பாலன், பவானி, பள்ளிகொண்டீஸ்வரன்
PRESS PLAY BUTTON FOR AUDIO READING
மேற்கு மாம்பலம் ஆர்யகௌடா வீதியில் ஏதோ வாங்க அலைந்து கொண்டிருந்தபோது, “இது ஒரு பொன் மாலைப் பொழுது” என்ற புகழ் பெற்ற திரைப்படப் பாடல் காற்றில் கலந்து என் காதில் விழுந்தது. என்ன ஒரு இனிமையான பாடல். கேதாரம் என்ற ராகத்தில் இசைஞானி படைத்த பாடல். அப்பாடலை, அவ்விடத்திலேயே நின்று முழுமையாகக் கேட்டேன். மனம் கேதார ராகத்தில் வேறு ஏதாவது திரைப் பாடல் உள்ளதா என்று நினைத்துப் பார்த்தது. அதே இசைஞானியின், “சுந்தரி நீயும்” என்ற பாடல் நினைவுக்கு வந்தது. வரிசையாக கர்நாடக சங்கீதத்தில் “ஆனந்த நடனப் பிரகாசம்”, “ராமா நீபை தனக்கு” போன்ற கேதார ராகப் பாடல்களும் ஞாபகத்துக்கு வந்தன.
திருப்புகழில் குருஜி ராகவன் கேதார ராகத்தில் அமைத்த “சீதள வாரிஜ பாதா” என்ற பாடலும் நினைவுக்கு வந்தது. அப்பாடல் அருணகிரிநாதரால், சிறுவை எனும் சிறுவாபுரி கோவில் பாலசுப்ரமணிய ஸ்வாமியின் மேல் பாடப்பட்டது. மனதில் திடீர் மின்னல். ஆஹா! சிறுவாபுரி ஸ்தலம் சென்னைக்கு அருகில்தானே இருக்கிறது, இன்னும் போய் பார்க்கவில்லையே என்று தோன்றியதும், உடனே மனைவியிடம் சொல்லி, மறுநாள் காலை கிளம்பத் தயாரானோம்.
செங்குன்றம் அதாவது Red Hills தாண்டி, திருவள்ளூர் மாவட்டம் சின்னம்பேடு கிராமத்தை நோக்கி கார் விரைந்தது. சின்னம்பேடு கிராமத்தின் சிறுவாபுரி ஸ்தலம் சென்னையிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ளது. கோவில் அருகே கார் நுழைந்தபோது, வீதிகளில் ஜனக் கூட்டம். தெரு ஓரங்களில் சிறு வியாபாரிகள், கீரைக் கட்டு, வெள்ளரிப்பிஞ்சு, வேர்க்கடலை, மல்லிகைப்பூ என்று விற்றுக் கொண்டிருந்தார்கள்.

கோவிலுக்குள் நுழைந்தபோது, ஜனத் திரள் முட்டிமோதியது. செவ்வாய், வெள்ளிகளில் பெருங்கூட்டம் வருமாம். நாங்கள் சென்றது வியாழக் கிழமை. அன்றும் நல்ல கூட்டம். சில நிமிடக் காத்திருப்புக்குப் பின்னர், பாலசுப்ரமணிய ஸ்வாமி தரிசனம் கிடைத்தது. தங்க, வெள்ளி கவசத்துடன் ரம்மியமான காட்சி. கண்குளிர தரிசனம் செய்து, விபூதி ப்ரசாதம் வாங்கிக்கொண்டு, கருவறை தாண்டி, வெளிப் பிரகாரம் வந்தோம்.
பிரகாரத்தில் உரத்த குரலில் ஒரு பெண்மணி வேல் மாறல் சொல்ல, அவர் கூட வந்திருந்த சில பெண்மணிகள், அவரைத் தொடர்ந்து பாடிக் கொண்டு வந்தனர். வேல் மாறல் என்பது, அருணகிரியார் படைத்த வேல் வகுப்பு பாடலை, வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள் தொகுத்துக் கொடுத்தபடி பாடும் முறை. மேல் விவரங்களுக்கு இந்தச் சுட்டியைப் பார்க்கவும்.
அப்பெண்மணியின் குரல் ஓங்கி பக்தியுடன் மண்டபத்தில் ஒலிக்க, நாங்களும் அதில் கலந்து கொண்டு வேல்மாறல் பாடினோம். அது முடிந்தவுடன், அப் பெண்மணியிடம் சென்று, என் செல்ஃபோனில் காட்டிய, சிறுவாபுரி தலத்துக்கான அர்ச்சனைத் திருப்புகழ் “சீதள வாரிஜ பாதா” பாடலை பாடச் சொல்லிக் கேட்டேன். அவரும் மகிழ்வுடன் சம்மதித்து, என் ஃபோனை வாங்கி அப்பாடலைப் பாட, மற்ற பெண்மணிகளுடன் சேர்ந்து, நாங்களும் அவரைத் தொடர்ந்து பாடினோம்.
இப்பாடலை குருஜி ராகவன், கேதார ராகத்தில் அமைத்துள்ளார். அந்த அம்மையார், செஞ்சுருட்டி ராகத்தில் அதாவது, நாத விந்து கலாதீ மெட்டில் பாடினார். அதுவும் பாடுவதற்கும், கேட்பதற்கும் சுவையாக இருந்தது. திருப்புகழ் சந்தப் பாடல்களை, எந்த ராகத்திலும் அமைத்துப் பாட முடியும் என்பதற்கு இது ஒரு சாட்சி. மேலும் இப்பாடல், “நமோ நமோ” என்று ஒவ்வோர் அடியிலும் வருவதால், இத்தகைய பாடல்கள், அர்ச்சனைத் திருப்புகழ் என்று அழைக்கப்படும். அந்த அம்மையார் ஒவ்வொரு அடியையும், இரண்டு முறை பாடியதால், இரண்டு முறை அர்ச்சனை செய்த திருப்தி உண்டானது. (பாடல் வரிகள் கீழே)
பின்னர் அவரிடம் பேசிய போது, அவர் பெயர் தாரணி என்றும், சென்னையிலிருந்து, தம் குழுவுடன் வாரா வாரம் சிறுவாபுரி வந்து, திருப்புகழ் பாடல் பாடுவதாகவும் கூறினார். ஒரு நல்ல திருப்புகழ் பாடும் பக்தரை, சிறுவாபுரி ஸ்தலத்தில் கண்டதில் எங்களுக்கு பூரண திருப்தி. அவருக்கு நன்றி சொல்லி நமஸ்கரித்து, பிரகாரத்தைச் சுற்றி வந்த போது, முருகன் சந்நிதியை நோக்கிய, அருணகிரிநாதரின் சந்நிதியைக் கண்டோம். அருணகிரிநாதர் இத்தலத்துக்கு அடிக்கடி வந்து, பல திருப்புகழ் பாடல்களைப் பாடியதாக வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகிறது.
சிறுவாபுரி வந்தால், இச்சிறு பாலகன், தங்களுக்கு வீடு, மனை அருள்வான் என்ற நம்பிக்கை காலம் காலமாக இருந்து வருவதால், இங்கு பெருங்கூட்டம் கூடுகிறது. ஆனால் அவனோ, பெரும் வீடான மோட்ச வீடு அருள்பவன் ஆயிற்றே! நம் மனதை அவனுக்குகந்த வீடாக மாற்றிக் கொண்டு, அவனே அதனுள் குடியிருக்க அச்சிறு பாலனை வேண்டுவோம்!
சிறுவாபுரி பாலனிடம் பிரியா விடைபெற்று, அங்கிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள பெரியபாளையம், பவானி அம்மன் ஆலயத்துக்குச் செல்லலாம் என்று திடீர் திட்டமிட்டு, பெரியபாளையம் நோக்கிச் சென்றோம்.

பெரியபாளையம் பவானி அம்மன், பிரசித்தி பெற்ற ஆலயம். பெரிய வளாகத்தைச் சுற்றி, நிறைய கடைகள். கோவில் படு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப் படுகிறது. கருவறையில் பெரிதாக பவானி அம்மனின் முகம். கொள்ளை ப்ரகாசமும், கருணையும் சொட்டும் காட்சி. எங்கிருந்து பார்த்தாலும் தரிசுக்கும்படியான அமைப்பு. பவானியின் அருளைப் பெற்றுக் கொண்டு, ப்ரசாதமாகத் தந்த பொங்கலும் வாங்கிக் கொண்டு வெளியில் வந்தோம்.
பிறகு, அங்கிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் சுருட்டப்பள்ளி கோவில் செல்லலாம் என்று விருப்பப்பட்டு, அக்கோவிலை நோக்கிப் பயணித்தோம். சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை அருகில் உள்ளது. அங்கு சிவபெருமான், ரங்கநாதரைப் போல பள்ளி கொண்டிருக்கிறார்.
பாற்கடலைக் கடைந்த போது வந்த ஆலஹால விஷத்தை, சிவபெருமான் உண்டதும், உடனே அவர் மனைவி பார்வதி, அவர் கழுத்தை அழுத்தி, விஷம் உள்ளே இறங்காமல் தடுத்ததாகச் சொல்லப்படும், புராணக்கதையை எல்லோரும் அறிந்திருக்கலாம்! அப்படி விஷம் அருந்தியபின், தனக்கு வந்த மயக்கத்தால், சயன கோலத்தில் சிவபெருமான் கால்நீட்டிப் படுத்துக்கொள்ள, அவரின் பாகம்பிரியாள், அவர் தலையை மடியில் தாங்கிக் கொள்ள, அந்தக் காட்சியே இக்கோயிலின் கருவறை தெய்வங்களாக காணப்படுகிறது. இதனால் சிவபெருமானை பள்ளிகொண்டீஸ்வரர் என்று அழைக்கின்றனர்.
