பக்திப் பயணம்-12 (நிறைவு)
ஞானம் சிறு துளி
PRESS PLAY BUTTON FOR AUDIO READING
மைசூரில் மூன்று நாட்கள், சென்னை மற்றும் தென்தமிழகப் பகுதிகளில் பதினோரு நாட்கள் என்று தொடர்ந்த இந்த பக்திப் பயணத்தால் கிடைத்தது என்ன ? அனுபவங்களும், அந்த அனுபவங்களை உணர்ந்து தெளியும் அகக் கண்களும். கண்ணதாசன், ஒரு கவிதையில், அனுபவம் என்பதே ஆண்டவன் என்று முடித்திருப்பான். அந்த அனுபவங்களைச் சரியாக இத்தொடரில் சொல்ல முடிந்ததா ? இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் முழுமையான திருப்தியான அனுபவம் கிடைத்தது என்பதை உறுதியாகக் கூற முடியும்.
ஜனவரி மாதம், பானுவும், அத்திம்பேரும் எங்கள் அகம் வந்திருந்தபோது, பேச்சு வாக்கில் எந்த வித முன் திட்டமும் இன்றி, இந்தியா வரும்போது, எல்லா அறுபடை வீடுக் கோவில்களையும் ஒரு சேர தரிசிக்கும் விருப்பம் இருப்பதைக் கூறினேன். அவர்களும் எல்லோரும் சேர்ந்து போகலாண்டா, என்று சொல்ல, இச் சம்பாஷனையைக் கேட்டுக் கொண்டிருந்த தேவதைகள் “ததாஸ்து” என்று சொல்லியிருக்க வேண்டும்.
கொரோனாவின் வீரியம் சற்றுக் குறைந்திருந்ததாலும், சர்வதேச விமானப் பயணக் கெடுபிடிகள் தளர்ந்திருந்ததாலும், ஒரு மூன்று வார விடுப்பில் ஜூன் மாதம் இந்தியா சென்று வரலாம் என்று முடிவாகியது. முக்கியமாக அறுபடை வீடு, மாலதியின் சமயபுரம் வேண்டுதல், குல தெய்வம் கோவில் தரிசனம் என்ற மூன்று மட்டுமே எங்கள் திட்டத்தில் இருந்தது.
ஏப்ரல் மாதத்திலிருந்து அத்திம்பேரும் பெரிய ஸ்ப்ரெட்ஷீட்டில் பயணத் திட்டத்தைக் கட்டம் கட்டி, மஞ்சள், பச்சை வண்ணங்களில் ஹை-லைட் செய்து, துரத்திக் கொண்டே இருந்தார். அது கடைசி நிமிடம் வரை பல மாற்றங்களுக்கு உள்ளாகி, இப்போது இத்தொடரில் கூறிய பயணமாக ஆகிவிட்டது. எவ்வளவுதான் திட்டம் போட்டாலும், தீர்மானிப்பது அவனல்லவா !!
அவன் அருளாலே, அவன் தாள் வணங்கி, என்று மணிவாசகர் சொல்வது போல, இந்தப் பயணம் முழுதும், அவன் அருள் நிரம்பி வழிந்தது என்பது அனுபவ உண்மை. நாடோடிகள் போல், கிடைத்த இடத்தில் தங்கி, உண்டு, தரிசித்த கோவில்கள் யாவற்றிலும் மனம் நெகிழ வைக்கும் அனுபவம் பெற்றோம். அறிமுகம் இல்லாத நபர்கள், தாமாகவே அறிமுகம் செய்து கொண்டு, அவர்களாகவே முன்வந்து செய்த அனுகூலங்கள் இனிமையானவை. இவையெல்லாம் அவன் அருளால் கிடைத்த வரங்கள் அன்றோ? இந்த வரங்களை அறிந்து தெளிந்து உணரும் பேரானந்த நிலையே, ஞானமன்றோ?
ஒவ்வொரு உயிரும், அந்தப் பரஞானத்தின் சிறு துளியோடு பிறக்கிறது. பூவுலகில் பிறந்த பிறகு, லௌகீக வாழ்க்கையில் ஈடுபட்டு, ஒவ்வொரு நாளும் மாயா வினோதங்களின் வீரியம் வளர வளர, அறியாமை எனும் திரை வளர்ந்து, அப்பிறப்போடு வந்த ஞானத் துளியின் இருப்பிடம் காட்டாது மூடிவிடுகிறது. இந்த அறியாமை என்னும் மூடி, தெய்வ பலம் குறையக் குறைய, அடர்த்தி அதிகமாகி, கல்போன்று இறுகி, ஞானத்தை அறிந்து கொள்ளத் தடையாக இருக்கிறது. இதையே அருணகிரியார் “நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக” என்று கந்தரனுபூதியில் சொல்கிறார்.
பக்தி பெருகப் பெருக, நல் அனுபவங்கள் சிறுகச் சிறுக சேரும். ஒவ்வொரு நல்ல அனுபவமும், அந்த அறியாமைத் திரையில் ஓட்டை போடும். ஒட்டு மொத்தமாகச் சேர்ந்த ஒருகட்டத்தில், மொத்த அறியாமைத் திரையும் கிழியும். நெஞ்சக் கல் நெகிழ்ந்து உருக, உள்ளே இருந்து ஞான ஒளி வீசும்.
பக்தி என்றால் எப்படிப்பட்ட பக்தி ? திண்ணப்பனை, கண்ணப்பன் ஆக்கும் பக்தி ! தன்னை இழந்த நிலை. ரமண மகரிஷி கூறுவதும் அஃதே ! சாதாரணமில்லை அது. ஒன்பது விதமான பக்தி முறை சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாது, சுயநலமில்லாத அன்பினை எல்லாச் செயல்களிலும் ஈடுபாட்டுடன் காட்டுவது என்பதே, பக்தி எனப்படுவது. சொல் ஒன்று, செயல் ஒன்று என்றில்லாமல், மனம், வாக்கு, காயம் என்ற மூன்று நிலைகளிலும் ஒன்றாக இருப்பது. மனம், மொழி, மெய்யாலே தினம் உன்னைத் துதித்து என்ற கணபதியே வருவாய் பாடல் வரி ஞாபகம் வருகிறதா? தான் வணங்கும் தெய்வத்திடம் தன்னை முழுமையாக ஒப்படைப்பது. எல்லாம் அவன் செயல் என்று பொறுப்பை ஒப்படைத்து, விளைவுகளைப் பற்றி எந்த வித வருத்தமோ, கொண்டாட்டமோ இல்லாமல், நடுநிலையாக இருப்பது.
அருணகிரியாரும், தாயுமானவரும், பட்டினத்தாரும் இன்னும் பல மெய்யடியார்களும் இதே மெய்ப்பொருளை அவரவர் பாணியில் தங்கள் படைப்புகளில் உணர்த்துகின்றனர். அருணகிரியார் பக்திப் பெருக்கில் அனுபூதி நிலை அடைந்ததும், “எல்லாம் அற, எனை இழந்த நலம், சொல்லாய் முருகா” என்று, முருகனிடம், எல்லாம் அற்று வீழ, என்னை இழந்து பெற்ற அந்த “நலம்” எப்படி என்று எனக்குச் சொல்வாய் என்று கந்தரனுபூதியில் சொல்கிறார். மேலும், அதே அனுபூதியில், “யானாகிய என்னை விழுங்கி, வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே” என்று நெத்தியடியாகச் சொல்கிறார். சரி அவர் எதற்கு எல்லாவற்றுக்கும் கந்தனையே வலியுறுத்துகிறார் ?
கலியுகத் தெய்வமாக இருப்பவன் கந்தன். சிவனால் உருவான காரணத்தால், அவன் சிவாம்சம் பொருந்தியவன். அன்னை பார்வதி தேவி அவனுக்கு ஞானவேலை அளிக்க, அதனால் மும்மல அரக்கனை அழித்தவன். மூத்தவன் கணபதி உதவ, வள்ளியை மணம் புரிந்தவன். திருமாலின் அன்பான மருமகன். தேவேந்திரனைக் காத்தவன். சிவனுக்கு உபதேசித்த பரமகுரு. அத்தனை தெய்வங்களாலும் அரவணைக்கப்படும் அழகன். எல்லோர்க்கும் எளியவன். முருகா என்று ஒரு தரம் மட்டும் ஒருவர் ஓதினாலே போதும், அவர் தலையில், தன் பாதங்களை வைத்து அருள்கிறான், என்று எருவாய்க் கருவாய் என்று தொடங்கும் திருப்புகழில் கூறுகிறார். இத்தனை சிறப்புகள் கொண்டவனாக, முருகப் பெருமானை, திருப்புகழில் அருணகிரியார் காட்டுகிறார். அதனால், அவனை தெய்வமாகக் கொள்வோர், அத்தனை தெய்வங்களின் கருணைக்கும் பாத்திரமாகிறார்கள்.அதனால்தான், அவன் “சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை” என்ற கூற்றுக்குப் பொருந்தியவனாகிறான் !
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே, என்று முருகனை நோக்கி அருணகிரியார் வேண்டிக் கேட்கிறார். அந்த அடிப்படையில், அதே முருகனை ஞான குருவாகக் கொண்டு, அவன் அருள் ஞான அமுதைப் பெற வேண்டிப் புனைந்த, கீழ்க்கண்ட பாடலுடன் இத்தொடர், இத்துடன் நிறைவு பெறுகிறது.
ராகம்: ரீதிகௌளை தாளம்: ஆதி
பல்லவி
விரைவாய் வந்தருள் புரிவாய் – என் மனம்
அலையாதிருந்திட, நிலையாய்த் தொடர்ந்திட (விரைவாய்)
அனுபல்லவி
குருவாய் அமர்ந்து, என் குறைகள் களைந்து – நல்
மருந்தாம், ஞானப் பொருளை
விருந்தாய் வழங்கிட (விரைவாய்)
சரணம்
வேலா வினோத லீலா பாலா தெய்வ
வள்ளி பாகா சுப்ரமண்ய வீரா….
சூரர் குலம் அழித்த, வேலாயுதம் தரித்த,
தீரா, செந்தூரா, என் தீரா வினை தீர்க்க
முடுக்கு
சுந்தரன் உடனுறை மீனாட்சி மைந்தனே…
சந்ததம் பணிந்தேன் மயில் மீதமர்ந்து (விரைவாய்)
அற்புதமான நிறைவு அத்தியாயம்.
நீ அருணகிரிநாதரையும் இன்னும் பல மகான்களையும் ஆழப் படித்திருப்பது தெரிகிறது.
அவர்கள் ஆசியும் ஆறுபடை வீட்டு முருகன் அருளும் என்றும் உன்னைக் காக்கட்டும்.
மிக்க நன்றி
அழகான கணபதியை
அறுபடை அதிபதியைக் குலதெய்வமாய்விளங்கும் கடம்பங்குடியாளை விழியழகி அபிராமி வெட்டவெளி வெக்காளி சமயபுரத்தாயை ஸ்ரீரங்கப் பெருமாளைச் சோலை ஆண்டவரை அரைக்காசு அம்பாளைக் கன்னிபரமேஸ்வரியைக் கைகூப்பும் ஹனுமானை …… இன்புறு சிந்தைமகிழ் இன்னபிற திருக்கோவில் என்புருகப்பாடிப் பக்தியால் பணிந்தேத்தி “யான்பெற்ற பேறு பெருகட்டும்” என்றெண்ணி எங்களையும் ஒருபொருட்டாய் இணைத்துக்கொண்டாயோ? எதுவும் நானறியேன்! எமக்கில்லை அனுபவமே! புதிதாய்ப் பிறந்தாற்போல் பேரின்பம் அடைந்திட்டேன்!அன்பை நான்உணர்ந்தேன்!ஆங்காங்கே மெய்சிலிர்த்தேன்!உண்மையின் உரைகல்லாய் உன்பதிவைப் போற்றுகின்றேன்!
மிக்க நன்றி !