பக்திப் பயணம்-10
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
PRESS PLAY BUTTON FOR AUDIO READING
மறுநாள் ஜூலை 11, சனிக்கிழமை. காலை 9 மணிக்கு பெங்களூர் விமானம் புறப்படுவதால், சந்திரிகாவை, திருச்சி விமான நிலையத்தில் காலை சுமார் 7 மணிக்குக் கொண்டுவிடச் சென்றோம். பைபாஸ் ரோடு வழியாகச் சென்று, அரை மணிக்குள் ஏர்போர்ட் வாசலை அடைந்தோம். திருச்சி ஏர்போர்ட் பகுதிகள் நன்கு விஸ்தரிக்கப் பட்டிருந்தது. வாசலில் மூவரும் பேசிக் கொண்டிருந்தோம். விமான நிலையத்தில், பயண முன் தயாரிப்புக்கான நேரமும் நெருங்கவே, அன்புடன் சந்திரிகாவுக்கு நன்றி சொல்லி, விடை கொடுத்தோம்.
தற்போது நாங்கள் இருவர் மட்டுமே ! ஏர்போர்ட்டிலிருந்து, நேராக அறைக்குச் சென்றோம். காலைச் சாப்பாட்டுக்கு, ஶ்ரீரங்கத்தில் என் நண்பன் விஜயகுமார் வீட்டிற்குச் செல்வதாக ஏற்பாடு. திருச்சி ராக்ஃபோர்ட் வ்யூ ஹோட்டல் அறையைக் காலி செய்துவிட்டு, பெட்டிகளைக் காரில் ஏற்றிக் கொண்டு, இருந்தபோது, அனந்தேஷ் வேகமாக வந்து, “மன்னி, ஒங்களை இந்திரா காந்தி காலேஜுக்கு, வாக்ஷி இப்போ வரச் சொன்னா” என்றான்.
திருச்சி இந்திராகாந்தி கல்லூரியில்தான், மாலதியும் தன் படிப்பு முடிந்ததும், முதல் முதலாக ஆசிரியப் பணியில் சேர்ந்திருந்தாள். தற்போது அதே கல்லூரியில் வாக்ஷி புதிதாக ஆசிரியராகச் சேர்ந்திருந்தாள். மாலதியுடன் அன்று பணியாற்றிய தோழி, அக்கல்லூரியின் முதல்வராகவும், இன்னும் சிலர், துறைத் தலைவர்களாகவும் இப்போது ஆகி விட்டிருந்தனர். வாக்ஷி மூலம் மாலதி திருச்சிக்கு வந்திருப்பதை அறிந்து, அவர்கள் சந்திக்க விரும்பினர்.
நான் அனந்தேஷ் கடையில் காத்திருக்க, மாலதியும் அக்கல்லூரிக்குத் தன் பழைய தோழிகளைச் சந்திக்கச் சென்றாள். இதுவும் தனி ப்ளாக்காக எழுத வேண்டிய விஷயம்.
பிறகு அங்கிருந்து கிளம்பி, நேராக ஶ்ரீரங்கத்தில் விஜயகுமார் வீட்டுக்குச் சென்றோம். வழியில் ரங்கநாதரின் ராஜ கோபுரம் தரிசனமானது. விஜயகுமாரும், மீராவும் அன்புடன் வரவேற்றனர். மீரா சமைத்திருந்த சுவையான அய்யங்கார் தளிகை, தலை வாழை இலை போட்டு, தரையில் அமர்ந்து திருப்தியாக உண்டோம்.
விஜயகுமார், மீரா தம்பதியரிடம் விடை பெற்றுக் கொண்டு, அங்கிருந்து கும்பகோணம் சென்ற போது, மாலை 3.30 மணி ஆகியிருந்தது. கோவில் நகரம் என்று போற்றப்படும் கும்பகோணத்தில், எந்தப் பகுதியில் இருந்தாலும், சற்றுத் தலையைத் தூக்கிப் பார்த்தாலே, ஏதோ ஒரு கோவிலின் கோபுர தரிசனம் கண்டிப்பாகக் கிடைக்கும். அப்பகுதியில் ஏராளமான கோவில்கள் உள்ளன. காரில் வரும்போது கோபுரங்களும், மாடங்களும் தரிசனமாயின.
கும்பேஸ்வரர் கோவில் வாசலுக்கருகில், புகழ் பெற்ற மங்களாம்பிகா விலாஸில், காபி, டீ அருந்தியபின், முறுக்கு அச்சு வாங்க அருகிலிருந்த கடைக்குச் சென்றோம்.
அந்தக் கடையின் முதலாளியும், அவரது மகன்களும் பொறுமையாக எல்லாம் எடுத்துக் காட்டினர். சேங்காலிபுரம் அச்சு மட்டுமே வாங்கப் போன இடத்தில், மற்ற சாமான்களும் சேர்த்து வாங்கினோம்.
அக்கடையிலிருந்து வாங்கியவற்றைக் காரில் அடைத்துவிட்டு, திருக்கடையூர் நோக்கிப் புறப்பட்டோம். பசி எடுக்கவே, நடுவில் ஆடுதுறையில் சீதாராம விலாசில் சாப்பிட்டுவிட்டுச் செல்ல நினைத்து, அந்தத் திசையில் சென்றோம்.
அப்போது சனிக்கிழமை மாலை நேரம் என்பதால், சீதாராம விலாசில் சிற்றுண்டி வகைகள் இருந்தன. சர்வர், அடை அவியல் இருப்பதாகச் சொன்னார். அதை வரவழைத்தேன். எழுத்தாளர் லா.சா.ரா ஒரு கதையில், “தட்டில் சூடான அடையைப் போட்டதும், சமையல் கட்டின் வெளிச்சத்தில், அடையில் நட்சத்திரங்கள் ஜொலித்தன’ என்று எழுதியிருப்பார். அத்தகைய அடை, மிகப் ப்ரமாதமான சுவையில் இருந்தது. அவியலுடன் கூடவே, வெல்லம். பிறகு சட்னியும், கடப்பாவும் கொடுத்தார்கள். வெள்ளி, சனி, ஞாயிறு மட்டுமே, மாலை வேளைகளில் அடை கிடைக்கும்.
திருப்தியாக அடை சாப்பிட்டு, பித்தளை டம்ளரில் கும்பகோணம் காஃபியைக் குடித்து, பில் கொடுக்கும்போது, மிருதங்க வித்வான் திரு மன்னார்குடி ஈஸ்வரன் தன் மனைவி உடன் வர, சிஷ்ய கோஷ்டியினருடன் உள்ளே நுழைந்தார்.
மாலதியை அடையாளம் கண்டு, நலம் விசாரித்தார். ஈஸ்வரன் மாமா, திருச்சி வானொலி நிலையத்தில், மாலதியின் தந்தையாரோடு ஒன்றாக வேலை பார்த்தவர். கச்சேரி முடித்துவிட்டு வருவதாகவும், அடுத்த கச்சேரிக்காக, ஊத்துக்காடு செல்வதாகவும் வழியில் இங்கு சாப்பிட வந்ததாகவும் கூறினார்.
பின் எங்களைப் பற்றி விசாரித்து, எங்க இந்தப் பக்கம் என்றார். திருக்கடையூர் போகிறோம் என்று சொன்னதும், மிகவும் மகிழ்ந்து, அப்படியா, மாப்பிள்ளைக்கு அறுபதா, என்று சொல்லி, தன் மிருதங்கக் கைகளை, எங்கள் தலையில் மிருதுவாக வைத்து, பரிபூர்ண ஆசி வழங்கினார். தனது தந்தையாரே இவர் உருவில் வந்து வாழ்த்தியதாக, மாலதி நெகிழ்ந்தாள். அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு திருக்கடையூர் நோக்கிச் சென்றோம்.நேரமும் தற்போது 6 மணிக்கு மேல் ஆகியிருந்தது. கிட்டத்தட்ட ஒண்றரை மணி நேரப் பயணம்.
அத்திம்பேரும் திருக்கடையூர் கோவில் பக்கத்தில் சதாபிஷேகம் என்ற ஓட்டலில் அறை போட்டிருந்ததாகச் சொல்லி, எட்டு மணிக்குள் வந்தால், இரவு தரிசனம் செய்யலாம் என்றார். திருக்கடையூர் போய்ச் சேரவே எட்டு மணி ஆகிவிட்டது. அறைக்குச் சென்று பெட்டிகளை வைத்துவிட்டு, வெளியில் வந்தோம்.
அத்திம்பேரும், பானுவும் தரிசனம் முடித்துவிட்டு, ஹோட்டல் வாசலுக்கு வந்திருந்தனர். பக்கத்திலிருக்கும் தரங்கம்பாடி கடற்கரைக்குச் செல்லலாம் என்று திட்டம். திருக்கடையூர் தெருவில் காருக்காகக் காத்திருந்த போது, டிங், டிங், டிங், க்யாக், கியாக் என்று இலுப்பைச் சட்டியில், கரண்டி படும் இன்னிசை கேட்டு, எங்கள் கண்கள் விரிந்தன. தள்ளுவண்டியில் வறுத்த கடலை.
காரும் வந்து விடவே, கடலையும் வறுபட்டு விடவே, ஆளுக்கு இரண்டு கடலைப் பொட்டலங்களை வாங்கிக் கொண்டு, கடலைக் காண, தரங்கம்பாடி கடற்கரை நோக்கிச் சென்றோம். சுமார் இருபது நிமிடப் பயணம்.
வழியில் டானிஷ் விலேஜ் எனப்படும் இடத்தில் காணப்பட்ட வெண்ணிறக் கட்டிடங்கள், அந்த இருட்டிலும் பளிச்சிட்டன. கடற்கரையை அடைந்தோம். எதிரே டேனிஷ் கோட்டை. நன்கு இருட்டி விட்டிருந்ததால், கடற்கரையின் முழு அழகைக் காண முடியவில்லை. அங்கு போட்டிருந்த பெஞ்சில், படகில் சிறிது நேரம் அமர்ந்திருந்தோம்.
அபிராமி அம்மனின் காதுக் கம்மல், வானில் நிலவென ஒளிர்ந்து கொண்டிருந்தது. அந்த ஒளியை முடிந்த மட்டும் செல்போனில் பிடிக்க முயன்றோம்.
பிறகு தரங்கம்பாடி கடற்கரையிலிருந்து திரும்பி, திருக்கடையூரில் நாங்கள் தங்கும் விடுதியான சதாபிஷேகம் ஓட்டலுக்குத் திரும்பினோம். இன்று எந்தக் கோவிலுக்கு உள்ளும் செல்லவில்லை. மாறாக, கும்பகோணம், திருக்கடையூர் கோவில் வாசலுக்கு மட்டுமே சென்று வந்தோம். வழியில் பல கோவில்களின் கோபுர தரிசனம் செய்தோம்.
மறுநாள் காலை, கொஞ்சம் சீக்கிரமாகவே திருக்கடையூரில் எழுந்தருளியிருக்கும் அமிர்தகடேஸ்வரரையும், அபிராமி அம்மனையும் தரிசிக்க இருந்ததால், அறையில் ஓய்வெடுக்கச் சென்றோம்.
விஜயகுமார் மீரா சாப்பாட்டை miss பண்ணிவிட்டோம். மாலதியும் சேகரும் திரும்பத் திரும்ப அந்த சமையலைப் பற்றிப் பேசி எங்களைப் பாடுபடுத்திவிட்டார்கள்.
நிற்க. சீதாராம விலாஸை சேகருக்கு (இன்னும் அநேக பேருக்கு) அறிமுகப் படுத்தியது நான் தான் என்பதில் உள்ளபடியே உவகை கொள்கிறேன்.