FOR AUDIO READING

அன்றைய ஞாயிறும் எப்போதும் போலத்தான். சிறப்பான மதிய சாப்பாடு. என் மனைவிக்குத் தெரியாமல், இரண்டாவது தடவையாக, மிளகு கருவேப்பிலைக் குழம்பை ஆங்காங்கே தயிர் சாதத்தில் தாராளமாக ஊற்றி, அவள் கண் படாமல் எடுத்து வந்து, மூக்குப் பிடிக்க சாப்பிட்டேன். பிறகு வழக்கத்தை மாற்றாமல், சோஃபாவில், கால் நீட்டி, IPTV ஆன் செய்ததும் உடனே காட்டியது, ராஜ் டிவியில் ஏதோ ஒரு ராமராஜன் திரைப்படம்.

சில நொடிகளில், ஒரு மயக்க நிலை தூக்கம், கண்களைக் கட்டிக் கொண்டது. சாப்பிடும்போது இருந்த விழிப்பு நிலை, எந்தக் கணத்தில், இப்படி ஒரு தூக்கமாக மாறியது என்று சொல்லத் தெரியவில்லை. நித்திரா தேவியை என்னிடம் அன்பாக அழைத்து வந்தது, சாப்பாடா, சோஃபாவா, ராமராஜனா இல்லை, எல்லாம் கலந்த கலவையா என்று பட்டிமன்றம் நடத்தலாம்.

அந்த ஆழ்ந்த மயக்கத்தில் இருக்கும்போதுதான், கனவும் வந்தது, அதில் நம்பிக்கை தரும், தும்பிக்கை கணபதியும் வந்தார்.

“என்னப்பா, என்னைக் கண்டுக்கவே இல்லை !” என்று, சிறிய கண்களால் முழித்துப் பார்த்து, மிரட்டினார்.

“பிள்ளையாரப்பா, நமஸ்காரம். நமஸ்காரம். என்ன சொல்ல வருகிறாய் ? நீ தானே என்னைப் போன்ற பக்தனைக் கண்டுக்கணும்.”

“கடந்த வாரம், கிருஷ்ண ஜெயந்திக்காக கண்ணனுக்கு ஒரு ப்ளாக் போஸ்ட் போட்டாய். அடுத்ததாக, விநாயகர் சதுர்த்தி வருகிறதே, எனக்காக என்ன போட்டாய்?”

“ஆஹா! ஆமாம், ஆமாம், ஆனை முகத்தானே! சுத்தமாக ஐடியாவே இல்லை”, என்று சொல்லி தலையைச் சொறிந்தேன்.

“நீயும் வர வர ஜென்-Z மாதிரி ஆகி வருகிறாய். எல்லாத்துலயும், அவசரம், அலட்சியம், மறதி. கொஞ்சம் கூட மரியாதையும் இல்லை.”

என்னது ? ஜென்-Z யா ? நானோ என்னை Zen குரு மாதிரியல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன். இப்படி சொல்லிவிட்டாரே !

“மன்னிக்கணும் மகாகணபதி ! தங்களுக்கு இல்லாத மரியாதையா. எதைச் செய்யப் போனாலும், பிள்ளையார் சுழி போட்டுத்தானே ஆரம்பிக்கிறேன். மேலும் என் மனைவியும், எல்லாவற்றுக்கும் உனக்கு கொழுக்கட்டை நைவேத்தியம் பண்ணுகிறாளே ! போன வாரம் கூட, அவள் அரைச்ச மாவுல, இட்லி புஸு புஸுனு உன் தொப்பை மாதிரி குண்டா வரணும்னு உன்னை வேண்டிண்டாளே ! அதுக்காக ஒனக்கு கொழக்கட்டை நைவேத்தியம் பண்ணினாளே….”

“அடச்சே நிறுத்து. அல்ப கொழக்கட்டைக்கு, அத்தனாம் பெரிய வரம்லாம் தரணுமா, என்ன ?”

“இல்ல பிள்ளையாரப்பா ! உனக்குத்தான் சிம்பிளா அருகம்புல், சின்னதா கொழக்கட்டை கொடுத்தாலே போறுமே. அள்ளி அள்ளி அருள் தருவாயே….”

“மூடா ! அதெல்லாம் அந்தக் காலம். ஆர்கானிக் அருகம்புல்லோ, ஆர்கானிக் அரிசியோ எதுவும் இப்போ இல்லை ! எல்லாமே கலப்படம்”

“கருணா மூர்த்தியே,  ஒனக்கு ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசறியே. இது கலிகாலம் இல்லையா ? கலப்படம், கபடம் எல்லாம் தானே இருக்கும். இதுக்கெல்லாம் கோச்சுக்கலாமா ?”

“அது சரி, புத்திசாலித்தனமா பதில் சொல்றியாக்கும் ! சரி, இதுக்கு என்ன சொல்லப் போற ? எப்பப் பாத்தாலும் என் தம்பியைப் பத்தியே எழுதற ! என்னைப் பத்தி எதாவது எழுதினியா ?”

“ஸ்வாமி, உன் லிட்டில் ப்ரதர் முருகனைச் சொல்றியா ? அவர் தானே கலியுகத் தெய்வம். கலிகாலத்துல காரியம் நடக்கணும்னா, அவரைத்தானே முக்கியமா கவனிக்கணும். ஆனாலும், உன்னை வணங்கினதுக்கு அப்புறம் தானே உன் தம்பி, முருகனையோ, மத்த சாமிகளையோ நாங்க வணங்கறோம், பூஜை பண்றோம். தெரியாத மாதிரி கேட்கலாமா ?”

“அது ஏதோ formality-க்கு பண்றீங்கப்பா ! எக்ஸ்க்ளூசிவா என்ன பண்றீங்க ?”

“இல்லை ஆண்டவனே ! சதுர்த்திக்கு சதுர்த்தி, உன்னை களிமண்ணுல செதுக்கி, பெருசு பெருசா பூஜையெல்லாம் பண்றோமே ! அது உனக்கே உனக்கான, எக்ஸ்க்ளூசிவ் பூஜைதானே, ஐங்கரனே! “

“களிமண்லயும் கலப்படம் பண்றீங்களேடா ! யார் கேட்டா, எனக்கு பெயிண்ட் அடிக்கச் சொல்லி? கண்ணு, மூக்கு, உடம்பு எல்லாம் அந்தப் பத்து நாளும் எரியுது. கடைசில, விசர்ஜன் பண்றேன்னு, கடல் தண்ணிலே போட்டு உடைக்கிறீங்க. உப்புத் தண்ணி பட்டு, உடம்பெல்லாம் அரிக்கிறது.”

“மன்னிக்கணும், மயூரேசா ! என்ன சொல்றதுன்னு தெரிலே” என்று அசடு வழிய நின்றேன்.

“சரி அது போகட்டும். இந்த வருஷ சதுர்த்திக்கு என்னைப் பத்தி எதாவது எழுது.”

“ஏகதந்தா, என்ன சொல்கிறாய் ? உன்னைப் பற்றி நான் எழுதுவதா ? எனக்கு என்ன தெரியும்? இந்தப் பிரபஞ்சத்தின் முதல் எழுத்தாளரே நீர் தானே?”

“என்ன சொல்ல வருகிறாய் ?”

“ஒரு தந்தத்தை ஒடித்து, மகாபாரதம் எழுதிய மாபெரும் எழுத்தாளர் அல்லவா தாங்கள் ? அருணகிரிநாதரே, உம்மைப் பற்றி முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே, என்று தானே சொல்கிறார் ? அதாவது, இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ்க் கூறுகளையும், அவற்றின் சிறப்புகளையும், மலைகளில் முதன்மையான மேரு மலையில், முதல் முதலாக எழுதியவன் நீதானே! உன்னைப் பற்றி, இந்த அற்பன் என்ன எழுதுவது ? எனக்கு என்ன தெரியும் ?”

சத்தமான சிரிப்பு அவரிடம். பிறகு அவரே, “சரி எதாவது என்னப் பற்றி ஸ்லோகம் சொல்லு”.

சின்ன வயதில் என் பெற்றோர் சொல்லிக் கொடுத்த, பாலும் தெளிதேனும், பாகும் பருப்பும் என்று தொடங்கும் பாடலைச் சொன்னேன்.

“நிறுத்து ! இதென்ன ? நீ என்ன குழந்தையா ? எப்பப் பாத்தாலும், இந்தப் பாட்டையே சொல்லிண்டு இருக்க. சொல்றியே தவிர, இந்த மாதிரி எதுவும் செய்யவும் மாட்டேங்கற ! பால் கொடுக்கிற, ஆனா, தேன், பாகு, பருப்பு இதெல்லாம் தர மாட்டேங்கிற. சொல்றது ஒண்ணு, செய்யறது ஒண்ணா இருக்கே !”

