பக்திப் பயணம்-7
பிரியமுடன் பெரியநாயகி
PRESS PLAY BUTTON FOR AUDIO READING
புதன் கிழமை (ஜூன் 8) காலை சற்று தாமதமாகத்தான், திருச்சியிலிருந்து குலதெய்வம் கோவிலான கடம்பங்குடிக்குப் புறப்பட முடிந்தது. இந்த முறை, முன்கூட்டியே, கோவில் பூசாரி முருகனிடம் அபிஷேக சாமான்கள், மாலை, பழம், தேங்காய், சர்க்கரைப் பொங்கல் மற்றும் இதர பூஜை சாமான்களை, அவரையே மொத்தமாக ஏற்பாடு செய்யச் சொல்லியிருந்தோம். அதனால், போகும் வழியில் கொஞ்சம் பூ மட்டும் வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து, புறப்பட்டோம்.
வழக்கமான, புதுக்கோட்டை, சிவகங்கை, இளையான்குடி ரூட் தான். கிளம்பி, சிறிது நேரம் பக்திப் பாடல்கள் கேட்டபடி சென்றோம். பிறகு வாரந்தோறும் நிவேதா ஆன்லைனில் நடத்தும் திருப்புகழ் வகுப்பை கேட்டுக் கொண்டே சென்றோம். அன்றைய வகுப்பில் எங்களுக்குப் பிடித்தமான “ஐங்கரனை ஒத்தமனம்” திருப்புகழ் பாடல் வகுப்பு நடந்து கொண்டிருந்தது.
புதுக்கோட்டை வந்தவுடன், அபிராமி ஓட்டலில் காலை உணவை முடித்தபின், பக்கத்திலேயே இருக்கும் அரைக்காசு அம்மன் கோவிலையும் தரிசனம் செய்துவிட்டு வரலாம் என்று அங்கு சென்றோம்.
அரைக்காசு அம்மன் என்றழைக்கப்படும் அம்மனின் பெயர் பிரகதாம்பாள். சிவபெருமான் இங்கு கோகர்ணேஸ்வரர் என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார். ஏதேனும் குடும்பத்தில் காணாமல் போனால், இந்த அரைக்காசு அம்மனுக்கு வேண்டிக் கொண்டதும், கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது.
அழகான கோவில். பெரிய ப்ரகாரங்கள். காலை நேரக் கதிரவன் ஒளியில் உட்புறத் தூண்களும், சிலைகளும் தெய்வீகமாய் ஒளிர்ந்தன. கோவிலில் அர்ச்சகரைத் தவிர வேறு யாரும் இல்லை.
ஒவ்வொரு சந்நிதியாக தரிசித்து, தூணில் வடித்த அழகு சிற்பங்களையும் பார்த்துப் பரவசமானோம். அரைக்காசு அம்மனின் சந்நிதியில் அர்ச்சகர், ஆரத்தி காண்பித்து ப்ரசாதங்கள் தந்தார். சுற்றி வந்தபோது, சிறிய பிள்ளையார் தம் வாகனமான மூஷிகனை, பெரிய உருவில் படைத்து விளையாடிக் கொண்டிருந்தார்.
கோவில் ஊழியரிடம், அங்கு விற்கப்படும் அம்மன் உருவ அரைக்காசுகள் கொஞ்சம் வாங்கிக் கொண்டோம். பிறகு கடம்பங்குடி நோக்கி எங்கள் பயணம் புதுக்கோட்டையிலிருந்து புறப்பட்டது.
சிவகங்கை தாண்டி, இளையான்குடி ரோட்டுக்கு வந்தவுடன், வழியில் வரிசையாகப் போலீசார், பத்தடிக்கு ஒருவராகக் கடும் வெயிலில் நின்று கொண்டு, வாகனங்களை வேறு வழியில் போகச் சொன்னார்கள். ஏனென்று கேட்டதற்கு, ஒரு காவலர், சி.எம். வர்றாரு என்று தன் முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி சொன்னார். வேறு வழியில் செட்டிநாட்டுப் பகுதி கிராமங்களில் புகுந்து ஒரு மாதிரியாகத் திரும்பவும் கடம்பங்குடி செல்லும் சாலைக்கு வந்தோம். இந்தச் சுற்று சுற்றியதில் மேலும் ஒரு முக்கால் மணி நேரம் விரயமானது. பூசாரி முருகனைத் தொடர்பு கொண்டதும், அவரும் கடம்பங்குடி பெரியநாயகி அம்மன் கோவிலின் லொகேஷன் மேப்பை அனுப்பினார்.
‘முருகன் காட்டிய வழியில்’ சென்றதும், கடம்பங்குடி கோவிலுக்குச் செல்லும் போர்டு காணப்பட்டது. அதன்படி அந்த வீதியில் செல்ல, ஒவ்வொரு திருப்பத்திலும் அம்புக்குறியிட்ட வழிகாட்டும் பலகை. எந்த விதக் குழப்பமும் இல்லாது, குலதெய்வக் கோவில் வாசலுக்கு வந்து சேர்ந்தோம். ஒரு நான்கு வருடங்களுக்கு முன்பு இங்கு வந்த போது, லொகேஷன் மேப்போ, வழி காட்டும் பலகைகளோ இல்லை.
கை, கால்களைச் சுத்தம் செய்துவிட்டு, உடைகளை மாற்றிக் கொண்டோம். வாங்கிய பொருட்களை தாம்பாளத்தில் அடுக்கி வைத்தோம். பானு, சந்நிதியில் கோலமிட, பூசாரி முருகனின் மகன், பூஜைக்கான ஆயத்தங்கள் செய்தார். முருகனின் மகனும் இந்திய ராணுவத்திலிருந்து, ஒரு மாத விடுமுறையில் வந்திருப்பதால், கோவில் காரியங்களைச் செய்வதாகக் கூறினார்.
பிள்ளையார், முருகனுக்கு ஆராதனை ஆனபின், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் ஆரம்பமானது. எண்ணெய், மஞ்சள், பால், தயிர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம் என்று சகலவித அபிஷேகங்களும் விமரிசையாக நடந்தது. பிறகு பூசாரி முருகனின் மகனார், சந்நிதிக்குத் திரைபோட்டு, அம்மனை அலங்கரிக்கச் சென்றார்.
கோவில் மண்டபத்தில் அமர்ந்து, எல்லோரும் தாயே உனது மலர் சரணம் என்ற பாடலைப் பாடினோம். அத்திம்பேர், ஜகத்ஜனனி என்ற பாடலை மனம் உருகப் பாடினார். ஒரு நவராத்திரிக்காக எனக்குத் தோன்றிய வார்த்தைகளில் புனைந்த சௌபாக்யம் தருவாய் என்ற பாடலிலிருந்து, ஞாபகத்திலிருந்த வரிகளை மட்டும் பாடினோம் (முழு வரிவடிவம் கீழே).
ராகம்: தர்பாரி கானடா தாளம்: ஆதி
பல்லவி
சௌபாக்யம் தருவாய் சர்வேஸ்வரி – திவ்ய
தரிசனம் தருவாய் ப்ரஹந்நாயகி – சகல
அனுபல்லவி
அரி சிவ பிரம்மா அனைத்திலும் பெருகும்
ஆனந்த தாயினி அன்னை ஸ்வரூபிணி … (சௌபாக்யம்)
சரணம்
மூவினை அகற்றும் மூலாதார
முதல்வனைப் படைத்த மூத்தவள் நீயே..
மூவடி அளந்தவன் சேவடி பணிந்திடும்
மாதிரு மகள் தரும் காட்சியும் நீயே…
ஞானமும் மேன்மையும் வாரி வழங்கிடும்
கானம் பொழி வீணை கரத்தவள் நீயே..
அன்பினை ஊட்டி, அருளினைக் காட்டி
அள்ளி அணைத்து கருணையைக் கூட்டி… (சௌபாக்யம்)
அலங்காரம் முடிந்து அழைக்கவே, பானுவும், முதல் நாள் வாங்கிய திருமாங்கல்யத்தில் குங்குமம் பூசி, மங்கல சூத்திரத்தில் கட்டி, பெரியநாயகியின் அருளாசிக்குச் சமர்ப்பித்தாள்.
பெரியநாயகி அம்மன், நேர்த்தியான அலங்காரத்தில் ஜொலித்தாள். எங்கள் தந்தையார் அருளியிருந்த நூற்றெட்டு நாமாவளிகளுடன், அர்ச்சனை, நைவேத்யங்கள், ஆரத்தி சிறப்பாக நடைபெற்றன.
வந்திருந்த அனைவருக்கும், நைவேத்தியப் பொங்கல் பரிமாறப்பட்டது. கோடை விடுமுறைக் காலமாதலால், நிறையச் சிறுவர், சிறுமியர் வந்திருந்தனர். கூடவே பெற்றோர்களும், பாட்டிகளும் வந்திருந்து சந்நிதி நிறைந்திருந்தது. வந்திருந்த அனைவருக்கும் பானுவும், மாலதியும் உணவு பரிமாறினர். மகிழ்வுடன் திரும்பக் கேட்டு, அன்னையின் அருட் சந்நிதியில் அவளுக்குப் பிடித்த சர்க்கரைப் பொங்கல் ப்ரசாதத்தை உண்டனர்.
அனைவரும் திருப்தியுடன் சாப்பிட்டு முடிக்க, பூசாரி முருகன் குடும்பத்தாருக்கும், பூசை செய்த அவர் மகன் குடும்பத்தாருக்கும் தட்சிணைகள் அளித்து, அவர்களுடன் படங்கள் எடுத்துக் கொண்டோம்.
உண்டியலில் காணிக்கை செலுத்திவிட்டு, மனம் உருக அம்பாளைப் பிரார்த்தனை செய்து, நமஸ்கரித்து, பூசாரி முருகன் குடும்பத்தாருக்கும், மற்றவர்களுக்கும் விடை கொடுத்து, கடம்பங்குடியிலிருந்து கிளம்பினோம்.
நேரமும் பிற்பகல் மூன்று மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. மதிய உணவுக்காக, சிவகங்கை ஆர்ய பவன் ரெஸ்ட்டாரண்டுக்கு வந்தோம். அந்நேரத்திலும் எங்களுக்கு மதிய உணவு எந்தக் குறையும் இல்லாமல் கிடைத்தது, பெரியநாயகியின் அருளே ! கூட்டு, பொரியல், கீரை, சாம்பார், வத்தல் குழம்பு, தயிர், மோருடன், வெல்லம் போட்ட மாங்காய்ப் பச்சடியும் அளவுக்கதிகமாகவே கிடைத்தது. மிகவும் சுவையான மாங்காய்ப் பச்சடி! ரசித்து, ருசித்து எல்லோரும் சாப்பிட்டோம்.
அங்கிருந்து புறப்பட்டு, பிள்ளையார் பட்டி சென்றோம். அருகம்புல் மாலை வாங்கிக் கொண்டு, மண்டபத்தில் நின்ற போது, சுவாதீனமாக, ஒரு மாடு, பானுவின் கையிலிருந்த அருகம்புல்லைப் பிடுங்கித் தின்ன முயன்றது. இதைப் பார்த்ததும், இன்னொரு அருகம்புல் மாலை வாங்கி, அதற்கு கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் ஊட்டினோம். அதுவும் ஆசையாக உண்டது. அழகிய கருணை விழிகளால் எல்லோருக்கும் நன்றி சொன்னது. “உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும்போது, அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன்னருள் அன்றோ” என்று கண்ணதாசன் முருகனை நோக்கிப் பாடியதை மனப்பூர்வமாக உணர முடிந்த தருணம் அது.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ப்ருமாண்டமாக அமர்ந்திருந்தார். எளிய அருகம்புல்லைப் பெற்றுக் கொண்டு, அரிய அருட்கண்களால் ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். நிதானமாக தரிசனம் ஆனது. திருப்தியுடன், கருணைக் கணபதியிடம் விடை பெற்றுக் கொண்டு, அங்கிருந்து கிளம்பினோம்.
அடுத்ததாக, சோலையாண்டவர் கோவிலுக்கு, வண்டியைத் திருப்பினோம். வழியில் திரும்பவும் போலீஸ்காரர்கள் தென்பட்டனர். பக்கத்தில் இருந்த ஒரு பெட்ரோல் ஸ்டேஷனில், வண்டியைக் குலுக்கிக் குலுக்கி, ட்ரைவர் முருகேசனும் டீசல் போட்டார். ஒவ்வொரு முறையும் இவ்வறு குலுக்கி டீசல் போடும் காரணம் கேட்டதற்கு, “அதிகமாப் புடிக்கும் சார், 45 புடிக்கிற டாங்கு, 50 லிட்டர் வரை ஏத்தலாம் சார்” என்று சொன்னார். அந்த டீசல் போடும் சமயத்தில், கட்சிக் கொடிகள் பறக்க, வேக, வேகமாக இனோவாக்கள், போலீஸ் கார்கள் சென்றன. கேட்டதற்கு, காலையில் வந்திருந்த சி.எம். அந்த வழியாக வேறு ஊருக்குச் செல்கிறார் என்றனர்.
கொத்தரி சோலை வளர்த்த அய்யனார் கோவிலே, சோலையாண்டவர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக இக்கோவில் பிரசித்தம். கானாடுகாத்தானிலிருந்து, பள்ளத்தூர் போகும் வழியில் உள்ளது. ஒவ்வொரு முறையும் கடம்பங்குடி குலதெய்வக் கோவிலுக்கு வரும் போதும், கடந்த நான்கைந்து தடவைகளாக, சோலையாண்டவரையும் தரிசித்துச் செல்வது வழக்கமாயுள்ளது.
அந்த மாலை நேரத்தில் சோலையாண்டவர் குளத்தின் நீர்ப்பரப்பு, வெள்ளித் தகடாய் ஜொலித்தது. வெள்ளித் தகட்டில் கால், கைகளைக் கழுவிக் கொண்டு கோவிலுள் சென்றோம்.
புதிதாக வர்ணம் அடிக்கப்பட்டு, கோவில் படு சுத்தமாக இருந்தது. நகரத்தார் மேற்பார்வையில் இயங்கும் கோவில்களில்,சுத்தமும், பராமரிப்பும் குறைவின்றி இருப்பதைக் காணலாம். சோலையாண்டவர் சந்நிதியில் எங்களைத் தவிர, மற்றொரு குடும்பமும் இருந்தது. அய்யனாருக்கு அர்ச்சனை ஆரத்தி நடத்தி, விபூதி, சந்தனம் கொடுத்தனர்.
வெளியில் அமைக்கப்பட்டிருந்த உபதெய்வங்கள் மற்றும், குதிரைச் சிலைகள் புதிய வண்ணங்களில் மின்னின. அவற்றின் அருகில் படங்கள் எடுத்துக் கொண்டோம். பிறகு அங்கிருந்து, நேராக திருச்சியில் நாங்கள் தங்கியிருக்கும் ராக்ஃபோர்ட் வியூ ஹோட்டலை அடைந்தோம். மறுநாள், தஞ்சாவூர் பகுதிகளுக்குச் செல்வதாகத் திட்டம்.
உனக்கு இப்படி ஒரு சகலகலா வல்லவரான ஒரு அத்திம்பேரா? நம்பவே முடியலையே…
ஒரு factual error கரெக்ட் செய்யப்பட வேண்டும். நாம் சிவகங்கையிலிருந்து நேராக தஞ்சை சென்றோம். திருச்சி வழியாக அல்ல. இந்த மாதிரி optimum ஆக இந்த ட்ரிப்பைப் plan செய்தவன் நான். அதை recognize/appreciate பண்ணாவிட்டாலும் மறைப்பது நல்லது இல்லை.
ஆம், நாம் சிவகங்கையிலிருந்து தஞ்சாவூர் வழியாக திருச்சி வந்து சேர்ந்தோம்.