பக்திப் பயணம்-8
பாதம் வைத்த பரமகுரு
PRESS PLAY BUTTON FOR AUDIO READING
அடுத்தநாள் (ஜூன் 9) வியாழன் காலை திருச்சியிலிருந்து, தஞ்சைக்குப் பயணமானோம். முருகனின் ஐந்து படை வீடுகளின் தரிசனத்துக்குப் பின், இன்னும் தரிசிக்காத ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தோம். கூடவே பார்க்க வேண்டிய சில இடங்களும் எங்கள் திட்டத்தில் இருந்தன.
முன்னால் அமர்ந்திருந்த அத்திம்பேர், ட்ரைவரிடம் தஞ்சாவூர் பழைய பஸ்ஸ்டாண்டில் இருக்கும் ஆரியபவனுக்குப் போகச் சொன்னார். வழியில் தஞ்சை பிரகதீஸ்வர ஆலய கோபுரங்களை தரிசித்துக் கொண்டு சென்றோம்.
ஒரு பழைய தஞ்சாவூர் காலத்து வீட்டை ஆரியபவன் ஓட்டல் ஆக்கியிருந்தனர். அங்கிருந்த டேபிள், சேர்களை அழித்து விட்டுப் பார்த்தால், வாசல் வராந்தாவும், கூடமும், தாழ்வாரமும் தெரியும். மேலே சாளரத்திலிருந்த கம்பி வழியாக வெப்பம் இல்லாத சூரிய வெளிச்சம். ஓட்டல் பணியாளர்கள் முக்கால்வாசி அஸாம், பீகார், ஒரிஸாவிலிருந்து வந்தவர்கள்.
தஞ்சை ஆரியபவனில், இட்லி, தோசை, பொங்கல், வடை நன்றாக ருசித்தோம். பிறகு டிகிரி காபி. திருப்தியாக சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்து நேராக சுவாமிமலை நோக்கிச் சென்றோம்.
சுவாமிமலை (திருவேரகம்) கோவில் சிறிய குன்றின் மீது அமைந்த நான்காவது படைவீடு. அறுபது படிகளே கொண்டது. சுவாமிநாதன் என்ற பெயருள்ள மூலவர், தத்துவத்தின் மூலமாக, அருள் தரும் வள்ளலாக எழுந்தருளியுள்ளார். இங்கு எங்களுக்கு மெய்சிலிர்க்கும் அனுபவம் கிடைத்தது உண்மை.
முருகப்பெருமான் சந்நிதியில் நல்ல கூட்டம். கோவில் ஊழியர் ஒருவர் எங்களை அருகில் அழைத்துச் சென்றார். சந்நிதிக்கு முன்னே அபிஷேகத்துக்குப் பணம் கட்டியவர்கள் அமர்ந்திருக்க, இடப்புறம் கம்பிக்குப் பின்னே, நாங்கள் நின்று கொண்டிருந்தோம். அபிஷேகம் முடிந்து, அலங்காரத்துக்கு திரை போட்டார்கள். சிறிது நேரத்துக்குப் பின், எனக்குப் பின்னே வெளியிலிருந்த அர்ச்சகர், பெட்டியிலிருந்து, முருகனின் வெள்ளிக் கவசங்களை எங்களுக்கு அருகில், உள்பக்கம் இருந்த இன்னொரு அர்ச்சகருக்கு, ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுக்க, அவரும் அவற்றை வாங்கி, திரைக்குப் பின்னே அலங்காரம் செய்வதற்கு கொடுத்துக் கொண்டிருந்தார். வெளியில் இருந்தவர், கிரீடம், புஜங்கள், என்று சொல்லி சொல்லி ஒவ்வொரு பாகத்துக்குமான கவசங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
பிறகு முழு உருவத்துக்குமான நீளமான, பெரிய வெள்ளிக்கவசத்தை, எங்கள் இருவர் தலைக்கு மேலாகக் கொடுத்து, “பாத்து வாங்கிக்கோ, உள்ளே ஸ்வாமி பாதம் இருக்கு” என்றார். வாங்கியவரும் சற்று பத்திரமாகக் கையால் தாங்க, எங்கள் தலைக்கு மேலாக சில நொடிகள், அந்தப் பாத கவசங்களை நிறுத்திப் பிடித்துக் கொண்டனர்.