நானும் அசடு வழிந்து கொண்டே, “மன்னிச்சுக்கோ மங்கள மஹோதரா. வேணும்னா, உன்னோட 16 நாமங்களையும் வரிசையா சொல்லட்டுமா ?” என்று இளித்துக் கொண்டே கேட்டேன்.

“ஓஹோ! சமாளிக்கப் பார்க்கிறியா… பேஷ்.. பேஷ்…விஷ்ணுவுக்கு மட்டும் ஆயிரம் நாமம் சொல்ற, எனக்கு மட்டும் பதினாறா ?” என்றார்.

“பால கணபதியே ! பெருமாள் லேசுல வரமாட்டார், படுத்துண்டே இருக்கார் இல்லியா, அதுனால, அவரை ஆயிரம் நாமம் சொல்லிக் கூப்பிட்டாத்தான், போனாப் போறதுனு எட்டிப் பார்ப்பார். ஆனால், நீரோ ஒரு 16 நாமம் சொல்றதுக்குள்ள வந்துடுவீர்.”, என்று ஏகப்பட்ட ஐஸை அவர் தலையில் வைத்தேன்.

மிகவும் மகிழ்ந்தவராய், “சரி. சரி..போய்ட்டுப் போறது..எங்கே, என்னோட 16 பேரையும் கரெக்டா சொல்லு பார்ப்போம்.” என்று காலை நீட்டி, ஒரு கையால் தன் யானைத் தலையத் தாங்கிக் கொண்டு, ஒய்யாரமாகப் படுத்துக் கொண்டார்.

சர்வ ஜாக்கிரதையாக, அத்தனை பெயரையும் நினைவடுக்கிலிருந்து எடுத்து, தொண்டையக் கணைத்துக் கொண்டு,

“சுமுகா, ஏகதந்தா, கபிலா, கஜகர்ணா, லம்போதரா, விகடா, விக்னராஜா, கணாதிபதி, தூமகேது, கணாத்ய, பாலச்சந்திர, கஜானன, வக்ரதுண்ட, சூர்பகர்ண, ஹேரம்ப, ஸ்கந்தபூர்வஜ”,  என்று 16 நாமங்களையும் வரிசையாகச் சொன்னேன்.

“அடடடே! கரெக்டாச் சொல்லிட்டியே”, என்று கூறியபடியே, தன் தும்பிக்கையால் ஒரு மோதகத்தை எடுத்து என்னிடம் போட்டார்.

இதைச் சாக்காக வைத்துக் கொண்டு, “பிள்ளையாரே, எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு. கேட்கலாமா ?” என்றேன்.

“கேளு..கேளு”, என்றார்.

“அந்த ஞானப் பழத்தை முருகனை ஏமாற்றித்தானே, உன் பேரண்ட்சை சுத்தி வந்து வாங்கிக் கொண்டாய் ?” என்றேன்.

பெரிதாகச் சிரித்த பெரிய கணபதி, “அடேய். அது பழம் இல்லையடா. உள்ளே சுற்றுவதாகச் சொன்னது சூட்சும ஞானம். அதாவது அகப்பொருளை அறிவது. என் தம்பி முருகன் புறவுலகைச் சுற்றியது உலக அறிவுக்காக. புறப்பொருளை அறிவதற்காக. வாழ்க்கைக்கு இரண்டு அறிவும் வேண்டும். அதை உணர்த்தவே, நாங்கள் இந்த நாடகத்தை நடத்தினோம். இது புரியாமல், அண்ணன் ஆம்ர பலத்தை அபேஸ் பண்ணிட்டான். தம்பி ஏமாந்துட்டான்னு எல்லாரும் உளர்ரீங்க ” என்றார்.

ஆஹா, என்ன ஒரு தத்துவ விளக்கம். இத்தனைநாள், இந்த விஷயம் புரியாமல் இருந்துட்டோமே ! சில நொடிகளுக்குப் பின் அடுத்த கேள்வி கேட்டேன்.

“பிள்ளையாரே! உங்களுக்கு காது ஏன் இவ்ளோ பெருசா இருக்கு ?”

“அது உங்க எல்லா gossip-களையும், drama-க்களும் கேட்டு ப்ராஸஸ் பண்ணும் ஸ்பெஷல் antenna!”.

“ஓஹோ…காது தான் பெருசு.. வயிறும் ரொம்பப் பெருசா இருக்கே, ஏன் ?”

“அடேய், அது வயிறு இல்லடா ! Stress Absorber! நீங்க எவ்வளவு work pressure, neighbor என்று என்னிடம் என்ன complaint பண்ணினாலும் நான் அதில் தான் digest-செய்து கொள்கிறேன்”.

“அப்போ, நாங்க கொடுக்கற கொழக்கட்டையெல்லாம் எந்த வயிறுக்குப் போகுது ?” என்று விசனப்பட்டேன்.

அதற்கு விநாயகர் ரொம்பக் கூலாக, “அதுவும் அதே வயிற்றுக்குத்தாண்டா போறது. நீங்க முன்னாடி கொடுத்த அஜீரணத்துக்கு, இந்தக் கொழக்கட்டைதாண்டா capsule”, என்றார் பெரிதாகச் சிரித்துக் கொண்டே. பிறகு “வேற கேள்வி இருக்கா ?” என்றார்.

என் களிமண் மண்டைக்கு எதுவும் தோன்றவில்லையாதலால், “வேற ஒண்ணும் இல்லை விநாயகா” என்றேன்.

“சரி, அப்ப ஒண்ணு பண்ணு. இப்போ நமக்குள் நடந்த இந்த கான்வர்சேஷனையே ஒரு ப்ளாக்கா எழுதிடேன்” என்றார்.

“இதையா ? இதெல்லாம் யாரு படிப்பா ? இதுக்கெல்லாம் லைக், கமெண்ட்லாம் ஒண்ணு கூட வராது!”

“லைக், கமெண்ட் எதிர்பார்த்து என்னத்துக்கு எழுதற ? பலனை எதிர்பார்க்கதே, கடமையைச் செய்-அப்படினு கண்ணன் சொன்னதா, நீ தானே போன ப்ளாக் போஸ்ட்டில் பெருமையாப் போட்ட ! இப்ப அதையே contradict பண்ற ?” என்று கோபத்துடன் கேட்டார் கணபதி !

“மன்னிக்க வேண்டும் மகா கணபதி. ஒரு சந்தேகம்…. இந்த அற்பன் மீது ஏன் இவ்வளவு கோபம்?” என்றேன் அழுகையைக் காட்டிக் கொள்ளாமல்.

“அடேய், என்னை நன்றாகப் பார் !” என்றார் மகாகணபதி. அப்போது அதுவரை மெகா சைஸ் மகாகணபதியாக இருந்தவ்ன், மினி சைஸ் குழந்தை முருகனாகக் காட்சி தந்தான்.

“ஸ்வாமி.. என்ன, என்ன.. இது வினோதம்… விளையாட்டு ?” என்றேன் ஆச்சரியம் தாங்காமல்.

“நான் முருகன் தான். விநாயகர் வேடத்தில் வந்து, என் சகோதரனுக்காக canvas செய்தேன்” என்றார்.

“அதற்காக இப்படிப் பண்ணலாமா ? தில்லு முல்லு படத்தில் விநாயகர், முருகன் வேடம் போட்டதாக, தேங்காய் சீனிவாசனிடம் கடைசிக் காட்சியில் சொல்வாரே, அதே போல் எனக்கும் இந்த திருவிளையாடலா ?”

“ஆம், அதில் விநாயகர், முருகனாக வந்தார். அதை உல்ட்டாவாக ரீமிக்ஸ் பண்ணி, முருகனாகிய் நான்,விநாயகராக உன் கனவில் வந்தேன்” என்றார்.

கனவிலிருந்து கண் விழித்தேன். அதே ராஜ் டிவியில், இப்போது தில்லு முல்லு படத்தின் கடைசிக்காட்சி, தேங்காய் சீனிவாசனிடம் முருகனாக வேடம் போட்ட விநாயகர் பேசும் காட்சி. (video clip from Google Search)

இதோ கணபதி / முருகன் ஆணைப்படி ப்ளாக் போஸ்ட் செய்துவிட்டேன் ! படிப்பதும், பகிர்வதும், கமெண்ட் அடிப்பதும் அவரவர் விருப்பம். இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

HAPPY VINAYAKA CHATHURTHI TO ALL

3 thoughts on “கனவிலே வந்த கணநாதன் !

  1. பிரமாதம். முருகனே உங்கள் வாயில் கொழுக்கட்டை வைத்து விட்டாரே. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *