பக்திப் பயணம்-5
கடலை மிட்டாய், காரசேவு, பஞ்சாமிர்தம்
PRESS PLAY BUTTON FOR AUDIO READING
அடுத்த நாள் காலையில், நாங்கள் தங்கியிருந்த ஓட்டலின் மாடியிலேயே, ப்ரேக்ஃபாஸ்ட் பஃபே. இடியாப்பம், வடை, இட்லி, பொங்கல், தோசை, அன்னாசிப் பழத் துண்டுகள், கார்ன்ஃப்ளேக்ஸ், காபி, டீ என்று கலந்து கட்டி சாப்பிட்ட பின்பு அறையைக் காலி செய்தோம். கன்யாகுமரியிலிருந்து இப்போது நான்காவது படை வீடான பழனிக்குச் செல்வதாகத் திட்டம்.
கோவில்பட்டி, சாத்தூர் வழியாகச் சென்றால், சுமார் ஆறு மணி நேரத்தில் பழனி சென்றுவிடலாம் என்று கூகுள் சொன்னது. பெட்டிகளைக் காரின் தலையில் கட்டிவிட்டு, எங்களையும் காரின் உள்ளே திணித்துக் கொண்டு பயணம் புறப்பட்டோம். சினிமாப் பாடல்கள், திரைப்படங்கள், அரசியல் என்று பலவித விஷயங்களைப் பேசிச் சிரித்தபடி வந்து கொண்டிருந்தோம்.
வழியில் கோவில்பட்டி போர்டு தென்பட, “உள்ளே போ” என்று பாட்ஷா படத்தில் ரஜினி சொல்வது போல சொன்னதும், முருகேசனும் வண்டியை கோவில்பட்டி நகரத்தின் உள்ளே செலுத்தினார். அதற்குள் கூகுளும், நாங்கள் தேடிய வஸ்து, மார்க்கெட் ஸ்ட்ரீட்டில் கிடைக்கும் என்று சொல்ல, முன்னாலிருந்த அத்திம்பேர், முருகேசனிடம் அந்த இடத்துக்கு கூகுள் சொல்லும் வழியைக் காட்டிக் கொண்டு வந்தார்.
கடலைமிட்டாய், காலம் காலமாகக் கோவில்பட்டி நகரத்தின் விசேஷம். அதை வாங்கத்தான் இப்போது போய்க் கொண்டிருந்தோம். ஒரு முறை கோயம்புத்தூர் செல்லும் வழியில் ஓர் இடத்தில், கோவில்பட்டி கடலை உருண்டைகள் நிறைந்திருந்த பெரிய ப்ளாஸ்டிக் கூஜாவை வாங்கி அந்தக் கடலை உருண்டை சுவையில், மனதைப் பறிகொடுத்ததிலிருந்து, இந்தப் பகுதிக்கு வர நேர்ந்து கொண்டு, கடலை உருண்டை வாங்க, அத்திம்பேரும், நானும் அன்றே சங்கல்பம் செய்திருந்தோம்.
நாங்கள் தேடிச்சென்ற கடலைமிட்டாய் கடையில், எல்லாம் தீர்ந்து விட்டிருந்தது, மாலை ஆறுமணிக்கு மேல்தான் கிடைக்கும் என்றார்கள். மாலதியும், சந்திரிகாவும், காரிலேயே காத்திருக்க, அடுத்த பிரபலமான கடைக்கு, வேகாத வெயிலில் நானும், அத்திம்பேரும், பானுவும் நடந்தோம். அங்கும் கடலை உருண்டைகள் இல்லை. ஆர்டரின் பேரில்தான் கிடைக்கும் என்றார்கள். ஆனால் கடலை மிட்டாய்கள் இருந்தன.
