பக்திப் பயணம்-1
தோசை, மைசூர்பாகு, புளியோதரை
PRESS PLAY BUTTON FOR AUDIO READING
பெங்களூரில் அதிகாலை இறங்கியதும், எப்போதும் போல் ரிச்சுவலாக, மல்லேஸ்வரத்தில் இருக்கும் CTR (Central Tiffin Room) உணவகத்தில் தோசை சாப்பிடச் சென்றோம். உள்ளே உருளை மசாலா வைத்த மொறு மொறு சின்ன தோசை. மூன்று தோசைகளை மிச்சம் வைக்காமல் முழுங்கிவிட்டு, ஸ்ட்ராங் காபி குடித்தவுடன், உடம்பு, உடனே இந்திய மண்ணுக்குப் பழக ஆரம்பித்து விட்டிருந்தது.
மறுநாள், ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி, காரில் மைசூருக்குப் பயணமானோம். வழியில் “சம்ப்ரமா” என்ற உணவகத்தில் காலை உணவாக, தட்டு இட்லி (பெ(B)ண்ணெ தட்டே இட்லி), வடை, காபி. மிருதுவான தட்டையான இட்லி. அதன் தட்டைத் தலையில் தாராள வெண்ணெயும் பக்கத்தில் உரைப்பான சட்னியும். சூடாகவும், சுவையாகவும் இருந்தது.
மைசூர் ஜெயசாம்ராஜ உடையார் கோல்ஃப் கிளப்பில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. பெட்டிகளை வைத்துவிட்டு, மதியம் கபினி வனத்துக்குப் பயணித்தோம். பிற்பகல் மூன்று மணி சஃபாரி என்று சொல்லியிருந்தனர். ஏழெட்டுப்பேர் அமரக்கூடிய திறந்த ஜீப்பில் பயணம் ஆரம்பித்தது. நாங்கள் டிரைவருக்குப் பின்னே, முன் வரிசையிலும், எங்களுக்குப் பின்னாலிருந்த இரண்டு வரிசைகளில் ஆஸ்திரேலியா, மற்றும் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த பயணிகளும் அமர்ந்திருந்தனர்.
எங்களை அழைத்துக் கொண்டு, காட்டுப் பாதைகளில் ஜீப் சென்று கொண்டிருந்தது. ஆங்காங்கே நிறுத்தி பார்வைக்கு எட்டும் தூரத்தில் கூட்டம் கூட்டமாகத் திரியும், மான்களையும், பிளிறும் யானைகளையும், இசைக்கும் பறவைகளையும் கண்டு களித்தோம்.
ஓரிடத்தில் புலி இருக்கிறது என்று சிக்னல் வர, அதைத் தேடிக்கொண்டு சென்றோம். காணவில்லை. இன்னொரு இடம் என்று மற்றொரு ஜீப்பில் இருந்தவர் சொல்ல, அங்கும் சென்றோம். காணக் கிடைக்கவில்லை. கூட வந்த மற்ற பயணிகளோடு, பேச்சும், சிரிப்புமாக சஃபாரி பயணம் சிறப்பாகக் கழிந்தது. இரவு அறைக்குத் திரும்பினோம்.
மறுநாள் காலை எழுந்ததும், சாமுண்டிமலைக்குச் சென்றோம். மைசூரின் பழைய பெயர் மகிசூரு. மகிடாசுரன் என்ற அசுரன் இந்தப் பகுதியின் அரசனாக இருந்தவன். சாமுண்டீஸ்வரி அம்மனால், இவன் கொல்லப்பட, சாமுண்டியை மகிடாசுரமர்த்தினி என்றும் அழைக்கிறார்கள். நவராத்திரி நாட்களில், இக்கோயிலும், மைசூர் நகரமும் மிகப் பிரசித்தம். தலைக்கு ஐநூறு என்று கொடுத்ததில், சாமுண்டீஸ்வரி அம்மனை மிக அருகில், நெடுநேரம் நின்று தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.
