Travel

பக்திப் பயணம்-3

அழகன்,அன்னை,மாமன்,மாமி

PRESS PLAY BUTTON FOR AUDIO READING

சென்னையிலிருந்து காலை 7 மணிக்குப் புறப்பட்டு, மதுரைக்குச் செல்வதாக திட்டம். அறையைக் காலி செய்து விட்டு, பெட்டிகளுடன் விடுதி வாசலில் காருக்காகக் காத்திருந்தோம். காரும் குறித்த நேரத்துக்கு வருவதாகத் தெரியவில்லை. மாற்றி மாற்றி ஃபோன் செய்து, பொறுமை இழந்து காத்துக் கொண்டிருந்தோம்.

எதிர்பார்த்த கார் ஒரு வழியாக வந்தபோது மணி 9 ஆகியிருந்தது. கேட்டதில், பெட்டிகள் வைக்கும் கேரியர் கிடைக்கவில்லை என்றும், அதை மாட்டி எடுத்து வர லேட்டானது என்றும் ஓட்டுனர் முருகேசன், எந்தவித வருத்தமோ, மன்னிப்போ இன்றி சற்று அலட்சிய த்வனியில் சொன்னார். அடுத்த பத்து நாட்களுக்கு, எப்படி இந்த மாதிரி ஆளுடன் தொடர் பயணம் செல்வது என்ற கவலை இருந்தாலும், “பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும், செங்கோடன் மயூரமுமே” என்ற கந்தரலங்கார(விழிக்குத்துணை) வரிகள் ஆறுதலைத் தந்தது. அவன் மேல் பாரத்தை ஏற்றி விட்டு, பெட்டிகளையும் காரின் மேலே கேரியரில் ஏற்றிக் கட்டிவிட்டு, மதுரையை நோக்கிப் பயணித்தோம்.

வழியில் சங்கீதாவில் காலை உணவு முடித்து, ட்ரைவருடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்ததில், கொஞ்சம் சகஜமான நிலைக்கு வந்தார். அவர் தமது குடும்பப் பிரச்சினைகளைச் சொல்லி வந்ததில், அவர் மூடியாக இருப்பதன் காரணம் புரிந்தது. தன் முதல் மகன் தன்னுடன் பேசுவது இல்லை என்றார். எனக்குத் தெரிந்த ஆறுதல் வார்த்தைகளை அவரிடம் கூறி, உற்சாகப் படுத்தியபடி வந்தேன்.

ஒவ்வொரு ஊராகக் கடந்து, திருச்சி பைபாஸ் ரோடில் கார் சென்றது. திருச்சி நகரின் நடு நாயகமாக, மலைக்கோட்டை கம்பீரமாகத் தெரிந்தது. அதன் அழகினைப் பற்றிப் பேசிக் கொண்டே வந்தபோது, ஞானசம்பந்தரின் வரிகளான, “சிராப்பள்ளி குன்றுடையானைக் கூற” உள்ளமும் குளிர்ந்தது (நன்றுடையானை என்ற தேவாரப்பாடல்). அன்று அம்மையப்பனே உலகம் என்று, அவரையே சுற்றிய விநாயகன், இன்று, இங்கு தாயுமான சிவனின் தலையில் ஏறி உலகைப் பார்த்து ரட்சித்துக் கொண்டிருந்தான்.

Rockfort from Trichy Bypass Road

மலைக்கோட்டையின் மாபெரும் அழகை ரசித்துக் கொண்டே சென்றோம்.

ஏற்கனவே, மதுரையில் மணிஸ் ரெசிடென்ஸியில் ஃபோன் மூலம் அறை பதிவு செய்திருந்தோம். அதன் ஓனர், மதுரைக்கு வரும் வழியிலேயே அழகர் கோவிலும், பழமுதிர்சோலையும் இருப்பதால், அவற்றை முதலில் பார்த்துவிட்டு, மதுரைக்கு வந்தால் நேரம் மிச்சப்படும் என்றார். அதன்படி, மாலை 5 மணிக்கு அறுமுகனின் ஆறாவது படை வீடான பழமுதிர்சோலையை வந்தடைந்தோம்.

பழமுதிர்சோலை கோவில் வாசலில் காரை விட்டிறங்கி, நுழைவுச் சீட்டுகள் வாங்கினோம். கோவில் அதிகாரி, நாங்கள் கேட்காமலயே, ஒரு பையனை எங்களுக்குத் துணையாக அனுப்பி, தரிசனங்கள் செய்விக்குமாறு பணித்தார். அந்தப் பையனும் எங்களைக் கூட்டிக்கொண்டு, பழமுதிர்சோலை வெற்றிவேலன் சந்நிதிக்கு அழைத்துச் சென்றார். அர்ச்சகர் எங்களை மூலவருக்கு அருகில் அமரவைத்தார். விரிவாக அர்ச்சனை செய்து, ஆரத்தி செய்தார்.

சந்தனக்காப்பு அலங்காரத்தில், கண்களில் கருணையுடன், சிரித்த முகமாக அழகனின் அருட்காட்சி. மகிழ்ச்சியும், களிப்பும் அடையச் செய்யும் எழிலன் (மகிழ்களி கூரும் வடிவோனே), லக்ஷ்மிகரம் நிறைந்திருக்கும் மலையில் அமர்ந்தவன் (திருமலிவான பழமுதிர்சோலை மலைமிசைமேவு பெருமாளே) என்று அருணகிரியார் வர்ணிக்கும் பழமுதிர்சோலை அழகனைக் கண்குளிர தரிசனம் செய்தது எங்களின் பாக்கியம். கழுத்தில் மாலைகள் அணிவித்து, கை நிறைய ப்ரசாதங்கள் தந்தார்.

மனநிறைவுடன் ப்ரகாரத்தில் அடிப்பிரதட்சிணம் செய்தோம். உள் சுவற்றில் ஒவ்வொரு அறுபடைத் தலத்துக்குமான திருப்புகழ் பாடலைப் பெரிய எழுத்துகளில் எழுதி வைத்திருந்தார்கள். அப்பாடல்களை மனதிற்குள் படித்துக் கொண்டே, அடிப்பிரதட்சிணம் செய்தோம். சுற்றி வந்து நமஸ்காரம் செய்தவுடன், அந்தக் கோவில் அதிகாரி, ஒரு துணிப்பையைக் கொடுத்து, கையிலிருந்த மாலைகள், ப்ரசாதங்களை அதில் போட்டு எடுத்துச் செல்லச் சொன்னார்.

வெளியே வந்து, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

பிறகு, கீழே, அழகர் கோவில் எனப்படும் கள்ளழகர் கோவிலுக்குச் சென்றோம். அடிவாரத்தில் கருப்பண்ண ஸ்வாமி கோவில் இருக்கிறது. அவரை வணங்கிப் பின், கள்ளழகரை தரிசிக்க அவரின் கோவிலுக்குள் சென்றோம். கள்ளழகர் குதிரையில் ஏறி, ஊர்வலமாக வந்து மதுரை வைகை ஆற்றில் சித்திரை மாத பவுர்ணமி தினத்தில் இறங்குகிறார். ஆண்டுதோறும் நடக்கும் இவ்விழா சித்திரைத் திருவிழா எனப் பிரபலமாக அழைக்கப்படுகிறது.  கூடல் அழகனையும், மதுரவல்லித் தாயாரையும் திவ்யமாக தரிசனம் செய்தோம்.

வெளியே ப்ரகாரத்தில் ப்ரசாத விற்பனை நிலையம் இருந்தது. அழகர் கோவிலில் ப்ரசாதமாக விற்கப்படும் தோசை (அடை/வடை) மிகப் பிரபலம். கருப்பு உளுந்துடன், தானியங்களைச் சேர்த்து, இங்கிருக்கும் தீர்த்தத்தில் ஊறவைத்து, மிளகு, உப்பு எல்லாம் சேர்த்து அரைத்து, நெய் சேர்த்த எண்ணெயில் பொரித்து எடுக்கிறார்கள். சரியாக கடைசி 4 தோசைகள் மட்டுமே இருந்ததால், நான்கையும் (ட்ரைவருக்கும் ஒன்று) வாங்கிக் கொண்டோம். உபரியாக ஒரு லட்டும், தேன்குழலும் அதனுடன் சேர்த்துக் கொண்டோம். வெளியே ப்ரகாரத்தில் உட்காரக் கிடைத்த மண்டபத்தில் ஓடி ஆடும் குரங்குகளுக்கு நடுவில் அமர்ந்து ப்ரசாதங்களை, அவைகளுக்கும் கொடுத்துவிட்டு, உண்ண ஆரம்பித்தோம்.

Azhagarkovil Prasadam
Azhagarkovil Dosai Prasadam

பிறகு மதுரை நகரை நோக்கிப் பயணம். மதுரை வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரம். மீனாட்சி, சொக்கநாதர் கோவில் நடு நாயகமாக இருக்க, அதைச் சுற்றி அமைந்திருக்கிறது இந்த நகரம். அறுபடை வீடுகளில், முதல் வீடும் (திருப்பரங்குன்றம்), கடைவீடும் (பழமுதிர்சோலை) மதுரைப் பகுதியில் உள்ளன.

நாங்கள் தங்கும் விடுதியான மணீஸ் ரெசிடென்சி, மதுரை டவுன்ஹால் ரோடில் இருந்தது. டவுன்ஹால் ரோடு, சென்னை ரங்கநாதன் தெருபோல் நெரிசல் மிகுந்த இடம். ஒடுக்கமான கட்டிடத்தில் சின்னதாக, நாங்கள் தங்கும் விடுதி, மேலே மாடியில் இருந்தது. அதற்கு மாடிப்படிகள் சீராக இல்லாமல் இருக்கவே, மானேஜருக்குப் ஃபோன் செய்யவே, ஒரு பையன் அந்த மாடியிலிருந்து படிகளைத் தாண்டிக் குதித்து வந்து, கீழே எங்கள் அருகில் மூடியிருந்த ஒரு சின்ன இரும்பு ஷட்டரைத் திறந்து, “இதுக்குள்ள லிப்ட் இருக்கு. ஆபீஸ் ஃபஸ்ட் ஃப்ளோர்ல இருக்கு, நீங்க போங்க, நான் பெட்டியெல்லாம் எடுத்துட்டு வாரேன் ” என்று மதுரைத் தமிழில் சொன்னான். ஆச்சர்யப்பட்டோம். இத்தூனுண்டு இடத்தில் ஒரு எலிவேட்டர் அதற்கு ஒரு ஷட்டர். தங்குபவர்களைத் தவிர வெளியாட்கள் உபயோகப் படுத்தாமல் இருக்க, அந்த லிப்டை ஷட்டர் போட்டு மூடி வைத்திருக்கிறார்கள்.

மூன்று பேருக்கான நல்ல பெரிய அறை, ஓரளவு நவீனமாக இருந்தது. சில நிமிடங்கள் ஓய்வுக்குப் பின், டின்னருக்காக வெளியே வந்தோம். பக்கத்திலேயே ஶ்ரீசபரீஸ் என்ற உணவகம் நன்றாக இருக்கும் என்ற கேள்விப்பட்டு, அங்கு சென்றோம். அதே ரோடில், அந்நாட்களில் ப்ரசித்தி பெற்ற காலேஜ் ஹவுசும், இன்னும் சில ஹோட்டல்களும் இருந்தன.

ஶ்ரீசபரீஸ் வாசலில் அன்றைய ஸ்பெஷலாக “சுருள் பரோட்டா” என்ற பெயர் கண்ணில் பட்டது. உள்ளே அப்பிய கூட்டத்தால் சில நிமிடங்கள் காத்திருந்த பின், இடம் கிடைத்தது. சர்வர் பையன் அஸாமிலிருந்து வந்த அரைகுறை. மற்றவர்கள் தோசை, இட்லி என்று ஆர்டர் பண்ண, நான் “சுருள் பரோட்டா” என்று சொன்னேன். அவனுக்குப் புரியவில்லை. சந்திரிகா, நான் கேட்டதை, அவனுக்கு ஹிந்தியில் புரியவைத்ததும், தலையாட்டிக் கொண்டே சென்றான்.

சுருள் பரோட்டா, எந்த வடிவத்தில் இருக்கும், எத்தனை சுருளுடன் இருக்கும், மொறு மொறுப்பாய் இருக்குமா, என்று வித விதமான கற்பனைகளுடன் இருந்த எனக்கு, சுருட்டி வைத்த, தட்டையாகத் தட்டிய மெல்லிய பரோட்டாவை தட்டில் கொண்டு வந்தான். மிகவும் சுமார். அதைப் பார்த்ததும், கூட வந்திருந்த இரண்டு பெண்மணிகளும் மைண்ட் வாய்சில் கிண்டலாகச் சிரித்தது, எனக்கு நன்றாகவே கேட்டது.

Surul Parotta, Madurai

நொந்து கொண்டே அதை அரைகுறையாகச் சாப்பிட்டு விட்டு, வெளியில் தள்ளு வண்டியில் விற்ற வாழைப் பழங்களை வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினோம். அந்தப் பகுதியில் இருந்த மதுரை சுங்கிடி சேலைக் கடையைப் பார்த்துவிட்டு, மாலதியும், நாளைக்கு இங்கு வரணும் என்று சங்கல்பம் செய்து கொண்டாள்.

மறுநாள் காலை, மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றோம். ஒரு கைடு எங்களைத் துரத்தி துரத்தி வேண்டியதால், அவரை எங்களுக்கு வழிகாட்ட அமர்த்திக் கொண்டோம். கைடின் பெயர் சுப்பு என்கிற சுப்பிரமணியன். பெயர்க் காரணத்தால், மேலும் அவரைப் பிடித்துவிட்டது.

கோவிலுக்குள், செல்ஃபோன், கைப்பைகள் (மணி பர்சு தவிர) எதையும் கொண்டு செல்லக் கூடாது. அதற்குரிய காப்பிடத்தில் பணம் கட்டி, ரசீது வாங்கிக் கொண்டோம். ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித் தனியாக பாதுகாப்பு பரிசோதனைகள் செய்த பின்பு, உள்ளே செல்ல அனுமதித்தனர்.

கைடு சுப்பு, ஒரு அர்ச்சகரிடம் சொல்லி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்ய, அதற்கான தட்சிணை அந்த அர்ச்சகரிடம் பேசி முடிவு செய்தோம். சுப்புவும் மிகவும் அன்புடன் கோவிலைச் சுற்றிக் காண்பித்தார். முதலில் பொற்றாமரைக் குளம் அருகில் இருந்த விபூதிப் பிள்ளையாரைத் தரிசித்தோம். அங்கிருந்து தெரியும் கோபுரங்களைக் காட்டி, அதன் விசேஷங்களை சுப்பு விளக்கினார்.

பிறகு நேராக மீனாட்சி அம்மன் தரிசனம். அர்ச்சகர் எங்களை சந்நிதி வாசலில் அமர வைத்தார். அங்கயற்கண்ணியாம் அம்பாள், மரகதப் பச்சை உடையில், கனிவுடன் காட்சி அளித்தாள். அவளது திருமேனி மரகதக்கல்லால் ஆனது. இடது பக்கம் சாய்ந்த கொண்டையும், வலது தோளில் பச்சைக் கிளியுமாக எழில் கோலம் பூண்டிருந்தாள். அர்ச்சனை, ஆரத்திகள் சிறப்பாக முடிந்தது. எங்கள் கழுத்தில் மீனாட்சி அம்மனின் மாலைகளை அணிவித்தார்.

மீனாட்சி அம்மன் சந்நிதி விட்டு வெளியே வந்தால் முக்குறுணிப் பிள்ளையார் தரிசனம். மிகப் பெரிய பிள்ளையார். விநாயகர் சதுர்த்தி அன்று, மூன்று குறுணி அரிசி எடுத்து (சுமார் 12 படி), மாவாக இடித்து, ஒரே ஒரு பெரிய கொழுக்கட்டை செய்து இவரை வழிபடுகிறார்கள். பிறகு அக்கொழுக்கட்டை, பக்தர்களுக்கு ப்ரசாதமாக பகிர்ந்து அளிக்கப்படுகிறது. பிள்ளையாரும், தன் கரிய பெரிய உருவத்தைக் கருணையுடன் காட்டி, பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார்.

அங்கிருந்து சுந்தரேஸ்வரர் சந்நிதிக்குச் சென்றொம். சிவனே என்று அமர்ந்திருந்தார் சுந்தரேஸ்வரர். மீனாட்சி சந்நிதியில் ஆட்டமும், பாட்டமும், கூட்டமும் இருக்க, சுந்தரேஸ்வரர் சந்நிதி அமைதியாக இருந்தது. கவிஞர் கண்ணதாசனின் “சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக” என்ற வரி நினைவுக்கு வந்தது. எல்லா சக்தியும் திரண்டு சிவமானால், சாந்தி நிலை அளிக்கும் என்பதை அவ்விடத்தில் உணர முடிந்தது. இதற்கு மாறாக, சிதம்பரத்தில் நடராஜ சிவனுக்கு ஆட்டமும், பாட்டமும், கூட்டமும் உண்டு. ஆனால் “சிவ”காம சுந்தரி அம்மையின் சந்நிதியோ அமைதி கொண்டிருக்கும். சுந்தரேஸ்வரர் சந்நிதியிலும் குறைவில்லாமல், அர்ச்சனை, ஆரத்தியுடன் சிறப்பான தரிசனம் கிடைத்தது.

கைடு சுப்பு, கோவிலின் மற்ற சிறப்புகளை விளக்கிக் கொண்டு வந்தார். அவருடன் நடந்து வெளியே வந்தோம். பாதுகாப்பு அறையிலிருந்து, செல்பேசி, கைப்பைகளைப் பெற்றுக் கொண்டோம். மேற்கு கோபுர வாசலில் சில புகைப்படங்கள் எடுத்தோம்.

பிறகு விடுதிக்குத் திரும்பி, அறையைக் காலி செய்து விட்டு, பெட்டிகளைக் காரில் கட்டிக் கொண்டு, அடுத்த இலக்கான, முதல் படை வீடான, திருப்பரங்குன்றம் நோக்கிப் புறப்பட்டோம். திருப்பரங்குன்றம், மீனாட்சி கோவிலிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. சுமார் முப்பது நிமிடங்களுக்குள் திருப்பரங்குன்றம் கோவில் வாசலை அடைந்தோம்.

கோவிலில் நல்ல கூட்டம். நூற்றைம்பது ரூபாய் டிக்கட் தரிசனத்திலும் இன்னும் அதிகக் கூட்டம். வைகாசி விசாகத்துக்கான உற்சவம் ஆரம்பிக்க இருப்பதால் இத்தனை கூட்டம். கூட்ட வரிசையில் ஒரு அரை மணி நேரம் கடந்தபின்பு, திவ்யமான தரிசனம் கிடைத்தது. அர்ச்சகர் எங்கள் மூவரையும், கம்பி கேட்டைத் திறந்து, கருவறைக்கு அருகில் வரச் செய்தார். பிறகு வழக்கம்போல் அர்ச்சனை, ஆரத்தி சிறப்பாக நடந்து, எங்கள் கழுத்தில் சுப்ரமணியர் அணிந்திருந்த மாலைகள் ஏறின.

அருணகிரியார் சொல்வதைப் போல, சஞ்சலம் இல்லாது (சஞ்சலம் துஞ்சித் திரியாதே) கந்தனை நாளும் மனதில் நிறைத்து, அவன் திருவுருவை தரிசிக்க, மனம் உண்மையாகவே அன்பில் நனைந்தது. (கந்தனென்றெற்றுனை நாளும், கண்டு கொண்டன்புற் றிடுவேனோ)

மனம் நிறைந்து, ப்ரகாரத்தில் வந்து ஒரு இடத்தில் அமர்ந்தோம். திருப்பரங்குன்றம் திருப்புகழ் பாடல்களை மனம் ஒன்றிப் பாடினோம். வெளியே வந்து வழக்கம்போல் போட்டோக்கள் எடுத்துக் கொண்டோம்.