வடிவத்தில் என்ன இருக்கிறது, உருண்டையாகத்தான் சாப்பிட வேண்டுமா என்ன, சதுரமாக இருந்தாலும் சுவையாகத்தான் இருக்கப்போகிறது, கடையும் “கார்த்திக் ஸ்வீட்ஸ்” என்ற பெயருடன் முருகன் படத்துடன் இருப்பதால் நன்றாகத்தான் இருக்கும், என்று ஆறுதல் படுத்திக் கொண்டு, சாம்பிள் கேட்டு சாப்பிட்டு, சுவையை உறுதி செய்து, வெல்லம் போட்டது, கருப்பட்டியில் செய்தது என்று விதவிதமாகக் கடலை மிட்டாய் பாக்கெட்டுகள் நிறைய வாங்கிக் கொண்டோம்.
கடை வாசலில் , அக்கடையின் ப்ராண்ட் அம்பாஸடர்கள் போல் நானும் அத்திம்பேரும் கடலை மிட்டாய் பாக்கெட்டுகளுடன் போஸ் கொடுத்தோம். வாங்கியவற்றை ஒரு பெரிய அட்டைப் பெட்டியில் வைத்துக் கட்டி, சீல் வைத்துப் பத்திரப்படுத்தி, காரில் வைத்துக் கொண்டு, பயணத்தைத் தொடர்ந்தோம்.
அடுத்த நிறுத்தம் சாத்தூர். இந்த ஊர் காரசேவுக்குப் பிரசித்தமானது. கடலைமிட்டாய் கடையில் விசாரித்தபோது, அவர்கள் சாத்தூர் எம்.எஸ்.ஷண்முக நாடார் (இப்பெயரிலும் முருகனே) கடை பாரம்பர்யமிக்க கடை என்றும், நாங்கள் செல்லும் ஹைவேயிலேயே அவர்கள் புதிதாகக் கடை திறந்து இருப்பதாகவும், அங்கேயே எல்லாம் வாங்கலாம் என்றும் சொன்னார்கள். ஹைவேயில் செல்லும்போது, அந்தக் கடையைத் தவற விட்டு விட்டோம். பிறகு அதன் ஒரிஜினல் கடைக்கு கூகுள் மூலம் வழிகண்டு பிடித்து, திரும்பவும் பாட்ஷா ரஜினி போல் “உள்ளே போ” என்று சாத்தூருக்குள் காரைப் போகச் சொன்னோம்.
ஷண்முக நாடார் கடை, மிகச் சிறியது. வாசலில் சிறிய பெஞ்சு போல் இருக்க, பானுவும், அத்திம்பேரும் அதில் உட்கார்ந்தனர். விதவிதமான சேவுகளை தனித்தனி கண்ணாடிப் பெட்டிகளில் நிறைத்து இருந்தனர் இந்த சேவு செய்யும் வித்தையை ஒரு குஜராத்தியிடம் கற்றுக் கொண்டு, தமிழர்கள் விரும்பும் ருசிக்கு அதில் மாற்றங்கள் செய்து, தனி விற்பனை நிலையமாக வெற்றிகரமாக நடத்தி வந்தவர் அதன் ஸ்தாபகர் ஷண்முகநாடார். டை, கோட்டுடன் எடுக்கப்பட்ட அவரது காரசேவு பழுப்பு நிறப் படம், கடையில் பெரிதாக மாட்டப்பட்டிருந்தது.
கடையை இரண்டேபேர் நிர்வகிக்க, உள்ளே ஒருவர் உதவிக்கு. மக்கள் பொட்டலம் பொட்டலமாக, சேவு வாங்கிக் கொண்டிருந்தனர். உப்பு, மிளகு, பூண்டு கார சேவுகளின் சாம்பிள்கள் கொடுத்தார்கள். சீனி சேவு தீர்ந்து போயிருந்தது.
வகைக்கு நான்காக சேவு, சீவல் (தூளாக்கிய மெல்லிய ரிப்பன் பகோடா) பாக்கெட்டுகள் வாங்கி, அட்டைப்பெட்டியில் பத்திரமாக சீல் வைத்து, காரில் தள்ளினோம்.
மதிய சாப்பாட்டுக்கான நேரம் ஆகியிருந்ததால், சேவு கடைக்கு வரும் வழியில் பார்த்த உடுப்பி வெங்கடேச பவனுக்குச் சென்றோம். ஆட்களே இல்லாத, நான்கு மேசைகள் மட்டுமே போட்டிருந்த ஏ.சி அறைக்குள் அமர்ந்தோம். சாத்தூர் வெயிலுக்கு இதமாக, ஏ.சி. மிகவும் குளுமையாக இருந்தது. பெரிய வாழை இலை போட்டு, நல்ல சாப்பாடு. டம்ளரும் இல்லாமல், கிண்ணமும் இல்லாமல் இருந்த ஒரு மிடி சைஸ் கப்பில் வெண்ணெய் மணத்துடன் கெட்டித் தயிர், நல்ல வாசனையுடன் குடிக்க மோர் என்று அமர்க்களமாக இருந்தது.
சாத்தூரில் திருப்தியான சாப்பாடு முடிந்ததும், காரில் ஏறி, அடுத்த படை வீடான பழனிக்குப் புறப்பட்டோம்.
முதல் நாள் சுசீந்திரம் கோவிலில் சந்தித்த ஶ்ரீகுமரன் சொல்லியபடி, பழனியை நெருங்கும் போது, திரு.சக்திகுமாரிடம் தொடர்பு கொள்ள, அவரும், பழனி தேவஸ்தானம் நடத்தும், தண்டாயுதபாணி நிலையம் என்ற தங்கும் விடுதிக்கு நேராக வரச் சொல்லி, தன்னுடைய ஆள் ஒருவரை அங்கு அனுப்புவதாகக் கூறினார்.
விடுதியை அடைந்து, சக்திகுமார் அனுப்பிய ஆள் மூலம் அறையைப் பதிவு செய்து, மாலை தரிசனத்துக்கான VIP கூப்பனையும் பெற்றுக் கொண்டோம். அவரிடம் அன்பளிப்பாக பணம் கொடுக்க முயன்றபோது, “அதெல்லாம் வேண்டாம் சார்” என்று அந்த சுசீந்திரம் ஶ்ரீகுமரன் போலவே மறுத்து, மோட்டார் பைக்கில் ஏறி வேகமாகச் சென்றார்.
இரண்டிரண்டு கட்டில்கள் போட்ட இரண்டு அறைகளும், பெரிய கூடமும் கொண்ட தரைத் தளத்தில் இண்டிப்பெண்டெண்ட்டாக இருந்த குடில் அது. அறைகளில் ஏ.சி. இருந்தது. கூடத்தில் சோபா, நாற்காலிகள் இருந்தன. குஷன் இல்லாத முரட்டு கட்டில் மெத்தைகள். ஒழுங்கற்ற வடிவில் பாத்ரூம் கட்டமைப்புகள். ஆனால் தண்ணீர், வெந்நீர் எல்லாம் நன்றாக வந்தது.
பெட்டிகளை வைத்துவிட்டு, பழனி மலை ஏறுவதற்காக, மின் இழுவை ரயில் நிலையம் நோக்கிச் சென்றோம். கம்பிக் கூண்டில் பெரிய க்யூ. ஒரு மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்து, நாற்பத்தைந்து டிகிரி சாய்வில் நின்றிருந்த இழுவை ரயில் பெட்டிகளில் சறுக்கி விழுந்து விடாமல் ஜாக்கிரதையாக ஏறி அமர்ந்தோம். மூன்று, நான்கு நிமிடங்களுக்குள் மலையை அடைந்தோம்.
சந்நிதி வாசலில் VIP கூப்பனைக் காட்டியதும், எங்களை அவசர அவசரமாக உள்ளே அழைத்துச் சென்றனர். கம்பித் தடுப்புகள் போட்டிருந்த நீளமான ப்ரகாரங்களில் ஓட்டமும் நடையுமாக சந்நிதிக்கு வந்து சேர்ந்தோம். பழனி முருகனுக்கு அடுத்த அபிஷேக, அலங்காரத்துக்கு நேரம் ஆகியிருந்தபடியால், இத்தனை அவசரம்.
போகர் எனும் சித்தரால் நவபாஷாணங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட மூலவர். தினமும் ஆறு அபிஷேகங்களும், ஆறு விதமான (ஆண்டியாக,வேடனாக,சன்யாசியாக, வைதீகனாக, ராஜனாக,புஷ்பதாரியாக) அலங்காரங்களும் செய்து கொள்கிறார். அர்ச்சகர்கள் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த, அழகு முருகனைச் சில நிமிடங்கள் நின்று தரிசிக்க அனுமதித்தனர். பளிச்சென்று பட்டாடைகளும், ஜொலிக்கும் ஆபரணங்களும் அணிந்து மகாராஜனாக அருள் வீசிக்கொண்டிருந்தார். இதைத்தான் பூணுகின்ற பிரானே நமோநம என்று அருணகிரியார், போதகந்தரு கோவே திருப்புகழில் பாடுகிறார் போலும்.
தரிசனம் முடிந்து வெளியே வந்த தலைமை அர்ச்சகரிடம் தட்சிணை கொடுத்துவிட்டு, அங்கிருந்த கோவில் ஊழியருக்கும் பணம் கொடுத்துவிட்டு வெளியில் வந்தோம்.
பிறகு, திரும்பவும் மின் இழுவை ரயிலில், மலையின் அடிவாரத்துக்கு வந்தோம்.
அடிவாரத்தில், பழனி தேவஸ்தானத்தால் அமைக்கப்பட்ட, ஃபோட்டோ ஸ்பாட்டில் I LOVE PALANI என்று ஒளிர்விடும் வாசகத்தின் கீழ் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.
பக்கத்தில் இருந்த ஒரு சுமாரான உணவகத்தில் இரவு உணவு. அந்த உணவகத்தில் இந்திய சுதந்திர தியாகிகளையும், புகழ் பெற்ற தலைவர்களின் படங்களையும் சீராக மாட்டி வைத்திருந்தனர்.
மறுநாள் காலை 5 மணிக்கே, பெண்மணிகள் அறையில் உறங்கிக் கொண்டிருக்க, அத்திம்பேரும், நானும் மட்டும் பழனி மலை ஏறி, விஸ்வரூப தரிசனம் செய்து வரப் புறப்பட்டோம். வழியில் ஒரு டீக்கடையில், காபி என்று சொல்லப்பட்ட பானத்தை அருந்தினோம். காலணிகளை வைத்து விட்டு, யானைப்பாதையின் அடிவாரத்தில் இருக்கும் விநாயகரை வணங்கி விட்டு, ஏறத் தொடங்கினோம். பழனிமலையில் நடந்து ஏறிச் செல்வதற்கு, யானைப் பாதையும், சாதாரணப் படிகளும் உள்ளன. யானைப் பாதை என்பது, நான்கைந்து படிகள், அதன் பிறகு சரிவான பாதை என்ற அமைப்பில் உள்ளது. இருவரும், யானைப் பாதையில், மலைக் காற்றை சுவாசித்தபடி, நிதானமாக ஏறிச் சென்றோம். மலை உச்சியிலிருந்து, பக்தி பாடல்களும், ஓதுவார் பாடும் திருப்புகழ், கந்தரனுபூதியும் ஒலித்துக்கொண்டிருந்தன.
அரை மணி நேரத்தில், பழனி மலை உச்சியை அடைந்தோம். கிழக்கும் சற்று வெளுக்க ஆரம்பித்திருந்தது. மேலே சென்றதும், அவ்விடத்தின் அழகும், தெய்வீகமும் மனதைக் கவர்ந்தன.
நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம். அவ்வளவாகக் கூட்டம் இல்லை. முந்தைய நாள் பார்த்த கோவில் ஊழியர் சிநேகமாகச் சிரித்தார். சந்நிதியை அடைந்ததும், முதல் நாள் ராஜ அலங்காரத்தில் இருந்தவன், இப்போது ஆண்டிக் கோலத்தில் தண்டத்துடன் நிற்கும் தண்டாயுதபாணியாகக் காட்சி அளித்தான். ஆண்டியும் ராஜனாகலாம், ராஜனும் ஆண்டியாகலாம் எனும் உண்மையை போதிக்கும் தத்துவசீலனாகத் தரிசனம் தந்தான்.
மனக்கவலை எல்லாம் நீங்கி, உனக்கு அடிபணிந்து, வெறுப்பையும், கோபத்தையும் நீக்கி, மகிழ்ச்சியுடன் உனைக் கண்டு தரிசிப்பதற்கு வேண்டிய அருளை நீ தரவேண்டும் என்று அருணகிரியார் திருப்புகழில் பாடுகிறார் (மனக்கவலை ஏதுமின்றி). மேலும் பழனி திருவகுப்பான, எந்த வினையும் பவமும் என்று தொடங்கும்பாடலில் அருணகிரியார் அடுக்கடுக்காய்க் கேட்கும் அத்தனை வரங்களையும், கொடுப்பேன் என்று கூறும்படியான அருட்தோற்றத்தில் தரிசனம் காட்டிக் கொண்டிருந்தான். அகத்தில் பழனி ஆண்டவனை அன்புடன் துதித்து வெளியில் வந்தோம்.
அந்தக் கோவில் ஊழியர், எங்கள் பின்னாலே வந்து, “சார், இந்தாங்க அபிஷேக சந்தனம். வாயில போட்டுக்கங்க, மேல பூசிக்கக் கூடாது” என்று சிறு துளி சந்தனத்தை எங்கள் இருவருக்கும் கொடுத்தார். வாயில் போட்டுக்கொண்டு, அவரிடம் நூறு ரூபாய் பணம் கொடுத்ததும், திருப்திப்படாமல், “அய்யருக்கு ஐநூறு தர்றீங்க..அவரு ஒங்களுக்கு ஒண்ணும் தரலை. அபிசேக சந்தனம் சார். அவ்வளவு ஈசியா கிடைக்காது” என்றவுடன் மேலும் பணம் கொடுத்ததும், மகிழ்வுடன், இன்னும் கொஞ்சம் சந்தனம் கொடுத்தார்.
வெளியில் ப்ரகாரத்தைச் சுற்றி வந்தோம். தேவஸ்தான கடையில் பஞ்சாமிர்தமும், லட்டும் வாங்கினோம். அங்கேயே இருந்த ஒரு பழங்கால உணவகத்தில் டீ வாங்கி அருந்திவிட்டு, லட்டை உண்டோம். பிறகு யானைப்பாதை வழியாகவே, திரும்பலாம் என்று முடிவெடுத்து, நடக்க ஆரம்பித்தோம். நடுவில் ஓரிடத்தில் உட்கார்ந்து, சில திருப்புகழ் பாடல்களை, மனதுக்குள் பாடிவிட்டு, அடிவாரம் வந்து சேர்ந்தோம்.
தங்கியிருந்த விடுதி அறைக்குச் செல்லும் வழியில் இளநீர் வாங்கி அருந்தினோம் (பானுட்ட சொல்லிடாதே என்று அத்திம்பேரின் எச்சரிக்கை). அறையில் தங்கியிருந்த பெண்மணிகளுக்கு, வாட்டர் பாட்டில்களை வாங்கிக் கொண்டோம்.
காலை மணி சுமார் 9 ஆகியிருந்தது. எல்லோரும் தயாராக இருக்கவே, பெட்டிகளைக் காரில் ஏற்றிக் கட்டிவிட்டு, அடுத்த இலக்கான திருச்சியை நோக்கி எங்கள் பயணத்தைத் தொடங்கினோம்.
பானுவிடம் சொல்ல மாட்டேன் என்று கொடுத்த வாக்கை இந்த நிமிடம் வரை காப்பாற்றும் உன் பண்பை மெச்சுகிறேன். பிரதி உபகாரமாக ஏதாவது செய்ய வேண்டுமே. பின் வரும் அத்தியாயங்களில் சந்தர்ப்பம் கிடைக்காமலா போகும்…