பக்திப் பயணம்-9
மூன்று அம்மனும் மூன்று முடிச்சும்
PRESS PLAY BUTTON FOR AUDIO READING
இன்று வெள்ளிக்கிழமை, ஜூன் 10. எங்களின் முப்பதாவது திருமணநாள். சீக்கிரம் எழுந்து தயாராகி, பஞ்சக்கச்சம், மடிசார் உடைகள் அணிந்து பானு, ரவி அத்திம்பேர், சந்திரிகா சகிதம் சமயபுரம் கோவிலுக்குச் செல்ல ஆரம்பித்தோம். இன்று, மாலதி புதிய மாங்கல்யம் அணிந்து கொண்டு, பழைய மாங்கல்யத்தை, சமயபுரம் மாரியம்மன் உண்டியலில் போடுவதாக வேண்டுதல்.
சமயபுரத்துக்குச் சென்றபோது காலை சுமார் ஆறேகால் ஆகியிருந்தது. அன்று சுப முகூர்த்த நாள். நிறையக் கல்யாண கோஷ்டிகள் இருந்தனர். நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு, வரிசையில் நின்றோம். எங்களுக்கு முன்னும், பின்னும் கல்யாண கோஷ்டிகள். சந்நிதியை நெருங்கியதும், எங்களை முன்னே வரச் சொன்னார் அர்ச்சகர்.
கருவறையில் அம்மன் ஜகஜ்ஜோதியாய் வீற்றிருந்தாள். வா, வா என்று அழைக்கும் வற்றாக் கருணை கொண்ட அதே அருட் பார்வை. அர்ச்சகரிடம் விஷயத்தைச் சொன்னோம். முந்தைய தினம், கடம்பங்குடி குலதெய்வம் கோவிலில் மங்கல நாண் கோர்த்து எடுத்து வந்திருந்த புது மாங்கல்யத்தை, அர்ச்சகரிடம் கொடுத்தோம். அவரும் அதை எடுத்துச் சென்று, சகல சௌபாக்கியங்களும் தந்து கொண்டிருக்கும், சமயபுரத்தாளிடம் சமர்ப்பித்தார். மங்கல மந்திரங்களை உரக்கச் சொல்லி அர்ச்சனைகள் செய்தார். அவள் அணிந்திருந்த மாலைகளை எடுத்து வந்து எங்களிடம் கொடுத்து, மாலை மாற்றிக் கொள்ளச் சொன்னார். அம்மனின் நேரெதிரே நிற்கச் சொல்லி, அந்தப் புது மாங்கல்யத்தை என்னிடம் கொடுத்து கட்டச் சொன்னார்.
மாப்பிள்ளை சார்பாக, நாத்தனார் பானு, மாமா(அத்திம்பேர்) ரவி இருக்க, மணப்பெண் சார்பாக, மைத்துனி சந்திரிகா உடனிருக்க, சமயபுரத்தாளின் நேரெதிர் அருட்பார்வையில், சுபமுகூர்த்த வேளையில் புது மாங்கல்யம், மணப்பெண் கழுத்தில் ஏறியது. அம்மனின் அருட் குங்குமம் நெற்றியில் வைக்கப்பட்டது. கோவில் மணி ஒலித்தது. அறுபடை வீட்டு அன்புக் குமாரர்களின் அருளாசிகள் அவ்விடத்தில் சீராக நிறைந்தது.
மனம் குளிர ப்ரார்த்தனை செய்து செய்து கொண்டோம். பழைய மாங்கல்யத்தை, மாலதியும், அருகிலிருந்த உண்டியலில் பக்தியுடன் இட்டாள். நெடு நாள் ப்ரார்த்தனையை அம்பாள் தன் காருண்யத்தால் இனிதாக நிறைவேற்றித் தந்தாள்.
சந்தோஷமாக ப்ரகாரத்துள் நுழைந்தபோது, எதிரே வந்த மற்றொரு தம்பதி, எங்களை விழுந்து வணங்க முயல, வேண்டாம் என்று தடுத்தோம். அந்தப் பெண்மணியின் திருமாங்கல்யத்தில் குங்குமம் வைத்து, ஆசி வழங்கச் சொன்னார்கள். சிலிர்த்துப் போனோம். மேலும், மற்ற தம்பதியரும், அங்கிருந்த கோவில் ஊழியர்களும், வந்திருந்த பக்தர்களும், நாங்கள் செல்லும் இடமெல்லாம், இவ்வாறு எங்களை வாழ்த்தி, வணங்கி ஆசி கேட்டனர்.
இந்த கௌரவம் அடைய, நாங்கள் என்ன பேறு செய்தோம் ? இது எங்களுக்கானது அல்ல. எங்களின் பெருமையும் அல்ல. அம்மன் எங்கள் மீது பூசிய அருளே, அவர்களை எங்களிடம் ஆசி கேட்கத் தூண்டியது. இதனை எங்கள் வாழ்வின் மகத்தான தருணம், ஆசிர்வதிக்கப்பட்ட நன்னாள் என்று உணர்ந்தது உண்மையே !!
சமயபுரத்தாளிடம் விடை பெற்றுக் கொண்டு, அடுத்த அம்மனான அகிலாண்டேஸ்வரியை தரிசிக்க திருவானைக்காவல் கோவிலுக்குச் சென்றோம்.
திருவானைக்கா கோவிலில் நுழைந்ததும், கம்பீரமான கோவில் யானை வரவேற்றது. அதன் அழகை ரசித்து விட்டு, கோவிலுக்குள்ளே அம்பாள் சந்நிதிக்குள் நுழைந்தோம்.
அகிலாண்டேஸ்வரி சந்நிதிக்கு எதிரில் இருக்கும் பிருமாண்ட பிள்ளையாரை வணங்கி வலம் வந்தபின், அம்பாள் சந்நிதிக்கு நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே வரிசையில் நின்றோம். அம்பாள், குத்து விளக்கு ஜோதியில் சகல அம்சங்களுடன் இருந்தாள். ஆதி சங்கரர் அமைத்த ஶ்ரீசக்கர தடாகங்களை அணிந்து, சாந்த ஸ்வரூபிணியாகக் காட்சி தந்தாள்.
அர்ச்சகரும், எங்களை அம்மனுக்கு எதிரே நேராக நிற்கச் சொல்லி, அர்ச்சனை, ஆரத்திகளை அம்பாளுக்கு விமரிசையாகச் செய்து, மாலைகளும், பிரசாதங்களும் அளித்தார். அகிலாண்டேசுவரியை வலம் வந்து நமஸ்கரித்தபின், ஜம்புகேஸ்வரர் சந்நிதிக்குச் சென்றோம். அங்கும் சுற்றி வந்து தரிசனம் செய்துவிட்டு, திருப்தியுடன் வெளியில் வந்தோம்.
திருவானைக்காவலை விட்டு வெளியில் வந்ததும், விபூதிப் பிரகாரத்தில் இடது புறம் இருக்கிறது பார்த்தசாரதி விலாஸ் ஓட்டல். பொங்கலுக்கும், நெய் ரோஸ்ட் தோசைக்கும் பெயர் பெற்றது. அங்கு நாங்கள் ஐவரும் சென்று, ஸ்பெஷல் நெய் ரோஸ்ட், வடை, காபி சாப்பிட்டோம்.
பிறகு அறைக்குத் திரும்பினோம். மதிய உணவுக்குப் பின் அத்திம்பேரும், பானுவும் அன்று தஞ்சை, கும்பகோணம் செல்வதாக ப்ளான். ஓய்வு எடுத்துக் கொண்டபின், மதியம் கரூர் ரோடில் இருக்கும் அடையார் ஆனந்தபவனுக்கு சாப்பிடச் சென்றோம்.
சாப்பிட்டு, அறைக்குத் திரும்பியதும், பானுவும், அத்திம்பேரும் ஒரு வாடகைக் கார் பிடித்து, தஞ்சாவூர் சென்றனர். அடுத்த நாள் அவர்களை, நாங்கள் திருக்கடையூரில் சந்திப்பதாக ஏற்பாடு. அவர்கள் விடைபெற்றுச் சென்றபின், நாங்கள் மூவரும், அறையில் சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொண்டோம்.
பிற்பகல் நான்கு மணிக்கு மேல் கிளம்பி, ஆண்டார் தெரு முனையில், எப்போதும் செல்லும் கடைக்குச் சென்று, பதினைந்து ரூபாய் காஃபி அருந்திவிட்டு, மூன்றாவது அம்மனான வெக்காளியம்மனை தரிசிக்க உறையூர் சென்றோம். சாலைரோட்டை வழியில் வெட்டிப் போட்டு, தில்லை நகர் வழியாகச் சுற்றிக் கொண்டு செல்லுமாறு, அங்கிருந்த அறிவுப்புப் பலகைகள் சொல்லின. ஒருவாறு உறையூரை அடைந்து, சந்து பொந்து வழியாக வெக்காளி அம்மன் கோவில் வாசலை அடைந்தோம்.
மாலை ஆறு மணிக்குத் தான் சந்நிதி திறக்க இருந்தது. இன்னும் அரை மணி நேரம் இருந்தது. நான், மாலதி, சந்திரிகா மூவரும் ப்ரகாரத்தை மெதுவாக வலம் வந்தோம். இன்னும் சில நாட்களில் அக்கோவிலின் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதால், மண்டபங்களிலும், உள் கோபுரங்களிலும் வர்ணம் தீட்டும் பணிகள் நடந்து கொண்டிருந்தன. சாரம் கட்டிய பலகைகளில் நின்று கொண்டு, ஒரு கையில் வர்ண வாளியும், ஒரு கையில் ப்ரஷும் வைத்து, தலையைத் தூக்கி, உட்புறக் கூரையில், ஓவியங்கள் தீட்டிக் கொண்டிருந்தனர். மேலே தலையைத் தூக்கி வேடிக்கை பார்த்த எங்களுக்கு, சில நொடிகளிலே கழுத்து வலித்தது. எப்படித்தான் நாள் பூராவும் இந்த நிலையிலே நின்று கொண்டு இப்பணிகளைச் செய்கிறார்களோ ! சுற்றி வந்தபோது, உட் கோபுர பொம்மைகளுக்கு வர்ணப் பூச்சு செய்து கொண்டிருந்தார்கள். வெக்காளி அம்மனுக்கு கோபுரம் கிடையாது. திறந்த வெளி வானமே அவள் கூரை.
சரியாக ஆறு மணிக்கு சந்நிதி திறந்ததும், முன் வரிசையில், அம்பாளுக்கு வெகு அருகில் நின்றோம். வலதுகால் மடித்து, இடது காலை ஊன்றிய சுகாசன அமர்வு நிலையில் நல்ல ஆஜானுபாகுவான தோற்றத்தில் வெக்காளி இருந்தாள். சூலம், பாசம் உடுக்கை அணிந்து, கால்களில் அசுரனை மிதித்துக் கொண்டிருக்கும் கோலம். எலுமிச்சை, மற்றும் வித விதமான மலர் மாலைகள் அணிந்திருந்தாள். நல்ல சாம்பிராணி வாசம் சூழ்ந்திருந்தது.
பூசாரிகள் அர்ச்சனை, ஆரத்தி காட்டினர். நல்ல திருப்தியான தரிசனம். ப்ரசாதங்களை வாங்கிக் கொண்டு, ப்ரகாரத்தில், அடிப் பிரதட்சிணம் செய்து விட்டு, வெளியே வந்தோம். திரும்பி வரும் வழியில் சாலைப் பணிக்காக, தெருக்கள் அடைக்கப்பட்டிருந்ததால், சுற்றிக் கொண்டு, குடமுருட்டி ரயில் நிலையம் வழியாக, கரூர் ரோடு வந்து, எங்கள் ஹோட்டலுக்கு வந்தோம்.
என் கல்லூரிக் கால நண்பர்களை அன்று மாலை சந்திப்பதாகத் திட்டம். ரகோத்தமன், சாய்சுப்பிரமணியன், விஜயகுமார் வந்திருந்தனர். எங்கள் ஹோட்டல் மாடியிலேயே, இருந்த ரூஃப் கார்டன் ரெஸ்ட்டாரண்டில் அவர்களுடன் கலகலப்பாகப் பேசிக் கொண்டே இரவு விருந்து உண்டோம். நண்பர்கள் நெடு நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு விடைபெற்றுச் சென்றனர்.
மறுநாள் திருச்சிக்கு விடை கொடுத்து, திருக்கடையூர் சென்று அங்கிருந்து சென்னை செல்ல இருப்பதால், அனந்தேஷ், அந்த நேரத்திலும் எங்களைச் சந்திக்க வந்திருந்தான். ஃப்ரேம் செய்யப்பட்ட தஞ்சாவூர் பெயிண்டிங்கில் இருந்த ஒரு அழகான முருகன் படத்தைப் பரிசாக அளித்தான். அவனுக்கு நன்றி சொல்லி, பொக்கிஷமாக பத்திரப்படுத்தி எடுத்து வந்து, தற்போது பூஜை அறையில் மாட்டி வைத்துள்ளோம்.
மறக்க முடியாத அந்த நாளைத் தந்த இறைவனுக்கு நன்றி சொல்லி, உறங்கச் சென்றோம். மறுநாள் சந்திரிகா, எங்களுடன் வந்த பயணத்தை இனிதே முடித்துக் கொண்டு, பெங்களூருக்குச் செல்கிறார்.
சமயபுரம் தரிசனம் உச்சகட்ட அனுபவம்.
அ ஆ பவனில் சிரித்த முகத்துடன் serve பண்ணிய அம்மணியைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்
ஆம். விட்டுப் போனது என் தவறுதான். அந்தப் பெண்மணி, மஞ்சள் பூசிய சிரித்த முகத்துடன், கேட்டு கேட்டுப் பரிமாறியது சிறப்பு. நமக்கு மட்டும் இல்லாமல், அங்கிருந்த மற்றவர்களுக்கும் அதே விதமான அன்புடன் பாரபட்சமில்லாமல் அளித்த உபசரிப்பால் அன்னபூரணியாய் தோன்றிய அதிசய மாது.
அருமை அருமை. அன்று காலையில் காபி குடிச்ச கதை மிஸ்ஸிங்?
அடேய், அனந்தேஷா, ரகசியத்தை நன்றாகக் காப்பாற்றுகிறாய் போ !