Travel

பக்திப் பயணம்-2

கந்தன் தந்த கல்யாண மாலை

PRESS PLAY BUTTON FOR AUDIO READING

திருத்தணிக்கு காரில் சென்றால், சென்னையிலிருந்து சுமார் இரண்டரை மணி நேரம் ஆகும் என்று கூகுள் சொன்னது. நேரக் குறைவாலும், அறுபடை வீட்டுக் கோவில்களுக்கு இடையேயான தூரத்தாலும், திருப்புகழில் சொன்ன வரிசைப்படி அக்கோவில்களுக்குச் செல்ல இயலவில்லை. ஆகவே, ஐந்தாவது படை வீடான திருத்தணி சென்னைக்கு அருகில் இருக்கவே, எங்கள் அறுபடை முருகன் வழிபாட்டை திருத்தணியிலிருந்து தொடங்க முடிவு செய்தோம்.

மதியம், சென்னை தி.நகரில், நாங்கள் தங்கியிருந்த விடுதி வாசலுக்கு, இன்னோவா வாடகைக்கார் வந்தது. நான், மாலதி, சந்திரிகா, ரமா, ஸ்வேதா ஆகிய ஐந்து பேரும் பிற்பகல் சுமார் மூன்று மணிக்கு திருத்தணி நோக்கிப் பயணமானோம். கார் ஓட்டுநர் கருணாகரன் பொறுமையாகவும், நிதானத்துடனும் ஓட்டி வந்தார். பூந்தமல்லி ஹைரோடில் வழக்கம்போல நெரிசல். கார் மெதுவே ஊர்ந்தது.

பின்னால் உட்கார்ந்திருந்த பெண்மணிகள், அரட்டைக் கச்சேரியில் மூழ்கிவிட, சுட்டெரிக்கும், மாலை வெயிலில் முன்னால் அமர்ந்திருந்த என் உடல் வைட்டமின்-டியை சேகரித்துக் கொண்டிருந்தது.

எந்த ஊர் சார் என்று கருணாகரன் பேச்சை ஆரம்பித்தார். யார் வந்து, எந்த ஊருனு எப்ப கேட்டாலும், பெங்களூர், பாம்பேன்னு சொல்லணும், அமெரிக்கானு சொன்னா, நம்மளை ஏமாத்தி எக்கச்சக்கமா பணம் பறிச்சுண்டு மொளகா அரைச்சுடுவான்னு மனைவி எச்சரித்திருந்தது ஞாபகம் வந்ததால், பெங்களூர் என்று பொய் சொன்னேன்.

“வேண்டுதலுக்குப் போறீங்களா, சார் ?”

“ஆமாம்”

“எல்லா ஆறுபடைக் கோவிலுக்கும் போறீங்க போல. கம்பெனில சொன்னாங்க. நல்ல விசயம் சார். நாங்களும் முருகங்கோயிலுக்குத்தான் அடிக்கடி போவோம் சார்”

“அப்டியா ! வெரிகுட். மத்த கோவில் போறதுக்கு, எங்களுக்கு நீங்கதான் ட்ரைவரா வர்றீங்களா?”

“இல்லை சார். எனக்கு வேற ரூட்ல டூட்டி. வேற ஒருத்தர் வருவாரு”

போக்குவரத்து நெரிசலும் வெயிலும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஒரு கடையில் நிறுத்தி, “கூலிங்” வாட்டர் பாட்டில்களை வாங்கிக் கொண்டேன்.

“நாங்க மார்ச் மாசம் கோவில் கும்பாபிஷேகம் பண்ணோம் சார். அப்ப எல்லாரும் சேந்து அருணகிரியாரோட சில திருப்புகழையும் பாம்பன் ஸ்வாமிகளோட சில பாட்டுக்களையும் புத்தகமா போட்டிருக்கோம் சார்” என்றார் கருணாகரன்.

“அப்டியா. நல்லது. திருப்புகழ்லாம் பாடுவீங்களா ? “

“வீட்டுல பாடுவாங்க. பிள்ளைங்களுக்கும் தெரியும்… சார், ஒங்களுக்கு முன்னால இருக்கற பாக்ஸை தொறங்க. அதுல ஒரு புஸ்தகம் வச்சிருக்கேன். நீங்க வச்சுக்கங்க”

பாக்சைத் திறந்து புத்தகத்தை எடுத்தேன். பாம்பன் ஸ்வாமிகள், அருணகிரிநாதர் படங்கள் அச்சிடப்பட்டு, கும்பாபிஷேக அன்பளிப்பு என்று அட்டையில் போட்டிருந்தது. உள்ளே பார்க்கையில், எனக்குப் பரிச்சயமான சில திருப்புகழ் பாடல்களும், பாம்பன் ஸ்வாமிகளின் சில பாடல்களும் அதில் இருந்தன. முருக பக்தியை ஈர்க்கும் விதமாக, ஒரு காம்ப்ரஹென்சிவ் கையேடுபோல் இருந்தது. பக்கங்களைப் புரட்டி பாடல்களைப் படித்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் சென்றது.

“நல்லா இருக்கா சார் ?”

“ரொம்ப நல்லா இருக்கு. எல்லாரும் படிக்கற மாதிரி எளிமையான பாடல்களா இருக்கு”

“ஆமா சார் ! உங்களை மாதிரி முருகனைக் கும்புடறவங்க நிறையப் பேருக்குக் கொடுத்தோம்.”

“நன்றி கருணாகரன்”

பிறகு தன் குடும்பத்தைப் பற்றிச் சொன்னார். குடும்பத்துடன் ஏதாவது ஒரு அறுபடை முருகன் கோவிலுக்கு, வருடத்துக்கு ஒரு முறை கட்டாயம் சென்று வருவதாகக் கூறினார்.

ஒரு முருக பக்தருடன், முருகனைப் பற்றிப் பேசிக் கொண்டே பயணம் சென்றது சுகானுபவமாய் இருந்தது. கார் இப்போது நெரிசலில் தப்பித்து,  வேகமெடுக்க, திருத்தணி கோபுரமும் காரிலிருந்து தெரிய ஆரம்பித்தது.

 Thiruththani Temple Gopuram

காரைப் பார்க் செய்து விட்டு, கடைகள் வழியாக கோவிலுக்குச் சென்றோம். வழியில் குரங்குகள் குறுக்கும், நெடுக்கும் தாவிக் கொண்டிருந்தன. நுழைவுச் சீட்டு வாங்கும் போது, தற்போது அபிஷேகத்திற்காக மூடி இருப்பதாகவும், ஆறுமணிக்கு மேல் உள்ளே செல்லலாம் என்றும் கூறினர். இன்னும் ஒரு இருபது நிமிடங்கள், ஆறு மணி ஆவதற்கு இருக்கவே, பிரகாரத்தில் வலம் வந்தோம். சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

  Thiruththani Temple

மதிற்சுவரை ஒட்டி நின்று புகைப்படம் எடுத்தபோது, கீழே படத்தில் அம்புக்குறி காட்டும் ஒரு வானரம் என் முதுகைத் தன் கைகளால் தட்டி, ஏதோ கேட்க முயன்றது. ஆ, ஊ என்று கத்திக்கொண்டு, மற்றவர்கள் தூரமாக ஓடிச் சென்று விட, நான் மட்டும் ஏதோ குருட்டு தைரியத்தில் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தேன். வானரமும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது.

Monkey in the Selfie
Monkey that patted my back

அருணாச்சலம் திரைப்படத்தில், ஒரு குரங்கு, ரஜினியின் ருத்திராட்சத்தைப் பிடுங்கி எறிந்து, அவரைப் பெரிய பணக்காரனாக ஆக்கும். அது மாதிரி இது ஏதாவது என்னிடம் செய்யப் போகிறதோ என்று நான் கனவு காண, அது என்னை அலட்சியமாகப் பார்த்துவிட்டு தவ்விச் சென்று விட்டது.

மணியும் ஆறு ஆகிவிட்டதால், படிகள் ஏறி கோவிலுக்குள் சென்றோம். வள்ளி, முருகன், தெய்வானை சந்நிதிகள். வள்ளியை வணங்கி பிரசாதங்கள் வாங்கிக் கொண்டபின், பக்கத்தில் முருகன் சந்நிதி சென்றோம். அப்பொழுதுதான் அபிஷேகம் ஆகி, அலங்காரம் முடிந்திருந்ததால், பக்தர்கள் கூட்டம் நிறைய இருந்தது. அர்ச்சகரும், முருகனுக்கு தீபாராதனை காட்ட, அழகனாம் ஆறுமுகனை ஆசை தீரக் கண்டோம். அருகில் தெய்வானை சந்நிதியில் எங்களை அமரச் சொல்லி, தெய்வானைக்கு அர்ச்சனை செய்தார்கள். தரிசனம் முடித்து வெளியே வந்தோம்.

மூலவர் சந்நிதிக்கு வெளியே, மண்டபத்தில், உற்சவ மூர்த்தியான முருகனுக்கு, அன்று வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடந்து முடிந்திருந்தது. ஏராளமான பக்தர்கள் அங்கே கூடியிருக்க, அருகில் போக முடியாமல், நாங்கள் படியில் ஏறி நின்று பார்த்துக் கொண்டிருந்தோம்.

அங்கிருந்த அர்ச்சகர் ஒருவர் எங்களிடம், முன்னே வருமாறு சைகை காட்டி அழைத்தார். சற்றுக் கூட்டத்தை விலக்கி முன்னே சென்றவுடன், தீபாராதனை காண்பித்து, எதுவும் பேசாமல், என் கையிலும், என் மனைவி கையிலும் ஆளுக்கு ஒரு மாலையைக் கொடுத்து, மாலை மாற்றிக் கொள்ளச் சொன்னார். நிஜமாகவே மெய் சிலிர்க்கும் அனுபவம்.

எங்கோ நின்றிருந்தவர்களை அருகில் அழைத்து, முருகன் திருக்கல்யாண கோலத்தின் முன்னால், எங்களிடம் மாலைகளை அளித்து, அவற்றை மாற்றிக் கொள்ளச் சொன்னது சற்றும் எதிர்பாராதது. ஆனந்த அனுபவம் என்பது இதுதான் போலும். அதற்குப் பிறகுதான், எனது அறுபதை, சந்திரிகா அர்ச்சகரிடம் சொல்ல, திரும்பவும் ஸ்பெஷலாக அர்ச்சனை, ஆராதிகள் செய்து, இன்னொரு முறை மாலை மாற்றிக்கொள்ளச் சொன்னார்கள்.

அருணகிரியார் திருத்தணி திருப்புகழ் ஒன்றில் (நினைத்த தெத்தனை) கூறியதைப் போல, முருகப் பெருமான், நாம் நினைத்ததை எந்த அளவும் குறையாது நிறைவேற்றி வைப்பவன், நம்மை நிலையான ஞானத்தை விட்டுப் பிரியாமல் இருக்க வைப்பவன், பக்தர்களின் அன்புக்கு இரங்கும் எளியவனாக இருப்பவன். அத்தகைய முருகனை, திருத்தணியில் கண்டு கொண்டு இன்புற்ற அனுபவம் வார்த்தைகளில் வடிக்க இயலாதது.

கை நிறைய, ப்ரசாதங்கள் பெற்றுக் கொண்டு, மனது நிறைய மகிழ்வுடன், கழுத்தில் மாலையுடன், வெளியே வந்து படங்கள் எடுத்துக் கொண்டோம்.

Thiruththani Temple

வானம் இருட்டத் தொடங்கியிருந்தது. திருத்தணி திருப்புகழ் பாடல்கள் இரண்டை, ப்ரகாரத்தில் அமர்ந்து மனம் உருகப் பாடினோம். சுற்றி வந்து மேலும் சில படங்கள் எடுத்துக் கொண்டோம்.

உள்ளே இருந்த ஒரு கடையில், லெமன் சால்ட் சோடாவும், பன்னீர் சோடாவும், பவண்ட்டோவும், ஃபாண்டாவும் என்று அவரவர் விருப்பத்துக்கு அருந்தினோம். பிறகு காரை நோக்கி நடந்து வரும்போது, திரும்பவும் நா வறண்டு, தாகம் எடுக்கவே, இன்னொரு கடையில் அமர்ந்து நன்னாரி சர்பத் அருந்தினோம். சந்திரிகா விரும்பியபடி, மேலும் இரண்டு பவண்டோ பாட்டில்களை வாங்கிக் கொண்டு, காரை நோக்கிச் சென்றோம்.

சென்னை திரும்பும் வழியில் பூந்தமல்லிக்கு அருகே, சங்கீதா உணவகத்தில் இரவு உணவாக, இட்லி, இடியாப்பம், தோசைகள் உண்டோம். மறுநாள் காலையிலிருந்து, ஒரு பத்துப் பனிரெண்டு நாட்களுக்குப் பெரும் பயணம் தொடங்க இருப்பதால், அறைக்குத் திரும்பியவுடன் உறங்கத் தொடங்கினோம்.

One thought on “பக்திப் பயணம்-2

  1. “எனக்கு வேற ரூட்ல டூட்டி. வேற ஒருத்தர் வருவாரு” இதற்கு அடுத்த வரியாகக் கீழ்க்கண்ட வார்த்தையை சேர்த்திருக்கலாம்.
    அந்த வேற ஒருத்தர் யார் வரப் போறாறு எனத் தெரியாமல் பின் இருக்கையில் மாலதி கள்ளங்கபடில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *