Travel

பக்திப் பயணம்-11

திருக்கடையூரிலிருந்து தியாகராய நகர்

PRESS PLAY BUTTON FOR AUDIO READING

அடுத்த நாள், ஜூன் 12, ஞாயிற்றுக் கிழமை. சீக்கிரமே தயாராகி, சதாபிஷேக ஓட்டலின் மிதுனம் ரெஸ்ட்டாரண்டில், சமையல்காரரை எழுப்பி, காபி, டீ போடச் சொல்லிக் குடித்து விட்டு, கோவிலுக்கு நடந்தோம்.

திருக்கடையூர் கோவிலில் ஆங்காங்கே, நிறைய தம்பதிகள் தங்கள் குடும்பத்தாருடன் காணப்பட்டனர். முதலில் அமிர்தகடேஸ்வரர் சந்நிதிக்குச் சென்றோம். கூட்டம் அப்பியது. அபிஷேகம் ஆகிக் கொண்டிருப்பதால், சற்று நேரம் காத்திருந்தோம். அமிர்தகடேஸ்வரருக்கு அர்ச்சனை, ஆரத்தி ஆகி, விபூதி ப்ரசாதம் வாங்கியபின்பு, அதன் பக்கத்தில் இருக்கும் கால பைரவர் சந்நிதி நோக்கி, அதே கூட்டம் திரும்பி நின்றது. அங்கும் சில மணித்துளிகள் காத்திருந்த பின், ஆராதனை முடித்து, வெளியில் வந்தோம்.

நேராக, அபிராமி அம்மன் சந்நிதிக்குச் சென்றோம். அங்கும் கூட்டம் இருந்தது. முதலில் சந்நிதி மண்டபத்தில் அமர்ந்து, மாலதி, பானு, நான் மூவரும் அபிராமி அந்தாதி படித்தோம். மொத்தம் நூறு பாடல்கள். சுப்பிரமணிய பட்டர் என்ற அக்கோவிலின் அர்ச்சகர், அரசர் கொடுத்த தண்டனையிலிருந்து தன்னைக் காக்க வேண்டி, அபிராமியைத் துதித்து அருளிய அந்தாதி. அவர் அதைப் பாடி வரும் போது, எழுபத்தொன்பதாவது செய்யுளான, “விழிக்கே அருளுண்டு” என்ற பாடலைப் பாடும் போது, அன்னை அபிராமி தோன்றி, தன் காதுக் கம்மலை வானில் வீசி, அதன் ஒளியில் அமாவாசை நாளைப் பௌர்ணமி நாளாக்கித் தன் பக்தன் சுப்பிரமணியனை, அரச தண்டனையிலிருந்து காப்பாற்றினாள் என்று புராணம் கூறுகிறது. அபிராமி அந்தாதி, மிகுந்த பக்தியுடன், பொருட் செறிவுடன் பாடப் பட்டது.

நாங்கள் அமர்ந்திருந்த மண்டபத்தின் மேல் சாளரத்திலிருந்து விழுந்த சூரிய ஒளி, சந்திரக் குளுமையுடன் எங்கள் மீது விழுந்தது. ஒவ்வொரு பாடலாக, மனம் லயித்துப் படித்தோம். பிறகு அம்பாளின் சந்நிதிக்குச் சென்றோம்.

உள்ளே, மிக அருகில் அபிராமி அம்மனை தரிசிக்கும் பாக்யம் பெற்றோம். நீண்ட நேரம் அவள் அருகில் நின்று அவள் அருளைப் பெறும் பெரிய வாய்ப்பு கிடைத்தது. அபிராமி அணிந்திருந்த மாலைகள் எங்கள் கழுத்தில் விழுந்தன. அபிராமி பட்டர், விரும்பிக் காண வரும் அடியார்களை எளிதாகச் சந்திப்பவள் அபிராமி என்கிறார்(14ஆம் பாடல்). மேலும், எளியவனான எனக்கு, உன் திருமேனி தரிசனத்தை என் அகத்திலும், புறத்திலும் களிப்புறக் காணத் தந்தவளே, அதனால் கிட்டும் எல்லையற்ற இன்ப உணர்வை எனக்கு இச் செயல் மூலம் அளித்தவளே, இத்தகைய பேரருள் எனக்குக் கிடைப்பதின் காரணம் அறியும் உன் உள்ளக் குறிப்பை எப்போது நான் அறிவேன், என்று கேட்கிறார் (19ஆம் பாடல்).

அந்தப் பேருண்மையை உணர்ந்து, நெகிழ்ந்த மனதுடன் மாலைகள், பிரசாதங்கள் பெற்றுக் கொண்டு, அபிராமியின் சந்நிதியிலிருந்து வெளியே வந்தோம். போட்டோக்கள் எடுத்துக் கொண்டோம்.

திருக்கடையூர் தரிசனம் ஆன பின்பு, அறைக்குத் திரும்பி, பக்கத்தில் “அபிஷேகம்” என்ற ரெஸ்ட்டாரண்ட்டில், தோசை, பொங்கல், வடை, காபி சாப்பிட்டோம். பிறகு அறையைக் காலி செய்து விட்டு, பெட்டிகளை காரின் மேலே கட்டி எடுத்துக்கொண்டு, வைத்தீஸ்வரன் கோவில் நோக்கிப் புறப்பட்டோம். சுமார் 23 கி.மீ தூரத்தில் இருந்தது.

வைத்தீஸ்வரன் கோவிலை அடைந்த போது, மதியம் மணி 12 நெருங்கிக் கொண்டிருந்தது. சுவாமி சந்நிதியிலும், அம்பாள் சந்நிதியிலும், முருகன் சந்நிதியிலும் நல்ல கூட்டம். ஒரு வாறு காத்திருந்து தரிசித்தோம். கோவில் ப்ரகாரத்தில் இருந்த மரப் பெட்டியில், உப்பு, மிளகு வாங்கிப் போட்டுவிட்டு, கோவில் குளமான சித்தாமிர்த தீர்த்தத்தில் வெல்லம் கரைத்தோம்.

பிறகு சில புகைப்படங்கள் எடுத்துவிட்டு, காரில் ஏறி, சென்னை நோக்கிப் பயணமானோம்.

உளுந்தூர்பேட்டை வழியாக சென்னை செல்வதுதான் சரி என்று ட்ரைவர் சொல்ல, அதன்படி வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து புறப்பட்டோம். ஏறக்குறைய 300 கி.மீ.தூரம், மாலை சுமார் 7 மணிக்குள் சென்னை சென்று விடலாம் என்று கணக்குப் போட்டோம்.

சென்னை ஹைவேயில், உளுந்தூர்பேட்டை ஒரு முக்கியமான வழித்தடம். எல்லா ஊர்திகளும், அங்கு சிறிது நேரம் நின்று இளைப்பாறிச் செல்லும். ஏகப்பட்ட உணவகங்கள் அங்கே உண்டு. நாங்கள் உளுந்தூர்பேட்டைக்கு வந்த போது, கிட்டத்தட்ட பிற்பகல் ஒண்றரை மணி. காரை பார்க்கிங்கில் நிறுத்தி, எல்லோரும் இறங்கி அருகில் இருந்த சங்கீதாவில் சாப்பிடச் சென்றோம். ட்ரைவர் பதட்டத்துடன் வந்து, “சார், என்ஜின் கூலண்ட் ப்ரேக் ஆயிடுச்சு. லிக்விட் எல்லாம் கொட்டிடுச்சு. வண்டி போகாது.. என்ன பண்றதுன்னு தெரியலையே” என்று அழாத குறையாகச் சொன்னார். டீசல் போடும்போது, வண்டியை இந்தக் குலுக்கு குலுக்கினால், ஏன் உடையாது என்று ட்ரைவருக்குக் கேட்காமல் எரிச்சலில் பேசிக் கொண்டோம். பயணம் முழுவதும், பல்லில் மாட்டிய பாக்குத் தூளாய், அந்த ட்ரைவரின் இடைஞ்சல்.