இப்படி, முருகன் எங்கள் தலைமீது தன் பாதம் வைத்து ஆசி வழங்கவே, எனக்கு “ஏது புத்தி அய்யா” என்று தொடங்கும் திருப்புகழில் வரும் “பாதம் வைத்திடையா, நகைத்தவர் கண்கள் காண” என்ற வரி ஞாபகம் வந்து, பக்கத்திலிருந்த மாலதியிடம் இதைக் குறிப்பிட்டதும், எங்கள் உள்ளம் ஆனந்தத்தால், பரவசநிலை அடைந்தது. உச்சகட்ட பக்தி அனுபவம் !!
இந்தப் பாடல் தான், நாங்கள் முதன் முதல் திருப்புகழ் வகுப்புக்குச் சென்றபோது கற்றது. இந்தப் பயணத்தில் முதலில் சென்ற அறுபடைக் கோவிலான, திருத்தணித் தலத்துக்குரிய திருப்புகழும் இதுதான். இப்போது அறுபடைகளில் நிறைவாக தரிசிக்கும், சுவாமிமலையில், இப்பாடலை நாங்கள் பரிபூரணமாக உணர்ந்து கொள்ளும் விதமாக, எங்கள் தலையில் பாதம் வைத்து அந்தப் பரமகுரு அருளியது, எங்களின் பெரும்பாக்கியம்.
எங்கள் தலை மீது நின்ற பாதங்கள், தம் கால்களை அலங்கரிக்க, “இப்ப திருப்தி தானே” என்று கேட்கும் புன்னகைப் பார்வையுடன் சுவாமிநாதன், முழு அலங்காரித்தில் திவ்ய தரிசனக் காட்சி அளித்தான். அர்ச்சனை, ஆராதனைகள் சிறப்புடன் நடக்க, பிரசாதங்களுடன் பிரகாரத்தில் அமர்ந்து, சுவாமிமலை திருப்புகழ் சில பாடினோம்.
வெளியில் வந்து பவண்டோ, லெமன் சோடா, டீ என்று அவரவர் விருப்பத்துக்கு அருந்தியபின், சுவாமிமலையிலிருந்து எங்கள் பயணம் தொடர்ந்தது. மதிய உணவை, கும்பகோணம், மாயவரத்துக்கு இடையில் ஆடுதுறையில் உள்ள சீதாராம விலாஸ் என்ற பிரபலமான உணவகத்தில் சாப்பிட்டோம். சுவையான இலைச் சாப்பாடு. கூடுதலாக பித்தளை தம்ளரில் காபியும் அருந்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.
அங்கிருந்து திருவிடைமருதூர் தாண்டி, பந்தநல்லூர் அருகில் காவனூர் என்ற கிராமத்துக்குச் சென்றோம். காவனூர், மாலதி வளர்ந்த ஊர். அங்கு அவள், தம் குடும்பத்தாருடன் பழகி வந்த பழைய நண்பர்கள் குடும்பத்தைக் கண்டு, பழங்கதைகள் பேச, அந்தப் பொட்டை வெயிலில், கிராமத்து மக்கள் உபசரித்துக் கொடுத்த சர்பத் குடித்து, போட்டோக்கள், வீடியோக்கள் எடுத்துக் கொண்டோம். காவனூர் அனுபவம் ஒரு தனி ப்ளாக்காக எழுதப்பட வேண்டும்.
காவனூரிலிருந்து கிளம்பி, நேராக கணபதி அக்ரஹாரம் வந்தோம். கார்த்திக் குருக்களுக்குப் (பெயரை கவனிக்கவும்) போன் செய்து, நாங்கள் வந்திருப்பதாகச் சொன்னதும். அவரும் உடனே கோவிலுக்கு வந்தார். கணபதி அக்ரஹாரக் கோவில், மாலதி குடும்பத்தாரின் குலதெய்வம். இந்தியா வரும் போதெல்லாம், இங்கும் வந்து கணபதியை தரிசனம் செய்து, நைவேத்தியக் கொழுக்கட்டைகள் வாங்கிச் செல்வோம். பூரணம் வைத்த கோதுமை மாவில் பொரித்த கொழுக்கட்டைகள், நல்ல ருசி கொண்டது. நீண்ட நாட்கள் வைத்திருந்து சாப்பிட்டாலும் அதன் சுவை குன்றாது.
கார்த்திக் குருக்களும், மஹாகணபதிக்கு விமரிசையாக அர்ச்சனை, ஆரத்தி செய்தார். தரிசனம் நல்லபடி ஆயிற்று. கொழுக்கட்டை ஒரு பாக்கெட்தான் கிடைத்தது. அதை சுவைத்துக் கொண்டு காரில் ஏறி திருவையாறுக்கு வந்தோம்.
திருவையாறு அத்திம்பேர் வளர்ந்த ஊர். அவர் விளையாடிய தெருக்களையும், படித்த ஸ்கூலையும் காரில் போகும்போது காட்டினார்.
பிறகு திருவையாறில் பிரபலமான ஆண்டவர் அல்வா கடைக்குச் சென்றோம். இங்கு அசோகா அல்வா பாப்புலர். சிறிது வாங்கி சாப்பிட்டுப் பார்த்ததில் எங்களுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.
காருக்குத் திரும்பி, அசோகா அல்வாவை அப்படி பண்ணியிருக்கணும், இப்படிக் கூடாது, இதெல்லாம் போட்டிருக்கணும், என்று ஆளாளுக்கு அலசிக் கொண்டே, திருச்சி நோக்கிப் புறப்பட்டோம்.
கல்லணை வழியாக வரும்போது, வழி மாறி கடக், முடக்கென்ற மாற்றுப் பாதையில் சென்று, சர்க்கார் பாளையம் வழியாக (அப்பா, எத்தனை நாளாச்சு, இந்தப் பேரெல்லாம் கேட்டு !!) ஒரு மாதிரியாக, திருச்சிக்கு வந்தோம்.
மணி அத்திம்பேரையும், வாக்ஷி குடும்பத்தாரையும் சந்தித்துவிட்டு, ராக்ஃபோர்ட் வ்யூ ஓட்டலுக்கு வந்து சேர்ந்தோம்.
தங்கியிருந்த ஹோட்டலிலேயே மாடியில் ரூஃப் கார்டன் ரெஸ்ட்டாரண்ட் இருந்தது. இரவு உணவை அங்கு அமர்ந்து சாப்பிட்டோம். மலைக்கோட்டைக் காட்சி பின்னணியில் இருக்க, காவிரிக்கரை காற்றும் தென்றலாக வீசியது. அனந்தேஷும், தன் வேலைகளை முடித்துக் கொண்டு அங்கு வந்திருந்தான். சாப்பிட்ட பின், பெரிய ஜாடியில் லஸ்ஸி குடித்தோம்.
மறுநாள் மிக முக்கியமான நாள். காலை சமயபுரம் சென்று, நீண்டநாள் வேண்டுதலின் நிறைவுப் பகுதியைச் செய்ய வேண்டும். அதற்கான ஆயத்தங்கள் செய்துவிட்டு, உறங்கச் சென்றோம்.
உன்னதமான ஊர்கள்..உண்மையான (காவனூர்) மனிதர்கள்.
திருவையாறு அசோகா அல்வாவை விமர்சித்தது எனக்கு உடன்பாடில்லை – அதுவும் ஒன்றுக்கு இரண்டு முறை அதை சாப்பிட்ட பிறகும்.
தர்மாம்பாள் சமேத ஐயாறப்பர் தான் உனக்கு நல்ல புத்தியை அருள வேண்டும்.