வெறும் இட்லி, தோசை என்று சாப்பிட்டு அலுத்ததால், மதிய உணவுக்காக, நல்ல காய்கறி, கூட்டுடன் இலைச் சாப்பாடு சாப்பிட விரும்பினோம். பிறகு ஶ்ரீசபரீஸ் (இது வேறொன்று, சாப்பாடு மட்டுமே கிடைக்கும்) அட்ரஸ் வாங்கி, அங்கு சாப்பிடச் சென்றோம். சாப்பாடு பிரமாதமாக இருந்தது. தாராளமாக, கீரை மசியல், முட்டைக்கோஸ் கூட்டு, சேனைப் பொரியல் என்று பரிமாறினர். நெய் கலந்த பருப்பு கேட்டுக்கேட்டு ஊற்றினர். உப்பு, பெருங்காயம் கரைத்த மோர் டம்ளர், டம்ளராக அருந்தினோம். திருப்தியான முழுச்சாப்பாடு ! அன்புடன் பரிமாறிய பெண்களுக்கு டிப்ஸ் கொடுத்துவிட்டு, நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கருகில், முதல் நாள் சங்கல்பம் செய்து வருவதாகச் சொன்ன சுங்குடிச் சேலைக் கடைக்குச் சென்றோம்.

நல்ல சுட்டெரிக்கும் மதிய வெயிலில், சேலைக் கடைக்குள் செருப்பைக் கழட்டி விட்டு உள்ளே நுழைந்தோம். ஏ.சி போட்டு, பெரிய பாய் விரித்து புடவை வியாபாரத்துக்கு சிப்பந்திகள் தயாரானார்கள். செளராஷ்டிரர்கள் நடத்தும் கடை. தாடி வைத்த, வயதான கடை ஓனரும், அவரது 3 மகன்களும் சிப்பந்திகளாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். இன்னொரு இளைய மகன், தன் புதிய அழகான நாய்க்குட்டியுடன் ஓனர் பக்கத்தில் அமர்ந்திருந்தார்.

Madurai Saree Shop

கடையில் இருக்கும் அத்தனை புடவைகளையும் இரண்டு மணி நேரத்துக்கு மேல் அலசி, ஆராய்ந்து, வேண்டிய சுங்குடிச் சேலைகளை பேரம் பேசி வாங்கிக் கொண்டோம்.

பக்கத்துக் கடை, மதுரை ஃபேமஸ் ஜிகர்தண்டா. மதுரைக்கு வந்து ஜிகர்தண்டா சாப்பிடாமல் போவதாவது ? காரில் சேலை மூட்டைகளை அடைத்துவிட்டு, ஜிகர்தண்டா கடை வாசல் சென்றோம். ஜிகர்தண்டா என்ற ஹிந்தி சொல்லுக்கு, cool heart  என்று அர்த்தமாம்.

Madurai Famous Jigartanda
Jigartanda
Jigartanda Experience

வெயிலுக்கு இதமாக, ஜிகர்தண்டா, இதயத்தை மட்டும் அல்ல, நாவையும், வயிற்றையும்  நன்றாகவே குளிரச் செய்தது. அதன் சுவை அருமையை சிலாகித்துக் கொண்டே, அடுத்த கோவிலான ஶ்ரீவில்லிப்புத்தூர் நோக்கிச் சென்றோம்.