திரும்பும் வழியில் கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகளின் எண்பதாம் ஜெயந்தி விழா அலங்கார வளைவுகள் தென்பட்டன. அருகிலேயே அவரது ஆஸ்ரமம் இருந்ததால், அங்கும் செல்லலாம் என்று முடிவெடுத்து, நுழைவாயிலை அடைந்தோம். கூட்டம் வழிந்தது. கூட்டத்தைக் காரணம் காட்டி, காவலர்கள் பிறிதொரு நேரம் வரச் சொல்ல, நாங்கள் வெளியூரிலிருந்து வருகிறோம், சிறிது நேரம் மட்டும் அனுமதி தாருங்கள் என்று கேட்டதும், உள்ளே அனுமதித்தார்கள்.
ஆஸ்ரம வளாகம் பெரிதாக இருந்தது. எங்கு பார்த்தாலும், கழுத்தில் நீளக் காவி அங்கவஸ்திரம் அணிந்து, பக்தர்கள் ஶ்ரீகுருதத்தா, ஜெயகுருதத்தா என்று ஒருவரையொருவர் பார்த்து வாழ்த்திக் கொண்டிருக்க, மெதுவாக நாங்கள் நாதமண்டபம் நோக்கிச் சென்றோம்.
நாதமண்டபம் ஒரு அரைவட்ட காலரி வடிவில் சுமார் 2000 பேர் வரை அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அலங்காரத் தூண்களில், வாத்தியங்களின் பெரிய உருவங்கள். அரங்கில் ஏராளமான பக்தர்கள், அமர்ந்தும், நின்றும், நடு நாயகமாக அமர்ந்திருந்த, கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகளை தரிசித்தபடி இருந்தனர். நடு நடுவே, அமைச்சர்களும், நடிகர்களும், முக்கிய நபர்களும் வந்து வாழ்த்துச் சொன்னபடி இருந்தனர். ஒரு இருபதடி தூரத்தில் எங்களுக்கு அவரது தரிசனம் கிடைத்தது.
பின் உள்ளே வளாகத்தில் இருக்கும் தெய்வ சந்நிதிகளுக்குச் சென்று தரிசனங்கள் செய்தோம். கல்கண்டு பொங்கல் ப்ரசாதமாகக் கிடைத்தது.
உள்ளே ஒரு ஆஞ்சனேயர் கோயில். ஆஞ்சனேயரைச் சுற்றி, மண்டபம் முழுதும் வடை மாலைகள். பக்தர்கள் பணம் கட்டி, பக்தியுடன் சிவப்பு நிறக் கயிறு வாங்கி அங்கே கட்டுகிறார்கள். ஆஞ்சனேயருக்கு எதிரே வெளியில் ஒட்டகச் சிலை வாகனம். ஆஞ்சனேயருக்கும், ஒட்டகத்துக்கும் என்ன சம்பந்தம் என்று விளங்காமல் வெளியே வந்து செல்ஃபி எடுத்துக் கொண்டோம். பயணங்களில் வாகன விபத்து ஏற்படாமல் இருக்க, வாகன ஓட்டிகள் இந்த ஒட்டகச் சிலையை வணங்கிச் செல்வர் என்பது பிறகு தெரிய வந்தது.
அங்கிருந்த உத்திரங்களில் பலவிதமான பொன்மொழிகள். சங்கீதமே என் மதம் என்கிற வாசகம் என்னைக் கவர்ந்தது.
மதிய உணவை முடித்ததும், மைசூர் கே.ஆர்.சர்க்கிள் சென்றோம். இங்கு தான் பிரபல “குரு ஸ்வீட் மார்ட்” என்ற கடை உள்ளது. இந்தக் கடைக்காரரின் எள்ளுத்தாத்தா, கக்கசுர மாடப்பா, மைசூர் மஹாராஜாவாக இருந்த, நான்காவது கிருஷ்ணராஜ உடையாரின் அரண்மனையில், தலைமை சமையல் கலைஞராக இருந்தவர்.
ஒருமுறை கடலை மாவு, சர்க்கரை, நெய்யை வைத்து ஒரு இனிப்புப் பலகாரத்தைச் செய்து, மஹாராஜாவிடம் கொடுக்க, அவரும் அதைச் சாப்பிட்டு மகிழ்ந்து, அதற்கு ராயல்ஸ்வீட் மைசூர்பாக் என்று நாமகரணம் சூட்டியுள்ளார். இதுதான் மைசூர்பாகின் தாயகம்.
இந்தக் கடை அவரது வழித்தோன்றல்களால், கடந்த 90 வருடங்களாக இதே இடத்தில், எந்தவிதக் கிளைகளும் இல்லாமல் இயங்கிவருகிறது. சின்ன மூலையில், மூக்கு ஓட்டை சைஸ்தான் கடையின் அளவு. அந்த ஒரிஜினல் மைசூர்பாகுடன், தற்கால மைசூர்பாகு வகைகளும், பிற இனிப்புகளும் கிடைக்கிறது. ஓனரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, கன்னட ஆங்கில உச்சரிப்புடன், பாரம்பரிய மைசூர்பாகையும், இதர வகை இனிப்புகளையும், தலைமுறைகளாகச் செய்து வருவதாகவும், அவரது பிள்ளைகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் இருப்பதாகவும், லீவுக்கு வரும்போது, கடையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று பெருமையாகச் சொன்னது ஆச்சர்யமாக இருந்தது. பெரிய க்யூவில் நின்று, ஒரிஜினல் மைசூர்பாகுப் பெட்டிகள் வாங்கிக்கொண்டு காருக்குத் திரும்பினோம்.
அங்கிருந்து மேல்கோட்டை (திருநாராயணபுரம்) நோக்கிப் பயணம்.
மேல்கோட்டையில் ஶ்ரீராமானுஜர் பனிரெண்டு ஆண்டுகளுக்கு மேல் வசித்து வந்தார். அக்காலத்தில் அவரது விருப்பத்துக்குரிய இத்தலத்தில் தான், தாழ்த்தப்பட்டவர்களை, கோவிலுக்கு அழைத்துச் சென்று புரட்சி செய்தார். இக்கோவிலின் மூலவர் திருநாராயணர், உற்சவர் செல்வநாராயணர், தாயார் திருநாராயணி. நாங்கள் இக்கோவிலுக்குச் சென்ற சமயம், சகோதரிகள் இருவர் பக்கவாத்தியங்களுடன் கர்நாடகக் கச்சேரி செய்து கொண்டிருந்தனர். மிக அருமையான தரிசனம் முடித்து வெளியே வந்தபோது, மெலிதாக மழை தூறிக் கொண்டிருந்தது. குரங்குகள் கோபுரத்தில் தாவிக் கொண்டிருந்தன.
இங்குள்ள மேல்கோட்டையில் ஒரு குன்றின் மேல் யோக நரசிம்மர் ஆலயம் உள்ளது. சுயம்பு என்றும், பிரஹல்லாதனால் ஸ்தாபிக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. இங்கு நரசிம்மர் உக்ரம் இன்றி, யோகத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறார். நரசிம்ம ஜெயந்தி இந்தக் கோவிலில் பிரசித்தம்.
இந்த யோக நரசிம்மர் குன்றுக்குப் போகும் வழி தெரியாமல் மெல்லிய மழைத் தூறலில் சுற்றியபோது, அப்பகுதியில் குடை ஏந்திக்கொண்டு, பளிச்சென்ற திருமண் நெற்றியில் துலங்க, சற்றே கட்டையான, குட்டையான ஒரு பட்டர் வந்து கொண்டிருந்தார். ஜன்னல் கண்ணாடியை இறக்கி வழி கேட்க, அவரும் கன்னடத் தமிழில் வழி சொல்லி, “நானும் அங்கதான் போயிண்டிருக்கேன்.. வாங்கோ” என்றார்.
காரில் புறப்பட எத்தனித்தபோது, சட்டென்று மாலதியும், “மாமா, நீங்களும், எங்க காரில் வந்துடுங்கோ” என்று சொல்லவே, அவரும் ஆமோதிப்புடன் முன் சீட்டில் ஏறிக் கொண்ட்டார். அவர் காட்டிய வழியில் செல்ல, “இதுக்கு மேல கார் போகாது. ஒரு இருநூறு படி ஏறிப் போகணும்” என்றார்.
காரை விட்டிறங்கி மலைப் படிகளின் அமைப்பைப் பார்த்துவிட்டு, சந்திரிகாவும், மாலதியும் தங்கள் இயலாமையைத் தெரிவிக்க, நான் மட்டும் செல்ல முடிவாகியது. கூட வந்த பட்டரும், “நீங்க வாங்கோ, நான் கூட்டிண்டு போறேன்”, என்று எனக்கு தைரியம் அளித்து, கை பிடிக்காத குறையாக, அழைத்துச் சென்றார்.
பயணக் களைப்புடன், படிகளில் ஏற சிரமப்படுவதை பார்த்து, என்னிடம் அவர், செருப்பு போட்டுண்டே படில ஏறுங்கோ, ஒண்ணும் பிரச்சினை இல்லை, என்றார். (பொதுவாக செருப்பு அணிந்து படிகளில் ஏற அனுமதியில்லை)
பத்துப் பதினைந்து படிகள் ஏறி, மூச்சு வாங்க நிற்கும்போது, அவரும் நிற்பார். இளைப்பாறிய சிறிது நேரத்துக்குப்பின் ஏறும் போது, அவரும் எனக்குத் துணையாகப் படிகளில் ஏறிக் கொண்டே “யோக நரசிம்மாய நமஹ, ராமானுஜாய நமஹனு சொல்லிண்டே வாங்கோ, கஷ்டம் தெரியாது”என்றார். இளந்தூறலும் இப்போது நின்றுவிட்டது. நீலவானத்தின் நிழல் குன்றில் கவிந்திருந்தது.
கூட வந்த பட்டர், ஓர் இடத்தில் நின்று, கீழே தெரியும், செல்வநாராயணர் கோவிலையும், கல்யாணி தீர்த்தத்தையும், அதைச் சுற்றி அமைந்திருக்கும் வராஹர், கருடர், ஆஞ்சனேயர் மூர்த்தங்களையும் சுட்டிக் காட்டினார். முறைத்தபடி குரங்குகளும் ஆங்காங்கே துள்ளி தாவிக் கொண்டிருந்தன. மிக ரம்யமான காட்சி. முடிந்தவரை செல்ஃபோனில் படம் எடுத்துக் கொண்டேன்.
இந்த பட்டர் பெயர் திரு.கஸ்தூரி ஶ்ரீனிவாசன். ஒவ்வொரு நாளும், காலை, மதியம், மாலை பூஜைகளுக்காக, மூன்று முறை இம்மலையில் ஏறி இறங்குகிறார்.
யோகநரசிம்மர் ஆலய கோபுர வாசலில் செருப்பைக் கழட்டி, கதவின் பின்னால் ஓரமாக வைக்கச் சொன்னார். உள்ளே அழைத்துச் சென்று, யோக நரசிம்மரின் அருகிலேயே என்னையும் அமரச் செய்தார். அர்ச்சனை தீபாரதனைகள் முடித்துக் கை நிறைய ப்ரசாதங்கள் தந்தார். நமஸ்கரித்து, அவரிடம் விடைபெற்ற போது, வாய் நிறைய க்ஷேமமா இருங்கோ என்றார்.
யார் இவர் ? எதற்காகத் தனது கோவில் வேலைகளை விட்டுவிட்டு, என்னைப் பொறுமையாகப் படிப் படியாக ஏற்றி அழைத்துச் செல்ல வேண்டும் ? எதன் பொருட்டு இதைச் செய்கிறார் ? ஒன்றுமே புரியவில்லை. குடையுடன் அவரை முதலில் பார்த்த காட்சி இன்னும் மறக்க முடியாதது. இப்படித்தான் வாமன அவதாரம் இருந்திருக்குமோ? அந்த வாமனரோ, தம் காலை தலையில் அழுத்தி ஆசிர்வதித்தார். இந்த வாமனரோ, என் கால்கள் நோக விடாமல் யோக நரசிம்மரிடம் அழைத்துச் சென்றார்.
தரிசனம் முடித்து, அதே படிகளில் இறங்கி வரும்போது, மனது அந்த நீலவானம் போல் நிர்மலமாய் இருந்தது. முறைத்த குரங்குகள் சிரித்தன. இரண்டிரண்டு படிகளாகத் தாண்டும் பலம் வந்திருந்தது.
கீழே வந்து, காரில் காத்துக் கொண்டிருந்தவர்களிடம், எனது அனுபவத்தை வார்த்தைகளில் சொல்ல முடியாமல் தடுமாறி, உணர்வுகளால் கடத்திக் கொண்டிருந்தேன். எனக்குக் கிட்டிய அந்த பாக்கியம் அவர்களுக்கும் உரியது. கண்டவர் விண்டிலர் என்பது சத்யமே !
மேல்கோட்டை சென்றால், இவ்விரண்டு கோவிலுக்கும் போய்விட்டு, சுப்பண்ணா மெஸ் சென்று, புளியோதரை சாப்பிட வேண்டும் என்று இணைய தளங்கள் சொல்லியது. விடலாமா ? சுப்பண்ணா மெஸ்சுக்குச் சென்றோம்.
சிறிய சந்தில், பழைய வீட்டில், குறைந்த வெளிச்சத்தில் பத்து டேபிள் போட்டிருந்தது. சர்க்கரைப் பொங்கல், வெல்லப் பொங்கல், புளியோதரை இருக்கிறது என்றனர். அவற்றை இலையில் பரிமாறி, தொட்டுக்கொள்ள ஊறுகாயும் தந்தனர். பொங்கல் அருமையான சுவையில் இருந்தது. பிரபலமான அந்தப் புளியோதரை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஸ்பைஸ் லெவல் குறைவாக இருந்தது. இதன் ஸ்தாபகர் சுப்பண்ணாவும் இருந்தார். சிறிது பேச்சுக் கொடுத்தபோது, கர்னாடக அரசியலைக் கடுமையாக விமர்சனம் செய்தார். சாப்பிட்டு விட்டு, ஒரு காஃபியும் அருந்திவிட்டு, மைசூர் நோக்கித் திரும்பினோம்.
மறுநாள், மைலாரி என்ற உணவகத்தில் வித்தியாசமான தோசை (வழக்கமான கர்னாடகா டைப் தோசை இல்லை) சாப்பிட்டுவிட்டு (மிகவும் சுமார்) ஶ்ரீரங்கப்பட்னா சென்றொம்.
ஶ்ரீரங்கப்பட்னாவில் ஆதிரங்கநாதர் ஆலயம் உள்ளது. காவிரிப் படுகையில் மொத்தம் ஐந்து ரங்கநாதர்கள் (பஞ்சரங்கம்). அதில் முதலாவது ஶ்ரீரங்கப்பட்னா ஆதிரங்கநாதர். மிக அழகுடன் பள்ளி கொண்டிருக்கும் சிறிய ரங்கநாதர். லட்சணம் பொருந்திய அரங்கனைக் கண்கள் மூலம் மனதில் கவ்விக் கொண்டோம்.
சுற்றிப் பிரகாரத்தில் வலம் வந்தபோது, பாலாஜி பெருமாள் சந்நிதி. அதன் பட்டர் நல்ல தரிசனம் செய்வித்து, உலக விஷயங்களில் உள்ள அபத்தங்களை விசனத்துடன் பகிர்ந்து கொண்டார்.
கோவிலை விட்டு வெளியே வந்தால் சுட்டெரிக்கும் வெயில். சிறிய ஆதிரங்கநாதர் பொம்மைகளை ஒருவர் விற்றுக் கொண்டிருந்தார். இரண்டு பொம்மைகளை பேரம் பேசி வாங்கிக் கொண்டு, பக்கத்தில் இருந்த இளநீர் கடையில் ஸ்ட்ரா போடாமல் (மாலதி கூற்றுப்படி, ஸ்ட்ராவில் கோவிட் தொற்று இருக்குமாம்), ஆளுக்கு இரண்டு இளநீர் குடித்தோம்.
அடுத்த கோவிலான கேசவப் பெருமாள் கோவிலுக்குச் செல்ல ஆரம்பித்தோம்.போகும் வழியில் நிமிஷாம்பாள் ஆலயத்தின் போர்டு கண்ணில் பட்டது. காரைத் திருப்பி, அங்கு சென்றோம்.
காவிரி ஒரு சிற்றோடையாக ஓட, அதன் மீது இக்கோவில் அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றி கடைகள். காய்கள், கனிகள் என்று பலவித விற்பனைகள். கோவிலைச் சேர்ந்த ஒருவர் எங்களை உள்ளே அழைத்துச் சென்றார். மூன்று சந்நிதிகள் ஒரே வரிசையில். கூட்டமோ கூட்டம். ஒவ்வொரு சந்நிதி அருகிலும் நின்று, அம்மனின் அருளைப் பருகினோம். அங்கு ஒரு பெண்மணி ஹிந்தோளத்தில் அருமையாகப் பாடிக் கொண்டிருந்தார்.
தரிசனம் முடித்து வெளியே வரும்போது, தாளித்த தயிர் சாதம் சூடாக தொன்னையில் தந்தனர். சாப்பிட்டுவிட்டு, ஓடையாக ஓடும் காவிரியில் கால் நனைத்து அமர்ந்தோம்.
சந்நிதியில் பாடிய பெண்மணியும், அங்கு வர, அவரின் பாட்டைப் பாராட்டி பேசிக் கொண்டிருந்தோம். அவருடன் வந்திருந்த அவரது மாமா, பக்கத்தில் தான் தமது பண்ணை வீடு இருப்பதாகவும், வந்து பழங்களாவது சாப்பிட்டுச் செல்லுங்கள் என்றும் வற்புறுத்தினார். அன்புடன் மறுத்துவிட்டு, கேசவப்பெருமாளை தரிசனம் செய்ய சோம்நாத்பூர் நோக்கிப் புறப்பட்டோம்.
கேசவப் பெருமாள் ஆலயம் ஹொய்சாள மன்னர்கள் கட்டியது. நல்ல வெயில் பட்டையைக் கிளப்பியது. கிட்டத்தட்ட, இப்போது இருக்கும் குஜராத்திகளின் ஸ்வாமிநாராயணன் கோவில் அமைப்பைக் கொண்டதாக இருக்கிறது. எல்லாம் வழு வழு கற்சிற்பங்கள். ஏராளமான டூரிஸ்ட்டுகள் வந்திருந்தனர். நாங்களும் செல்̀ஃபி ஸ்டிக்கில் செல்ஃபோனைப் பொருத்தி, விதவிதமான புகைப்படங்களை, சிற்பங்கள் பின்னணியில் எடுத்துக் கொண்டோம்.
மைசூர் திரும்பி, ப்ருந்தாவன் கார்டன் செல்லலாம் என்று தீர்மானித்து, அங்கு சென்றொம். ஏகப்பட்ட கூட்டம் அலைமோதியது. உள்ளே செல்லும் டிக்கெட் வாங்கவே ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகும் போல் இருந்ததால், முடிவை மாற்றிக் கொண்டு, அறைக்குத் திரும்பினோம். இம்முறை எங்களுக்கு மைசூர் ரேஸ் கோர்ஸ் க்ளப்பில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. காலையில் ரேஸ் வீரர்கள் குதிரை ஓட்டப் பயிற்சியில் இருந்தனர்.
அடுத்த நாள் பெங்களூர் வந்து சேர்ந்தோம். மாலை கே.சி.தாஸ் என்ற கடைக்குச் சென்றோம். இவர்கள்தான், ரஸமலாய் என்ற இனிப்பைத் தோற்றுவித்தவர்கள். இக்கடையில் சோன்பப்டி பிரபலம் என்பதால், அதை வாங்கிக் கொண்டோம். பிறகு மல்லேஸ்வரம் சென்று அலங்காரப் பொருட்கள், சுதர்சன் சில்க்ஸில் புடவைகள் என்று வாங்கிக் கொண்டோம்.
மறுநாள் பெங்களூருக்கு விடை கொடுத்து, சென்னை நோக்கி காரில் பயணம். மைசூருக்கு எங்களுடன் வந்த அதே டிரைவர் நதீம் வந்தார். நல்ல முறையில் பண்புடன் பழகியவர். அவர் வழக்கமான ஓசுர் வழி இல்லாமல், கோலார், சித்தூர் வழியாகச் சென்னை செல்லலாம் என்றார். ஏன் என்றதற்கு, வழியில் முல்பகல் (MULBAGAL) என்ற இடம் தோசை மற்றும், தட்டு இட்லிக்குப் பிரபலம் என்றார். அதன்படி சென்றோம்.
பெங்களூர்-திருப்பதி ஹைரோடில் கோலாருக்குச் சற்று முன் முல்பகல் தோசா கார்னர் உள்ளது. வித்தியாசமான தோசை. நல்ல திக்காக இரண்டாக மடிக்கப்பட்டு, வாசமான நெய்யில் குளித்த மொறு மொறு தோசை. உள்ளே உருளை மசாலா. சுவையான சட்னி மற்றும் சாம்பார்.
முல்பகல் தோசையை, தோசைகளின் சூப்பர் ஸ்டார் என்று சத்தியம் செய்யலாம். சாப்பிட்டு, நன்கு கைகளைக் கழுவியும், நெய்யின் மணம் கையில் நெடுநேரம் இருந்தது.
சென்னை நோக்கிச் செல்ல செல்ல, வெயிலின் உக்கிரம் அதிகரித்திருந்தது. வழியில் ஒரு தம்பதி ரோட்டோரமாக நுங்கு விற்றபடி இருந்தனர். காரை நிறுத்தி, அவர்களிடம் புதிதாக வெட்டச் சொல்லி, மூன்று கண் உள்ள நுங்கை, பல வருடங்கள் கழித்து, விரல் வலிக்க, விரலால் நோண்டி சாப்பிட்டது வேறு வகை அனுபவம்.
பிறகு பை நிறைய நுங்குச் சுளைகளாக வாங்கி, வழியெல்லாம் சாப்பிட்டுக் கொண்டே, ஸ்டாலினையும், உதயநிதியையும் போஸ்டர்களில் பார்த்தபடி, சென்னை வந்து சேர்ந்தோம்.
சென்னையில் மாலதியின் தங்கை ரமா குடும்பத்தாரைச் சந்தித்தோம். மறுநாள் எனது சகோதரி சுபலட்சுமி குடும்பத்தாரை, பெரும்பாக்கம் சென்று சந்தித்தோம். கௌசிக்கின் கை வண்ணத்தில் அழகான வீடு. பாலாஜி குடும்பத்தாரும் வந்திருந்தனர்.
பேச்சும் சிரிப்புமாக சில மணிநேரம் கழித்து, வேளச்சேரியில் இருக்கும் கைலாஷ் பர்வத் என்ற ஒரு வட இந்திய ரெஸ்ட்டாரெண்ட்டில் எல்லோரும் டின்னர் சாப்பிட்டோம். உணவு சுவையாக இருந்தது. பின்பு எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு, பாலாஜி தம் காரில் கொண்டு விட, தி.நகர் தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.
முதல் அத்தியாயமே அட்டகாசம். திரும்பவும் சாவகாசமாய் படிக்க வேண்டும். அவ்வளவு உபயோகமானத் தகவல்கள் பரவியிருக்கின்றன. அந்த மழைக்கால மாலையில் வாமன பட்டர் அனுபவம் அற்புதம். பக்திப் பயணம் என்றாலும் நிறைய சாப்பாட்டைப் பற்றிப் பயணம் என்பதாகத் தோன்றினால் அது தவறு இல்லை. என்னைப் போன்ற சாமானியர்களுக்கு இந்த அளவில் கலந்து கொடுத்தால் தான் பக்தி கொஞ்சமாவது ஒட்டும். மற்ற அத்தியாயங்களைப் படிக்க ஆவலாக உள்ளது.
Nice Guruji.. different temples and different dosas.. vamanar -???????