பிறகு டொயோட்டா சர்வீசுக்குப் போன் செய்தார். திருச்சி, பாண்டிச்சேரி, சென்னை என்று பல டொயோட்டா சர்வீஸ் இடங்களைத் தொடர்பு கொண்டும், யாரும் சரியான பதில் தரவில்லை. அன்று ஞாயிற்றுக் கிழமை எல்லா இடங்களுக்கும் விடுமுறை.

நாங்கள் ஓட்டலில் உட்கார்ந்து கொண்டு, அடுத்து வேறு ஏதாவது வண்டி எடுத்துக் கொண்டு செல்லலாமா என்று முயற்சி செய்தோம். ஞாயிற்றுக்கிழமை, முகூர்த்தநாள், கோடை விடுமுறைக் காலம் என்று எல்லாம் ஒன்றாகக் கூடியிருந்ததால், ஓர் இடத்திலும் வண்டி கிடைக்கவில்லை. அதற்குள் விழுப்புரத்திலிருந்து டொயோட்டா சர்வீஸ் டெக்னீஷியன் இன்னும் அரை மணியில் வர இருப்பதாக ட்ரைவர் சொன்னார். அப்போது மணி இரண்டரை. சரி, ஒரு மூன்று மணிக்கு வந்து விடுவார் என்று பார்த்தால், டெக்னீஷியனோ நான்கரை மணிக்கு மேல் தான் வந்தார். ஒரு முக்கால் மணி நேரம் எடுத்துக் கொண்டு, பாகங்களை மாற்றி, கூலண்ட் திரவத்தை நிரப்பி, காரை ஓடும் நிலைக்கு மாற்றித்தந்தார். கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம், வண்டி சரியாகும் வரை, பக்கத்தில் இருந்த உடுப்பி ஓட்டலில் காபியும், டீயும் மாற்றி மாற்றி அருந்திக் கொண்டு அமர்ந்திருந்தோம்.

ஒரு ஐந்தரை மணிக்கு மேல் உளுந்தூர் பேட்டையிலிருந்து, சென்னை நோக்கிப் புறப்பட்டோம். ட்ரைவரும் இந்த மாதிரி ஆனதில்லை இதுவரை என்று புலம்பியபடி வந்து கொண்டிருந்தார். அவரைச் சற்று ஆறுதல் படுத்தி, வழியில் அடையார் ஆனந்தபவனில் காபி மற்றும், ஸ்னாக்ஸ் சாப்பிட்டோம். டின்னர் சாப்பிடும் அளவுக்கு யாருக்கும் பசி இல்லை.

சென்னையின் அவுட்டரை நெருங்கியதும் , போக்குவரத்து நெரிசல் ஆரம்பித்தது. ஊர்ந்து ஊர்ந்து, முதலில் மாம்பலத்தில், பானுவையும் அத்திம்பேரையும் அவர்கள் இல்லத்தில் இறக்கிவிட்டு, நன்றி சொல்லிப் புறப்பட்டோம். வழியில் கொஞ்சம் பழங்கள் வாங்கிக் கொண்டு, தி.நகரில் நாங்கள் தங்கியிருந்த ப்ளாசம்ஸ் ஓட்டலுக்கு வந்த போது, இரவு மணி 11 ஆகியிருந்தது.

எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு வந்து, படுக்கையில் கால் நீட்டி அமர்ந்து, அப்பாடா என்று ஓய்வெடுத்துக் கொண்டோம். அடுத்தது, இத் தொடரின் நிறைவுப் பகுதி.

One thought on “பக்திப் பயணம்-11

  1. அந்த டிரைவர் முருகேசன் பற்றி தனி ப்ளாக் எதிர்பார்க்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *