ப்ரோச்சேவாரெவருரா
தென்னகத் திரை உலகம் 79-80களில் மாபெரும் மாற்றம் கண்டது. பாரதிராஜா, ருத்ரையா, பாலுமகேந்திரா, மகேந்திரன், பாக்கியராஜ் ராஜேந்தர், என்று பலர் வித விதமாகத் திரை விருந்து படைத்தனர். கூடவே அவர்கள் படங்களில் இளையராஜாவின் முதல் தர இசை.
அந்தக் கால கட்டங்களில், 32 இன்ச் பெல்பாட்டம் பேண்ட் அணியத் தொடங்கிய, கல்லூரிகளில் கால் வைக்கும் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு இந்தப் படங்கள் எல்லாம் இன்ப போதை. கல்லூரி வகுப்புகளைக் கட் செய்துவிட்டு இந்தப் படங்களை மாட்டினி ஷோக்களிலும், செகண்ட்ஷோ எனப்படும் இரவு 10.30 மணிக் காட்சிகளிலும் பார்க்கும் சுகம் எக்காலத்திலும் திரும்பக் கிடைக்காதது.
இந்தச் சமயத்தில்தான், புயலைக் கிளப்பிய தெலுங்குப் படமான “சங்கராபரணம்” வந்தது. முக்கால்வாசி புதிய நடிகர்கள். கே.விஸ்வனாத் எழுதி இயக்கிய படம். இளையராஜாவின் எழுச்சியால், ஏறக்குறைய மறக்கடிக்கப்பட்ட திரை இசைத்திலகம் கே.வி.மஹாதேவன் இசையமைப்பில் வெளிவந்த திரைப்படம். தமிழ்நாட்டின் எல்லாத் திரையரங்குகளிலும் கிட்டத்தட்ட ஒரு வருடம் தொடர்ந்து ஓடிய திரைப்படம். தமிழர்கள் கொண்டாடிய தெலுங்கு மொழிப் படம்.
இந்தப் படத்தின் சிறப்பு, அதன் திரைக்கதை, இசை, பாடல்கள், பாத்திரப் படைப்பு, யதார்த்த நடிப்பு, வித்தியாச ஒளிப்பதிவு, அனாவசிய செருகலோ உருவலோ இல்லாத கச்சிதமான எடிட்டிங்.
படத்தின் இசைத் தட்டுக்கள் விற்பனை தரத்தில் முதல் இடத்தைப் பெற்றிருந்தது. முழுக்க முழுக்க மென்மைப் படுத்தப்பட்ட கர்னாடக இசையில் பாலசுப்ரமணியன், ஜானகி, வாணிஜெயராம் குரல்களில். இந்தப் பாடல்கள் ஒலிக்காத காபி, டீ-கடைகளே இல்லை.
திருச்சியில், கலையரங்கம் என்ற முற்றிலும் குளிரூட்டப்பட்ட திரை அரங்கத்தை அந்தச் சமயத்தில் புதிதாகத் திறந்திருந்தனர். அதில் தான் இந்தப் படம் திரையிடப்பட்டது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும், கல்லூரி நாட்களில், வகுப்புகளைக் கட் செய்து விட்டும் கூட்டம் கூட்டமாகச் சென்று பல முறை இப்படத்தைக் கண்டு களித்தோம்,
பிறகு எங்கள் கல்லூரியில் (செயிண்ட் ஜோசஃப், திருச்சி) இசைக்குழு ஆரம்பித்தபோது, கல்லூரிகளுக் கிடையேயான இசைப் போட்டிகளில், சங்கராபரணம் பாட்டுக்களை இசைத்துப் பரிசுகளைத் தட்டிச் சென்றோம். அதே கல்லூரியில் வேறு மேஜர் சப்ஜெக்ட்டில் படித்துக் கொண்டிருந்த பத்ரியும், முரளியும், சங்கராபரணம் பாடல்களைப் பாட, மற்ற நண்பர்கள் கிடார், கீபோர்ட் என்று இசைக்க, எனக்கு மிருதங்கம், தபலா வாசிக்க வாய்ப்பு கிடைத்தது.
பத்ரி, ஸ்பிபி குரலிலும், முரளி, பெண்குரலிலும் (வாணி, ஜானகி) அற்புதமாகப் பாடுவார்கள் (இப்போ எங்கேடா இருக்கீங்க ?). ஒவ்வொரு போட்டியிலும் எங்கள் குழு பரிசை வென்றுவிடும். அதிலும் “ப்ரோசேவா” என்ற கமாஸ் ராகப் பாடல் எங்கள் முத்திரை.
பத்ரி, பல்லவியின் முதல்வரியை முடித்ததும், முரளி, “ஓஹோ” என்று பெண் குரலில் சொல்ல, அங்கு ஆரம்பிக்கும் அப்ளாஸ் கடைசி வரை தொடரும். “பாசுர முகக்கரி ராஜுனு ப்ரோசித”வில் பத்ரி, பாலுவின் குரலைக் கொண்டுவருவான். துரித கால ஸ்வரங்களை வாணி ஜெயராம் குரலில் பாடும்போது, முரளிக்கு, கைதட்டல்களும், விசில்களும் விண்ணைப் பிளக்கும்.
அந்த ஸ்வரங்கள், பத்ரி, முரளிக்கு மட்டும் இல்லை, உடன் வாசிக்கும் எங்கள் எல்லோருக்கும் மனனம் ஆகியிருந்தது. எங்கள் கல்லூரி இசைக்குழுவில் ட்ரம்ஸ் வாசிக்கும் எனது ஆங்கிலோ-இந்திய நண்பன் ராக்ஸி, அந்த ஸ்வரங்களை ஆங்கிலோ-இந்தியக் குரலில் தடுமாறிப் பாடுவதைக் கேட்பது சுகானுபவம்.
ஏறத்தாழ எல்லா சங்கராபரணப் பாடல்களையும் போட்டிகளிலும், இசை நிகழ்ச்சிகளிலும் பாடி பாராட்டுப் பெற்றிருக்கிறோம். மற்ற கல்லூரிகளிலிருந்து போட்டிக்கு வந்தவர்கள், எங்களைப் பார்த்து, “வந்திட்டாங்கடா பாகவதர் க்ரூப்பு. சங்கராபரணம் பாடியே நம்ப சங்கை அறுத்த்ருவாங்க” என்று கலாய்ப்பார்கள்.
கடைசியாக, திருச்சி ஆர்.ஈ.சி என்ற கல்லூரியில் (இப்போது பெயர் மாறி விட்டது), ஃபெஸ்ட்டம்பர் இசை விழாவில் பாடினோம். எங்கள் கல்லூரி, சினிமா, கர்னாடிக், வெஸ்டர்ன் என்ற மூன்று பிரிவிலும் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளைப் பெற்றது. சினிமாப் பிரிவில் வழக்கம்போல “ப்ரோச்சேவா”, பெரும் பாராட்டுக்களைப் பெற்றது. அந்த வருடம் சென்னை எதிராஜ் கல்லூரி வெஸ்டர்ன் ம்யூசிக்கில் முதல் பரிசு வென்றது. அதைப் பாடியவர் லதா (இப்போதைய லதா ரஜினிகாந்த்).
எங்கள் கல்லூரியே மூன்று கேட்டகரிகளிலும் வென்றதால், ஒவரால் பெஸ்ட் ம்யூசிக் ட்ராஃபியை, அவ்விழாவிற்குத் தலைமை தாங்கிய எழுத்தாளர் சுஜாதா கையால், செயிண்ட் ஜோசப் கல்லூரி ஃபைன் ஆர்ட்ஸ் செக்ரடரி என்ற வகையில் என்னிடம் அளிக்கப்பட்டது. என் ஆதர்ச எழுத்தாளரை அருகில் கண்டு, கை குலுக்கி, பரிசு வாங்கியது எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.
இன்றும், என்னால் அந்த “ப்ரோசாவா” ஸ்வரங்களைச் சொல்ல முடியும், பிற்காலத்தில் என் நான்கு வயது மகளை முதுகில் யானை ஏற்றிக் கொண்டு, இந்த ஸ்வரங்களுடன் பாடலை எனக்குத் தெரிந்த அளவில் சொல்லிக் கொடுக்க, அவளும் அதை அந்த வயதில் ஃப்ளோரிடா மற்றும் சிகாகோ தமிழ் சங்கங்களில் மழலையில் முழுதாய்ப் பாடி பாராட்டுப் பெற்றாள். உண்மையான கலை, காலம் கடந்து வாழும் என்பதன் சாட்சி !
அந்தப் படத்தை உருவாக்கிய முக்கியமான பலர் நம்மைப் பிரிந்து விட்டனர் (கே.வி.மகாதேவன், கே.விஸ்வநாத், எஸ்பிபி, வாணிஜெயராம்). அதிலும் இந்தப் படம் வெளியான (1980, பிப்ரவரி 2) அதே நாளில், அந்தப் படத்தின் சூத்திரதாரி கே.விஸ்வநாத் 2023 பிப்ரவரி 2ல் மறைவது, கலையும், கலைஞனும் ஒன்றென உரத்துச் சொல்லும் உண்மை.
1980ல் ஆரம்பித்த சங்கராபரணம் ஒரு முடிவில்லாத கலைப்பயணம். படமும், பாடல்களும், பங்கு பெற்ற கலைஞர்களின் பங்களிப்பும், இந்த யுகம் உள்ள வரை நீடிக்கும். “ப்ரோச்சேவா எவருரா” என்பதற்கு, யார் காப்பாற்றுவார்கள் என்று அர்த்தமாம். உண்மையான கலைக்கு தன்னையும் தன்னை உருவாக்கிய கலைஞர்களையும் காப்பாற்றிக் கொள்ளத் தெரியும் !