ஶ்ரீவில்லிப்புத்தூர், மதுரையிலிருந்து சுமார் 2 மணி தூரத்தில் இருந்தது (80KM). திருப்பாவை தந்த ஆண்டாள் அவதரித்த மண். பெரியாழ்வாரால் பேணி வளர்க்கப்பட்டவள். அரங்கனுக்கான மாலையை அணிந்து பார்த்து, பின் ஶ்ரீரங்கம் சென்று அந்த அரங்கனையே மணம் புரிந்தவள். ராமானுஜர், அவளைத் தன் சகோதரியாக பாவித்து வணங்கினார். இக்கோவிலின் கோபுரம்தான், தமிழ்நாடு அரசின் இலச்சினையில் இருப்பதாக நம்பப்படுகிறது. மாலை சுமார் 5 மணிக்கு கோவிலை அடைந்தோம். கோவில் வாசலில் நிறைய பால்கோவா கடைகள். எங்கும் பால் மணம் வீசிக்கொண்டிருந்தது. இங்குள்ளவர்களை பால் மணம் மாறாதவர்கள் எனலாமோ ?

ஏதோ ஒரு வாசல் வழியாகக் கோவில் உள்ளே நுழைந்ததும் இடப்புறம் கூரத்தாழ்வான் சந்நிதி. அங்கு சென்று தீர்த்தம், சடாரி பெற்றுக் கொண்டு வெளியே வந்தால், அருகில் மண்டபத்தில் ப்ரபந்த கோஷ்டி பாடிக்கொண்டிருந்தது. மேலும் உள்ளே சென்று ஆண்டாள் சந்நிதிக்குச் வந்தோம். பத்துப் பதினைந்து பக்தர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

அப்போது தினமும் ஆண்டாளுக்கு, கிளி பொம்மை செய்து கொண்டு வருபவர் வர, அவரிடம் அக்கிளியை ஒரு பட்டர் வாங்கி, ஆண்டாளின் இடது தோளில் வைத்தார். அன்று காலை மதுரை மீனாட்சி அம்மையின் வலது தோளில் பார்த்த கிளியை, இப்போது, அதே நாள் மாலை நேரம், ஆண்டாளின் இடது தோளிலும் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதிலிருந்துதான் right wing, left wing என்ற சொல்லாட்சிகள் வந்திருக்குமோ என்று அசட்டுத்தனமாக மூளையில் உதித்தது. வலமோ, இடமோ, மேலோ, கீழோ எல்லாம் ஒன்றே என்ற அத்வைத எண்ணம் அதே மூளையில் உதித்து, அந்த அபத்த சிந்தனையைக் கிள்ளி எறிந்து, “காலையும் நீயே, மாலையும் நீயே” என்ற பாடல் வரியை ஞாபகப் படுத்தியது.

ஆண்டாள் தரிசனம் அருமையாகக் கிடைத்தது. தீப ஆராதனைகள், தீர்த்தம், சடாரி சேவைகள் ஆனபின், ஒரு பட்டர் வெளியே வந்து ஒரு பெரிய துளசிமாலையை எங்களிடம் அளித்தார். பக்தியுடன் கையில் வாங்கி, கண்களில் ஒற்றிக் கொண்டோம். இரண்டு துளசி இலைகளைப் பிய்த்து வாயில் போட்டு மெல்ல, வறட்டு தாகம் தணிந்தது. பெரிய கோவில். ப்ரகாரத்தில் நின்று வழக்கம்போல படங்கள் எடுத்துக்கொண்டோம்.

கோவிலை விட்டு வெளியே வந்து, அங்கிருந்த கடையில் கற்கண்டு பால் அருந்திவிட்டு, கொஞ்சம் பால்கோவா பாக்கெட்டுகள் வாங்கிக் கொண்டோம். மணி கிட்டத்தட்ட ஆறரை ஆகியிருந்தது. ஶ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து, இன்னும் ஓர் இரண்டரை மணி நேரப் பயணம் செல்ல வேண்டும். எங்கே செல்கிறோம் ? முருகனின் புகழ் வாய்ந்த, இரண்டாம் படை வீடான திருச்செந்தூருக்கு !!

One thought on “பக்திப் பயணம்-3

  1. அழகர்கோவில் தோசை, சபரீஷ் சுருள் பரோட்டா, பேமஸ் ஜிகிர் தாண்டா, ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா – இடையே மானே தேனே என்று கொஞ்சம் அருணகிரிநாதர், ஞானசம்பந்தர், அத்வைதம் .. இத்தியாதி தூவியிருப்பது இது பக்திப் பயணம் தான் என உறுதிப் படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *