Travel

பக்திப் பயணம்-6

திருச்சியில் திரண்ட திருவருள்

PRESS PLAY BUTTON FOR AUDIO READING

கடந்த 5 பகுதிகளில் கூறியிருந்தபடி, இதுவரை 5 படை வீட்டுக் கோவில்களையும், இன்னும் மற்ற கோவில்களையும் தரிசித்து விட்டு, இப்போது பழனியிலிருந்து, ஏற்கனவே இருந்த பெட்டிகளுடன், புதிதாக வாங்கிய புடவை, தீனி வகையறா மூட்டைகளுடன் திருச்சி நகரை நோக்கிப் புறப்பட்டோம். திருச்சியில் ஒரு மூன்று நாட்கள் தங்கி, சமயபுரம் வேண்டுதலை நிறைவேற்றவும், கடம்பங்குடி, தஞ்சாவூர் கோவில்களை தரிசிக்கவும் திட்டம் இருந்தது.

திருச்சி, பழனியிலிருந்து சுமார் மூன்று மணி நேரப் பயணம் என்று கூகுள் சொன்னது. வழியில் எல்லோருக்கும், டீ குடிக்கும் எண்ணம் வந்தது. கூடுதலாக, பாரம்பரியமான டீ கடைகளில் நீளமாக ஆற்றி, கண்ணாடித் தம்ளரில் தரப்படும் தேநீரை அருந்த விருப்பம் கொண்டோம். டீக்கடைகளில் இப்போதெல்லாம், லேசாகப் பிடித்தாலே நசுங்கிக் கொட்டும் பேப்பர் கப்பில் டீ கொடுக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக, ஒரு கடையில் நாங்கள் கேட்ட மாதிரி க்ளாஸ் டம்ளரில் டீ கிடைத்தது.

At a tea shop on the way to Trichy

திருச்சி நகரை நெருங்கினோம். தேசியக் கல்லூரியும் அதன் பகுதிகளும் முற்றிலும் மாறி இருந்தன. அன்று பொட்டலாக இருந்த இடங்களில் எல்லாம் நவீனக் கடைகளின் ஷோ ரூம்கள். குறுக்கும் நெடுக்குமாக மேம்பாலங்கள்.  சரக்கென்று ஓரிடத்தில் திரும்பி, பைபாஸ் ரோடு வழியாக வந்து, காவிரிப் பாலத்தில் நுழையும்போது, மலைக்கோட்டையின் தரிசனம். எங்கிருந்து, எந்த நேரத்தில் பார்த்தாலும் பரவசம் தரக் கூடியது மலைக்கோட்டையின் அமைப்பு. அதன் அழகினை ரசித்தபடி வந்தோம். “நம்ம திருச்சிடா !” என்று மனதில் மகிழ்ச்சியும், தெம்பும் பிறந்தன.

அத்திம்பேரும் “லெஃட் சைடு பாரு, அது தான் நாம தங்கப்போற ஓட்டல், ராக்ஃபோர்ட் வ்யூ” என்றார். பார்த்தபோது, பின்புற வெளிச் சுவர்கள், சதுரம் சதுரமாக வெவ்வேறு வர்ணத்தில் இருந்தன.

Rockfort View Hotel, Trichy

ஓட்டல் அறைக்குப் போவதற்கு முன், அவ்வளவாகப் பசி இல்லாததால், மதிய உணவாக, லைட்டாக சாப்பிட முடிவாயிற்று. அஸ்வின்ஸ் என்ற இடத்துக்குப் போகலாம் என்று பானுவும் யோசனை சொல்லவே, அங்கு சென்றோம்.

Aswins Restaurant, Trichy

நவீனப் படுத்தப்பட்ட சத்திரம் பஸ் ஸ்டாண்ட் தாண்டி, கரூர் ரோடில், அஸ்வின்ஸ் இருந்தது. ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ் கடை. அங்கு கொழுக்கட்டை பிரபலம். உச்சிப்பிள்ளையார் ஆட்சி செய்யும் திருச்சிக்கு வந்தவுடன், அந்தப் பிள்ளையாருக்கே பிடித்த, மோதகம் உணவாகக் கிடைத்தது பேரதிர்ஷ்டம்.

நல்ல வாசனையான பூரணத்துடன் பெரிய சைஸ் கொழுக்கட்டை. பிறகு வெங்காய சமோசா. அதன் பிறகு தயிர்சாதம் என்று “லைட்”டாகச் சாப்பிட்டு விட்டு, ராக்ஃபோர்ட் வ்யூ ஓட்டலுக்கு வந்து எங்களுக்கான அறைகளுக்குச் சென்றோம். பிறகு, அத்திம்பேர் அறையிலேயே தங்கி ஓய்வெடுக்க, நாங்கள் நான்கு பேர் மட்டும், அந்த மதிய நேரம், அடுத்த வேலைகளைப் பார்க்கப் புறப்பட்டுச் சென்றோம்.

மாலதிக்கு சமயபுரத்தில் ஒரு பிரார்த்தனை இருந்தது. எங்கள் திருமண நாளில், அவளது பழைய மாங்கல்யத்தை சமயபுரம் கோவிலுக்கு அளித்துவிட்டு, வேறு புதிய மாங்கல்யம் கட்டிக் கொள்வதாக வேண்டுதல். அவ்வேண்டுதலில் இரண்டு பகுதிகள் உண்டு. அதன் முதல் பகுதியை நிறைவேற்றும் பொருட்டு, முதலில் திருச்சி மாணிக்க விநாயகரை தரிசனம் செய்து விட்டு, சமயபுரம் கோவிலுக்குச் செல்லத் திட்டமிட்டோம்.

ஆண்டார் தெரு, சின்னக்கடை வீதி வழியாக, மாணிக்க விநாயகர் கோவில் வாசலுக்கு வந்தோம். வழியில் பழக்கமான, தேங்காய், பொம்மைக் கடைகளைக் கடந்து, சந்நிதிக்குச் சென்றோம். பிற்பகல் நேரமாதலால், நாங்கள் வரும் சப்தம் கேட்டு, விழித்துக் கொண்ட விநாயகரும், செளக்யமா என்று கேட்டு, கம்பிக் கதவின் பின்னே அமர்ந்திருந்தார். பக்தியுடன் அவரை தரிசித்துவிட்டு, அங்கிருந்து சமயபுரம் நோக்கிச் சென்றோம்.

அன்று செவ்வாய்க்கிழமை என்பதால், சமயபுரத்தில் கூட்டம் இருக்குமோ என்று நினைத்தோம்.

Samayapuram Temple Elephant

ஆனால் கூட்டம் அவ்வளவாக இல்லை. நுழைவுச்சீட்டு வாங்கி, ஐந்து நிமிடங்களுக்குள் அவள் சந்நிதியில் நின்றோம்.

சந்நிதியில் மாரியம்மன், செம்மை நிறத்தில் ஜொலித்தவளாய், மந்தகாசத்தில் மங்கள ஸ்வரூபிணியாகக் காட்சி அளித்தாள். கருணைக் கண்களால், கரெக்ட்டா வந்துட்டியே, வா, வா,வா என்று வாஞ்சையுடன் அழைக்கும் தோற்றம். நெகிழ்வான தருணம். அர்ச்சகரும் நிதானமாக அர்ச்சனை செய்து, சற்றுக் கூடுதல் நேரம் எங்களை தரிசனம் செய்ய அனுமதித்தார். அம்மனின் அருளையும் பிரசாதங்களையும் அள்ளிக் கொண்டு ப்ரகாரத்துக்கு வந்தோம்

பிரார்த்தனையின் முதல் பகுதியை, அம்பாளின் அருளால் நிறைவேற்றிய பின், கோவிலின் உட்பிரகாரத்தில், சிறிது நேரம் மண்டபத்தில் தரையில் அமர்ந்து, அம்மன் ஸ்லோகங்களை பானுவின் தலைமையில் பாடினோம். மண்டபத்தின் உட்கூரையில் ப்ரம்மாண்டமான அம்பாளின் சித்திரம் தீட்டப்பட்டிருந்தது. எங்கிருந்து பார்த்தாலும், நம்மையே கவனித்துப் பார்ப்பது போன்ற அழகான ஓவியம்.

Painting on the ceiling at Samayapuram Temple Mandap

சமயபுரம் கோவில் கும்பாபிஷேகமும் ஜூலை மாதம் நடப்பதாக இருப்பதால், இன்னும் உள்ளே வேலைப்பாடுகள் நடந்த வண்ணம் இருந்தன.

பிறகு கோவிலிலிருந்து நேராக, திருச்சி மங்கள் & மங்கள் ஸ்டோருக்கு வந்து, ஓரிரு மணிக்குள், புதிய திருமாங்கல்யமும் வாங்கினோம். காரையும் மங்கள் வாசலிலேயே பார்க் செய்துவிட்டு, கால் நடையாகவே, தைலா முதலியார் கடைக்குச் செல்லும் வழியில், அசோக் ஸ்வீட்லாண்டில், சோன்பப்டி சாப்பிட்டு, எலுமிச்சை ஜூஸ் குடித்தோம்.

குலதெய்வம் ப்ரஹந்நாயகி அம்மன் கோவிலுக்கு வழக்கமாகக் கொண்டு செல்லும் பிள்ளையார் முருகன் துண்டுகள், அம்மனுக்குப் புடவை, தானம் அளிக்கப் புடவை, கட்டிக்கொள்ள ஒன்பது கஜப்புடவை என்று வாங்கிக் கொண்டு, திருச்சி தெப்பக்குளப் பகுதியில் இருக்கும் நியூ லக்ஷ்மி நிவாஸில் (பழைய சாரதா கபே) டின்னர் சாப்பிடச் சென்றோம். புவனாவும், அனந்தேஷும் வந்திருந்தனர்.

At the Restaurant, Trichy

சாப்பிட்டபின், அந்த உணவகத்தின் கீழே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். டிங்,டிங், டிங், கர்ரக், கர்ரக் என்று இலுப்பைச் சட்டியும் இரும்புக் கரண்டியும் மோதும் சப்தம் இனிமையாய்க் கேட்டதும், அத்திம்பேர் கண்களில் ஒளி மின்னியது.

சப்தம் வந்த இடத்துக்குச் சென்று, சூடான, வறுத்த உப்புக் கடலைப் பொட்டலங்கள் ஆளுக்கு ஒன்று வாங்கிக் கொண்டு, நடந்து வரும் போது, பேரீச்சம் பழ சைசில், கரு நீல நாவல் பழங்கள், ஒரு தள்ளு வண்டியில், அந்த இருட்டிலும் மின்னிக் கொண்டிருக்கவே, “வாங்கு ஒரு கால் கிலோ” என்று பாகுபலி சிவகாமியாய், பானுவும் ஆணையிட, அதையும் வாங்கிக் கொண்டு, நாவல் பழமும், உப்புக் கடலையுமாக மாற்றி மாற்றி கொரித்துக் கொண்டே (என்னே, காம்பினேஷன்!) , மங்கள் கடை வாசல் கார் பார்க்கிங் வந்தோம். புவனாவும், அனந்தேஷும் விடைபெற்ற பின், தங்கியிருந்த ஓட்டலுக்குத் திரும்பினோம்.

மறுநாள் காலை குலதெய்வம் கோவிலான கடம்பங்குடிக்குச் செல்வதாகத் திட்டம்.

One thought on “பக்திப் பயணம்-6

  1. சூடான, வறுத்த உப்புக் கடலைப் பொட்டலங்கள் ஆளுக்கு ஒன்று – இந்த இடத்தில் அடைப்புக் குறிக்குள் (அத்திம்பேருக்கும் எனக்கும் மட்டும் ஆளுக்கு மூன்று பொட்டலம்) என்று குறிப்பிட்டிருந்தால் அது உண்மையை விளம்பியதாக இருக்கும்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *