பக்திப் பயணம்-4
கடலோரக் கடவுள்கள்
PRESS PLAY BUTTON FOR AUDIO READING
திருச்செந்தூரை அடைய இரவு 10.30 மணிக்குமேல் ஆகிவிட்டது. ரவி அத்திம்பேரும், பானுவும் ஏற்கனவே, ஹோட்டல் எஸ்.ஆர் என்ற இடத்தில் தங்கியிருந்தனர். எங்களுக்கும் ஓர் அறை பதிவு செய்து வைத்திருந்தனர். மறுநாள் சந்திக்கலாம் என்று பேசி, அறைக்குச் சென்று ஓய்வெடுத்தோம். அடுத்த நாள் காலை 4 மணிக்கு எழுந்து திருச்செந்தூர் கோவிலுக்குச் செல்ல இருந்ததால், உடனே உறங்கச் சென்றோம்.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு காலை 4.45க்கு சென்றோம். அந்த நேரத்திலும் எங்கு பார்த்தாலும் ஒளிவிடும் சர விளக்குகள். சைக்கிள் கேரியரில் டீ, காபி, வண்ண, வண்ண பஞ்சுமிட்டாய், சமோசா, சுண்டல், பனங்கிழங்கு, 5 ரூபாய் முகக் கவசம் என்று அந்த இடம் பூராவும் சகலமும் விற்றுக் கொண்டிருந்தார்கள். அது கோடை விடுமுறை சமயம் என்பதாலும், அன்றைய தினம் சஷ்டி என்பதாலும், “கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா, கடல் அலையா”, என்ற பாடல் வரிகளுக்கேற்ப அளவுக்கு அதிகமான கூட்டம் வழிந்தது.
மேலும் வைகாசி விசாக விழாவின் தொடக்கமும் அந்த வாரம். நூறு ரூபாய் நுழைவுச்சீட்டு வாங்க, ஒரு ஆயிரம் பேர் இருக்கும் க்யூ வரிசையில் நின்றோம். நத்தையைவிட மெதுவாக நகர்ந்தது க்யூ. எங்களுக்கு முன்னே, பின்னே இருந்தவர்களுடன் பேச்சுக் கொடுத்ததில், தரிசனத்துக்கு நிச்சயமாக 4 மணி நேரமாவது ஆகும் என்று புரிந்தது. எக்ஸ்ட்ரா பணம் கொடுத்து, யார் மூலமாகவாவது, செல்ல முடியுமா என்றால், அதற்கும் தற்போதைய அரசாங்கம் தடை விதித்திருப்பதாக அறிந்தோம்.
திருச்செந்தூரில் தான் சுப்ரமண்யர், சூரனை வதம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. சூரசம்ஹாரம் இங்கு விசேஷம். அசுரகுலத்தை அழித்து, வெற்றி வாகை சூடியதால், இவருக்கு “ஜெயந்திநாதர்” என்ற பெயரும் வழக்கத்தில் உண்டு. செந்தூர் முருகன், கிழக்கே கடலைப் பார்த்தபடி காட்சி தருகிறார். அதனால் இங்கு கிழக்கு வாசல் கோபுரம் கிடையாது.
ஒருவாறு நெளிந்து நெளிந்து, சந்நிதிக்கு அருகில் செல்லும்போது மணி ஒன்பது ஆகியிருந்தது. ஆண்கள் மேல்சட்டையைக் கழற்றிவிட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும். கூட்டம் நெட்டித்தள்ள சுப்ரமணியனின் திவ்ய தரிசனம் சில நிமிடங்களே கிடைத்தது.
அந்த சில நிமிட தரிசனத்தில் “நூறுமுகம் காட்டுதம்மா, ஆறுமுகம் இன்று” என்று கண்ணதாசன் சொன்னது, சர்வ நிச்சயம். ஐந்து மணி நேரம் நின்ற வலியோ, வருத்தமோ சுத்தமாக இல்லை. முருகனது எழில் ரூபமே மனதில் வியாபித்திருந்தது. “நிலையாப் பொருளை” என்று தொடங்கும் திருச்செந்தூர் திருப்புகழில், அடியார்க்கு எளிய பெருமாளே என்கிறார் அருணகிரியார். இன்னொன்றில், உன் தாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே (விறல்மாரணைந்து என்ற திருச்செந்தூர் திருப்புகழ்), இன்னொன்றில் உனை எனது உள்ளம் அறியும் அன்பைத் தருவாயே என்கிறார். (இயலிசையிலுசித என்ற திருச்செந்தூர் திருப்புகழ்). அரை நிமிஷம் த்யானித்தாலே போதுமே, அதைக் கூட அறியாதவனாக உள்ளேனே என்று அருணகிரியார் வருந்துகிறார் (சரணகமலாலயத்தை).
அடியவர்களுக்கு எளியவனாயிருக்கிறான். அவர்களின் துன்பங்களைக் களைகிறான். அவனது ஆறுமுகங்களில் ஒரு முகம், அடியார்களின் வினையைத் தீர்க்கிறதாம். இவ்வளவு பெருமைகளையும் கொண்டவன், அரை நிமிட த்யானத்திலேயே, அடியார்களுக்குத் தனை அறியத் தரமாட்டானா, என்ன ?
பன்னீர் இலை விபூதிப் பிரசாதங்களும், திருவுருவப் படங்களும் ப்ரசாதாங்களாகக் கிடைத்தன. சந்நிதி விட்டு வெளியே வந்தோம். மேலும் கூட்டம் அதிகரித்திருந்தது. கடற்கறையிலோ இன்னும் நல்ல கூட்டம். அன்று மாலை முரசு பேப்பரில், திருச்செந்தூரில் அன்று கூடிய கூட்டத்தைப் பற்றி கட்டம் கட்டி செய்தி போட்டிருந்தது. பக்கத்து கடையில் நன்னாரி சர்பத்தும், பவண்ட்டோவும் அருந்திவிட்டு, காரில் விடுதிக்குத் திரும்பினோம்.
அங்கு பானுவும், அத்திம்பேரும் வரவேற்றார்கள். நல விசாரிப்புகளுக்குப் பின், அல்வா கொடுத்தார்கள் !! (ஹி.ஹி. நான் கேட்டிருந்தபடி திருநெல்வேலியிலிருந்து வாங்கிய இருட்டுக்கடை அல்வாதான் அது)
எல்லோரும், ஓட்டலிலேயே இருந்த சரவணபவன் உணவகத்தில் ஒரு ப்ரன்ச் மாதிரி மினி டிபன், தோசை, பொங்கல், காபி உண்டோம். பிறகு அறையைக் காலி செய்து, பெட்டிகளைக் காரில் கட்டிக் கொண்டு, கன்யாகுமரி நோக்கிச் சென்றோம். திருச்செந்தூரிலிருந்து கன்யாகுமரி சுமார் 2 மணி நேர தூரம் (90km). மாலை சுமார் மூன்று மணிக்கு வந்து சேர்ந்தோம்.
கன்யாகுமரி ஸ்தலத்தில் ஹோட்டல் டெம்பிள் சிட்டி என்ற இடத்தில் தங்கினோம். ஓரளவு வசதியான பெரிய அறைகள். பெட்டிகளை வைத்துவிட்டு, கோவிலுக்குப் புறப்பட்டோம். வழியில் சுசீந்தரம் மாருதி என்ற சிறிய உணவகத்தில் காஃபி, டீ அருந்தினோம்.
கன்யாகுமரி அம்மன் கோவிலுக்குள், கைப்பை, செல்ஃபோன் அனுமதி கிடையாது. அவற்றை டோக்கன் வாங்கி, பத்திரப்படுத்திவிட்டு, உள்ளே சென்றோம். சந்நிதியில் அவ்வளவு கூட்டம் இல்லை. மேல் சட்டையைக் கழற்றிவிட்டு, விசேஷ தரிசனக் கதவைத் திறந்து கொண்டு சென்றோம்.
கருவறையில் கன்யாகுமரி அம்மன் சர்வ அலங்காரத்துடன் இருந்தாள். சற்று சிறிய சிலை. தேவியின் 51 சக்தி பீடங்களில், இங்குதான், முதுகுப் பகுதி விழுந்த இடம் என்று சொல்லப்படுகிறது. அம்பாளின் மூக்கில் அவளது ப்ரசித்தமான மூக்குத்தியும், புல்லாக்கும் ப்ரகாசித்தது. தீபாராதனை காட்டும் போது, இன்னும் ஜொலித்தது.
எங்களை சற்று முன்னே வரச் சொல்லி, அம்பாளுக்கு அர்ச்சனைகள் செய்தனர். நறுக்கிய வாழை இலையில் சந்தனமும், வாசனை மலர்களும், குங்குமமும் வைத்து ப்ரசாதங்களாகத் தந்தார்கள். பிறகு சற்று நகர்ந்து கம்பிக்கு பின்னால் வந்து, இன்னும் சிறிது நேரம் அவள் காட்டும் கருணையில் திளைத்தோம்.
ப்ரகாரத்தில் வலம் வந்தபோது, அழகிய பெரிய முட்டைக் கண்களுடன், விநாயகர் சந்தனக்காப்பில் அருள்பாலித்துக் கொண்டிருந்தார். சிறிய அழகான விநாயகர் பெரிய கண்களுடன் சிரித்துக் கொண்டிருந்தார். அவரை வணங்கி, வெளியில் வந்து, காலணிகள், செல்பேசி, கைப்பைகளை பெற்றுக் கொண்டு, கடற்கரைக்குச் சென்றோம். புகைப்படங்கள் எடுத்தோம்.
பிறகு கன்யாகுமரியிலிருந்து கிளம்பி, சுமார் 15km தூரத்திலிருக்கும் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் கோவிலுக்குச் சென்றோம்.
சுசீந்திரத்தில் ப்ரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளும், ஒரு முகமாய் தாணுமலாயன் என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார் (தாணு = சிவன், மால் = விஷ்ணு, அயன்=பிரம்மா). தாணுமாலயன் வடிவத்தில், இம்மும்மூர்த்திகளையும் குறிக்கும், லிங்கவடிவில் சாற்றப்பட்டுள்ள தங்க கவசத்தில் திருமுகமும், பதினான்கு சந்திரப் பிறைகளும், அதன் மேல் ஆதிசேஷனும் அமைந்துள்ளன. இந்திரன், அகலிகை தனக்களித்த சாபத்திலிருந்து விடுபட, இத்தலத்துக்கு வந்து மும்மூர்த்திகளையும் வணங்கி, விமோசனம் பெற்றான். தினமும் நடுநிசியில் இந்திரன் இங்கு வந்து பூஜை செய்துவருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் பதினெட்டு அடி உயரமான ஆஞ்சனேயருக்கு நடத்தப்படும் வழிபாடுகள் சிறப்பானவை.
தாணுமாலயனை தரிசித்துவிட்டுப் ப்ரகாரத்தில் வரும் போது, ஒரு பெரியவர், தாமாகவே எங்களை நோக்கி வந்து, தாணுமாலயனின் சிறப்புகளைக் கூறினார். கூடவே ஒவ்வொரு சந்நிதியாக வந்து, அவற்றின் அருமை, பெருமைகளை விளக்கினார். இங்க வாங்கோ, இதைப் பாருங்கோ, அதைப் பாருங்கோ என்று வலுக்கட்டாயமாக ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்றார். ஓர் இடத்தில் இருந்த தூண்களைக் காட்டி, ஒரு தூணில் இராமபிரான் வில்லில் அம்பு வைத்துக் குறிபார்க்க, “இந்தத் தூண்ல கண்ணை வைத்து, அம்பு வழியா பாத்தா எதிர் தூண்ல இருக்கற வாலி மட்டும் தெரியும். கொஞ்சம் அம்பிலிருந்து கண்ணைத் திருப்பினா, வாலி உருவம் தெரியாது” என்று சொல்லி, அதைப் பார்க்கச் சொன்னார். அப்படியே தெரிந்தது.
பிறகு நீலகண்ட கணபதி சந்நிதியைக் காட்டினார். ஆஜானுபாகுவான கணபதி, சக்திதேவியை இடப்புறம் அமர்த்தி காட்சி தருகிறார். சக்திதேவியை மடியில் வைத்த சிவரூபமே இந்த நீலகண்ட கணபதி என்று கூறினார். இன்னொரு பக்கம் கூட்டிச் சென்று, தட்டினால் ஒலி தரும், இசைத் தூண்களைக் காட்டினார். இந்த மாதிரி நிறைய செய்திகளைச் சொல்லிக் கொண்டே வந்தார்.
பிறகு அந்தப் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் சந்நிதிக்கு வந்தோம், மிக அருகில் எங்களை அழைத்துச் சென்று, அர்ச்சனை, ஆரத்திகளை எங்களுக்காக செய்யச் சொல்ல, அருகில் இருந்த அர்ச்சகர்களும் விமரிசையாகச் செய்தார்கள். அனுமனின் மேனி முழுதும் வெண்மாவு பூசி இருந்தது. அருகில் நின்று தரிசிக்க, அனுமன் இன்னும் ப்ரம்மாண்டமாகத் தெரிந்தார். சட்டென்று, திருத்தணியில் என் முதுகில் தட்டிய வானரத்தின் ஞாபகம் ஏனோ வந்தது.
எல்லா தரிசனங்களும் முடிந்த பின்பும் அந்தப் பெரியவர் கூடவே வந்தார். கரிய உருவம். பேச்சில் மலையாள வாடை. கசங்கி, மங்கிப் போயிருந்த நான்கு முழம் வேட்டி. அதே லட்சணத்தில் இருந்த மேல் சட்டையை கழுத்தில் துண்டு மாதிரி போட்டிருந்தார். அவரது ஏழ்மைத் தோற்றத்தை வைத்து, சரி, இவர் பணத்துக்காகத்தான், வலுக்கட்டாயமாக கைடு சர்வீஸ் பண்ணியிருக்கிறார் என்று எண்ணி, அவர் கையில் பணம் வைத்தேன்.
சட்டென்று துள்ளி, கையை உதறி, என்னதிது…இதல்லாம் ப்டாது, நோ..நோ..நோ என்று பணம் வாங்க மறுத்து, ஏதோ எனக்கு உங்களைப் பாத்ததும், இதெல்லாம் சொல்லணும்னு என் மனசுக்குப் பட்டது, அவ்வளவுதான் என்று கூறினார். அவரது பெருந்தன்மையில் நெகிழ்ந்தோம். நடந்து வந்து கொண்டிருந்தபோது, கோவில் அலுவலகத்தைப் பார்த்த அவர், கொஞ்சம் இங்கேயே இருங்கோ வந்துர்றேன் என்று சொல்லி உள்ளே போனார். சில நிமிடங்களில் ஒரு பட்டருடன் எங்களை நெருங்கி வந்தார். வந்த பட்டரும் நியூஸ் பேப்பர் சுற்றிய பெரிய பொட்டலம் ஒன்றை என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட, இவரும், இது வடைமாலை ப்ரசாதம். அனுமானுக்கு சாத்தினது. நல்லவேளை இருந்தது. கொஞ்சம் லேட்டா வந்திருந்தா கிடைச்சிருக்காது. எடுத்துக்குங்கோ என்றார்.
பிறகு அவரைப் பற்றிய விவரங்கள் கேட்ட போது, அவர் பெயர் ஶ்ரீகுமரன் என்றும், கோவில் ஆடிட் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர் என்றும் தெரியவந்தது. தமக்கு, அப்பகுதியில் உள்ள கோவில் அதிகாரிகள் அனைவரையும் தெரியும் என்று சொன்னார். வேறு எங்கெல்லாம் நாங்கள் செல்கிறோம் என்று கேட்டார். மறுநாள் பழனிக்குச் செல்ல இருக்கிறோம் என்று சொன்னதும், உடனே யாருக்கோ ஃபோன் செய்துவிட்டு, எங்களிடம் ஒரு நம்பரைக் கொடுத்தார்.
“இந்த நம்பர் குறிச்சுக்குங்கோ. இவர் பேரு சக்திகுமார். பழனில உங்களுக்கு எல்லா ஏற்பாடும் செய்வார். பழனிக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னால, அவருக்கு ஃபோன் பண்ணுங்கோ”
நாங்கள் எதுவும் கேட்காமலேயே, ஶ்ரீகுமரனும், சக்திகுமரனும், பழனி குமரன் தரிசனத்துக்கு வழிகாட்டிகளாக இருந்தது, நிச்சயமாக அந்த சிவகுமரனின் அருள் விளையாடல்தான்.
“ரொம்ப நன்றி ஶ்ரீகுமரன் சார். எவ்வளவு பெரிய உதவி பண்ணியிருக்கேள் !” என்று நன்றிப் பெருக்குடன், வலுக்கட்டாயமாக அவரை எங்களுடன் இரவுச் சாப்பாட்டுக்கு அழைத்தோம். அன்பாக மறுத்தார். அன்று சஷ்டி ஆதலால், தாம் முழுப் பட்டினி விரதம் எனவும், மிகவும் வற்புறுத்திக் கேட்பதால் ஒரு டீ மட்டும் குடிக்கிறேன் என்றும் சொல்லி, கோவிலுக்கு எதிரே இருந்த, தெப்பக்குளத்தின் அருகிலிருந்த சுசீந்தரம் மாருதி ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார்.
நல்ல குளிர் வசதி செய்யப்பட்ட உணவக அறையில் எங்களை அமர வைத்தார். எல்லோரும் அவரவர்களுக்குப் பிடித்ததை ஆர்டர் செய்தோம். தனக்கு ஒரு டீ மட்டும் போதும் என்றார். அவர் கொடுத்த வடை மாலையிலிருந்து வடைகளை எடுத்து உண்டோம். இரண்டு விதமான வடை மாலைகள் அதில் இருந்தன.
சாப்பிட்டுவிட்டு, கன்யாகுமரியில் அறைக்குச் செல்லலாம், என்று ஶ்ரீகுமரனிடம் விடைபெற்று வெளியே வந்தபோது, “அம்மங்கோயில் பாத்தேளா ?” என்றார்.
“ஓ, கன்யாகுமரி அம்மனைப் பாத்துட்டுத்தான், சுசீந்திரம் வந்திருக்கோம்” என்றோம்.
“அதில்ல. இங்க தெப்பக்குளத்துக்குப் பக்கத்துல இருக்கற முன்னுதித்த நங்கை அம்மே கோவில்” என்று சொல்லி, அவரே தொடர்ந்தார்.
“இந்த முன்னுதித்த நங்கை அம்மன் கோவில் அம்பாள் ரொம்ப விசேஷம். முதலில் இந்த அம்மனுக்கு பூஜை பண்ணப்பறம்தான், தாணுமாலயனுக்கு எல்லா பூஜையும் நடக்கும், வாங்கோ”, என்று சொல்லி எங்களை அழைத்துச் சென்றார்.
முன்னுதித்த நங்கை அம்மன் கோவில், கேரள பகவதி அம்மன் கோவில் அமைப்பில் இருந்தது. விசேஷ அர்ச்சனைகள் செய்துதரச் சொல்லி, அங்கிருந்த அர்ச்சகரிடம் ஶ்ரீகுமரன் கோரிக்கை வைத்தார். அர்ச்சகரும் அர்ச்சனைகள், ஆரத்திகள் செய்து ப்ரசாதங்களை வழங்கினார். மிகவும் சக்தி வாய்ந்தவள், வேண்டுதல்களை நிறைவேற்றுவதில் வல்லவள் என்று அந்த அர்ச்சகர் அம்பாளைப் பற்றிச் சொன்னார். முற்காலத்தில் முன்னூற்றி அம்மன் நங்கை என்ற மற்றொரு பெயரும் இருந்ததாம்.
வெளியே வந்து, ஶ்ரீகுமரனிடம் விடை பெற்றோம். அவரும் பல அன்பான சொற்கள் கூறி, பிரியா விடை கொடுத்தார். நல்ல தெய்வ தரிசனமும், நல்லவர்கள் தரிசனமும் நன்கே கிடைக்கப் பெற்று, அவற்றை சிலாகித்தபடியே, கன்யாகுமரிக்கு எங்கள் அறைக்குத் திரும்பினோம்.
கிட்டத்தட்ட எல்லா கோவில் தரிசனங்களிலும் யாராவது ஒருவர் எங்கிருந்தோ வந்து உதவுகிறார்கள். ஸ்ரீகுமரன் போன்றவர்கள் கடவுள் இருக்கான் குமாரு என்பதை உறுதிப் படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.