அர்ச்சகர் எங்களைச் சந்நிதிக்கு மிக அருகில் நிறுத்தி, கோவிலின் ஸ்தல புராணத்தை தமிழிலும், தெலுங்கிலும் விளக்கினார். கருவறையில் சிவனின் சயனக் கோலமும், அவரை மடியில் தாங்கிய அம்பாளின் தோற்றமும், தெய்வீக அழகின் காட்சி. மற்ற சிவாலயங்களைப் போல் விபூதி ப்ரசாதம் இங்கு கிடையாது. பெருமாள் கோவிலைப் போல தீர்த்தமும் சடாரியும் தான். அவற்றை பக்தியுடன் பெற்றுக் கொண்டு, ப்ரகாரச் சுற்று வந்தோம்.

சுருட்டப்பள்ளி கோவிலில், எல்லா தெய்வங்களும் அவரவர் ஜோடியுடன் காட்சியளிக்கின்றனர். தட்சிணாமூர்த்தி தன் மனையாள் தாராவுடன் காட்சியளிப்பது இந்த ஒரு தலத்தில் மட்டும் தான்.
பிறகு வெளியில் இருக்கும் பெரிய நந்தியை தரிசித்த பின்பு, சென்னை நோக்கித் திரும்பினோம். காரில் அமர்ந்தபடியே சிற்றுணவாக, சிறுவாபுரி வெள்ளரிக்காய், நெடுஞ்சாலை ஓரத்தில் வெயிலில் விற்று வந்த சிவப்புக் கொய்யாப் பழங்கள், மாங்காய் என்று வாங்கித் தின்றபடி வந்தோம். வழியெல்லாம் சாலை பழுதுபார்க்கும் பணி நடந்து வந்தது. அதனால் வாகனங்கள் ஊர்ந்து, ஊர்ந்து செல்ல, 60 கி.மீ தூரத்தைக் கடக்க இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆனது.
இம்மூன்று கோவில்களும், ஒரே நாளில் கிடைத்த அற்புத தரிசனங்கள். முதலில் சிறுவாபுரி பாலனான, பாலசுப்பிரமணியன். அடுத்து, அவனின் அன்னை பெரியபாளையம் பவானி அம்மன். அடுத்து, அவன் தந்தை பள்ளிகொண்டீஸ்வரன். இவற்றையெல்லாம் நல்லபடி நடத்திக் கொடுத்த சிறுவாபுரி சிறுவனுக்கு கோடி நமஸ்காரங்கள்.
சீதள வாரிஜ பாதா (திருப்புகழ் பாடல் – சிறுவாபுரி)
ராகம்: கேதாரம் / தாளம்: அங்கதாளம் (8½) – 4 2½ 2 (எடுப்பு 1/2 தள்ளி)
சீதள வாரிஜ பாதாந மோநம
நாரத கீதவி நோதாந மோநம
சேவல மாமயில் ப்ரீதாந மோநம …… மறைதேடுஞ்
சேகர மானப்ர தாபாந மோநம
ஆகம சாரசொ ரூபாந மோநம
தேவர்கள் சேனைம கீபாந மோநம …… கதிதோயப்
பாதக நீவுகு டாராந மோநம
மாவசு ரேசக டோராந மோநம
பாரினி லேஜய வீராந மோநம …… மலைமாது
பார்வதி யாள்தரு பாலாந மோநம
நாவல ஞானம னோலாந மோநம
பாலகு மாரசு வாமீந மோநம …… அருள்தாராய்
போதக மாமுக னேரான சோதர
நீறணி வேணியர் நேயாப்ர பாகர
பூமக ளார்மரு கேசாம கோததி …… யிகல்சூரா
போதக மாமறை ஞானாத யாகர
தேனவிழ் நீபந றாவாரு மார்பக
பூரண மாமதி போலாறு மாமுக …… முருகேசா
மாதவர் தேவர்க ளோடேமு ராரியு
மாமலர் மீதுறை வேதாவு மேபுகழ்
மாநில மேழினு மேலான நாயக …… வடிவேலா
வானவ ரூரினும் வீறாகி வீறள
காபுரி வாழ்வினு மேலாக வேதிரு
வாழ்சிறு வாபுரி வாழ்வேசு ராதிபர் …… பெருமாளே.
(All pictures used in this post are results of internet/google search. Thanks to the original contributors)
