காஃபி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்
PRESS PLAY BUTTON FOR AUDIO READING
எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருப்பதற்காக, எல்லா விஷயங்களுக்கும் காலக்கெடு வகுக்கும் இந்தப் பெரிய பூவுலகில், காலை வேளைகளில், சூடான, நறுமணமிக்க, பழுப்பு நிற திரவக் கதாநாயகன் (அல்லது நாயகி), பெரும்பாலான இல்லங்களில் தோற்றுவிக்கப்படுவார். இல்லத்தார் முகங்களிலும், அகங்களிலும் மகிழ்வைப் பரப்பி அந்தக் காலை வேளையை சுப வேளையாக மாற்றும், அந்த மாய திரவத்திற்கு “காஃபி” என்ற ஸ்டைலான ஆங்கிலப் பெயர். இப்பெயரின் தமிழ் மொழிபெயர்ப்பு, அத்தனை விசேஷமில்லை.
இந்தப் பிரியமான அமுதம், காலை வேளைகளில் சிடுசிடுப்புடன் சோம்பேறித்தனமாக படுக்கையைவிட்டு எழுபவர்களை, சுறுசுறுப்பான, சூப்பர் ஹீரோக்களாக மாற்றும் திறனைத் தன்னகத்தே கொண்டது என்ற பேருண்மை, காஃபி பிரியர்கள் மட்டுமே உணர்ந்து கொண்ட ஞானம். இந்த அமுதம் என் வாழ்வியலில் புரியும் திருவிளையாடலைப் பார்ப்போம். கையில் ஒரு நல்ல காஃபியை எடுத்து சுவைத்துக் கொண்டே தொடருங்கள்.
என் குழந்தைப் பருவத்தில், அதிகாலையே எழுந்திருக்கும் அம்மா, ஒரு பெரிய பித்தளை ஃபில்டரில் அன்றைய தேவைக்கான காஃபி பொடியைப் போட்டு, கொதிக்கும் தண்ணீரை கெட்டில் மூக்கு வழியாக சுழட்டி சுழட்டி ஊற்றி, டப்பென்ற சத்தத்துடன் பில்டரை மூடிவிட்டு, குளிக்கச் சென்று விடுவாள். அந்த நேரத்தில், திடமான காஃபித் தூள், தன் மேல் விழுந்த வெந்நீரில் குளித்து, தன் மீதிருக்கும் காஃபி நீர்த்துளிகளை, வடிகட்டிச் சேர்க்கும்.
குளித்து முடித்த அம்மாவோ வாயில் ஸ்லோகங்களை முணுமுணுத்தபடி பெரிய பாத்திரத்தில் பாலைக் காய்ச்சுவார். வீட்டில் இருக்கும் அனைவருக்கும் டபரா டம்ளர் எடுத்து வைத்துவிட்டு ஃபில்டரைத் தன் புடவைத் தலைப்பால் இறுகப் பிடித்து டிகாக்ஷன் நிரம்பியிருக்கும் பகுதியைத் திறக்கும்போது, காஃபியின் மணம் வீடு முழுதும் வசந்தமாய் வீசும். பால், டிகாக்ஷன், சர்க்கரை என்று சரியான விகிதத்தில் கலந்து, டம்ளரில் ஊற்றி, ஒரு ஆத்து ஆத்தும்போது, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கிச்சனில் கூடிவிடுவர். அப்பாவுக்கு மட்டும் காஃபி அவர் இருக்கும் இடத்துக்கு யாராவது கொண்டு போய்க் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு வீடுகளில் காஃபி கொடுக்க மாட்டார்கள். எனக்கும் அதே ட்ரீட்மெண்ட். ஆனால், அப்பா தனக்குரிய காஃபியைக் குடித்துவிட்டு, என்னை அழைத்து, டம்ளரை எடுத்துண்டு போ என்று சொல்லி, அதில் அவர் மிச்சம் வைத்திருக்கும் கொஞ்சூண்டு காப்பியைப் பருகத் தருவார். அந்தச் சிறுவயதில் அதன் ருசி வித்தியாசமாய் இருந்ததால், அடிக்கடி டம்ளரை எடுத்துச் செல்ல அப்பாவிடம் ஓடுவேன். பிறகு எனக்கே எனக்கான காஃபி தரப்படும் பருவம் அடைந்தபோது கிடைத்த பரவசம், அந்த காஃபிச் சுவைக்கு இணையானது. அன்று முதல், ‘காலை எழுந்தவுடன் படிப்பு’ என்பது ‘காலை எழுந்தவுடன் காஃபி’ என்று மாறியது.
ஒருமுறை, என் அம்மாவுக்கு பதில், என் சகோதரி ஒருவர், என் சிறு வயதுப் பருவத்தில் எனக்கான காஃபி போட்டுத் தர, அது காஃபியின் நிறத்திலோ, சுவையிலோ இல்லாமல் வெறும் பாலாக வெள்ளையாக இருந்தது. அதற்கு கூடுதல் டிகாக்ஷன் வேண்டும் என்று கேட்கத் தெரியாமல் கடியாஷம் வேணும் என்று நான் அழுது, அடம்பிடித்ததாக, இன்றும் என் குடும்பத்தார் என்னை டீஸ் செய்வது உண்டு.
பதின்பருவத்தில், புகழ் பெற்ற திருச்சி பத்மா ஹோட்டல் காஃபி பருகியபோது, அட, இது என்ன வீட்டுக் காஃபியை விடச் சுவையாக இருக்கிறதே என்று அடிக்கடி அங்கு சென்று பருகியதுண்டு. அதற்குப் பின் பல பத்மாக்கள் வந்தாலும், அவை எல்லாமே அந்த ஒரிஜினல் பத்மாவுக்கு பத்துமா என்று கேட்கத் தோன்றியது. என் நண்பன் அந்த பத்மாவின் காஃபி சுவைக்கு, தங்கள் கடையிலிருந்து செல்லும் ஒரு கெமிக்கல் தான் காரணம் என்று சொல்லி, அதன் மாதிரியை எனக்குத் தந்து வீட்டில் முயற்சி செய்து பார் என்றான். வீட்டில் யாரும் இல்லாத சமயம், அவன் சொன்னபடி அந்த கெமிக்கல் சொட்டு விட்டு, காஃபி தயாரித்தபோது, பத்மா காஃபி சுவை வராமல், சத்துமா கரைத்த நீரின் சுவை தந்தது. இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற திருக்குறளை அச்சமயத்தில் மனப்பாடப் பகுதிக்காகப் பள்ளிக்கூடத்தில் படித்திருந்ததால், நண்பனைக் கடிந்து கொள்ளவில்லை.
பிறகு சென்னையில் ரோட்டோர காஃபி கடைகளிலும், சிறிய பெரிய அந்தஸ்தில் இருந்த உணவகங்களிலும் காஃபியின் சுவை வெவ்வேறாக இருந்தது. காஃபி குடித்த திருப்தியும் அதற்கேற்றார்போலவே இருந்தது. தேங்காய் சீனிவாசனும், மனோரமாவும் நடித்த நரசுஸ் காஃபி விளம்பரப் படம் அந்நாட்களில் மிகவும் பிரபலம். தேங்காய் சீனிவாசன் அதில் காஃபி எப்படிப் போட வேண்டும் என்று மனோரமாவிடம் சொல்லி, “தேவாம்ருதமா இருக்கும்டி” என்று முடிக்கும் வசனத்தில் அவரது முகபாவத்தைப் பார்க்கக் கோடிக் கண்கள் வேண்டும்.
காஃபியை சுவையாகப் போடுவது என்பது ஆயகலைகளில் சேர்க்கப்பட வேண்டிய ஒன்று. எல்லோருக்கும் சுலபமாகக் கை வந்து விடாத கலை அது. நல்ல உயர்தரமான காஃபி விதைகளைத் தேர்ந்தெடுத்து, அதைப் பதமாக வறுத்து, அரைத்து, அதில் 20 விழுக்காடு சிக்கரி சேர்த்து, காற்றுப் புகா சிறிய ஜாடியில் வைத்து, அதை உபயோகிக்க வேண்டும். பெரிய ஜாடி கூடாது, எனென்றால், காஃபி என்பது அடிக்கடி புதிதாக வறுத்து, அரைத்துச் செய்யப்பட வேண்டும். பிறவி தோறும் காஃபியை அதீதமாகக் காதலிப்போரும், பூமாதேவியைவிடப் பொறுமை கொண்டோரும், ஒவ்வொரு வேளை காஃபிக்கும், தங்கள் வீடுகளில் கையால் சுற்றும் காஃபி அரைக்கும் இயந்திரத்தை வைத்து, அந்த ஒரு வேளைக்கு மட்டும் காஃபிப் பொடி தயாரிப்பார்கள்.
சுத்தமாக கொஞ்சம்கூட ஈரப் பதம் இல்லாத காஃபி ஃபில்டரை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த ஃபில்டரின் வடிகட்டி எனப்படும் மேல் அடுக்கின் அடிப்பாகம், கடுகைவிடச் சிறு துளைகள் கொண்டதாக வட்ட வட்டமாக (concentric circles) இருக்க வேண்டும். அந்த வடிகட்டியில் முதலில் ஒரு அரை ஸ்பூன் சர்க்கரையைப் பரவலாகப் போட வேண்டும். மேற்சொன்னபடி அரைத்து, சிக்கரி கலந்த மென்மையான காஃபிப் பொடியை, அதன் மேல் போட்டு அழுத்தி அமுக்க வேண்டும். இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று மேலும் காஃபித் தூளைப் போட்டு அழுத்தி, அரைவாசிக்கும், முக்கால்வாசிக்கும் நடுவே நிரம்பியதும், கெட்டிலிலிருந்து தள தள என்று கொதிக்கும் நீரை அழுத்திவைத்த காஃபி பொடியின் மேல் சுழற்றி, சுழற்றி ஊற்ற வேண்டும். நீர் நிரம்பி விளிம்பு வரை வந்தவுடன், மூடியை அதன் விளிம்பில் ஜால்ரா போல் தட்டி, காற்றுப் போகாமல் மூடிவிட்டு, காலைக் கடன்களை முடிக்கச் சென்று விடலாம்.
கொதிக்கும் வெந்நீரில் ஆனந்தக் குளியலிடும் காஃபித்தூள், தன் ஆன்மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக, வடிகட்டியின் வட்டத் துளைகள் (Chakras) வழியே, ஃபில்டரின் கீழ் அடுக்கில் சேர்க்கும். இது நடந்து கொண்டிருக்கும் போது, அடுப்பில் நல்ல பாத்திரத்தில் பாலைக் காய்ச்ச வேண்டும். பால், தோசை மாவு போல் திடமாகவும், சென்னை வெள்ளம் போல் அதிகத் தண்ணீராகவும் இருக்கக் கூடாது. இடைப்பட்ட நிலையில் இருக்க வேண்டும். பால் காய்ந்து, ஆடை படியும் முன் அடுப்பை ஆஃப் செய்ய வேண்டும். பாலில் ஆடை வரும் வரை காய்ச்சுவது, தயிர் செய்வதற்காக. ஆடை சுவையான காஃபிக்கு எதிரி. ஆடை என இங்கு நான் சொல்ல வந்தது பாலாடையைத்தான்.
ஃபில்டரில், காஃபியின் அந்தராத்மா சொட்டு சொட்டாக சீராக விழும் சப்தம் நின்றவுடன், டிகாக்ஷன் ரெடி என்பது புரிந்துவிடும். இப்பொழுது, கிச்சன் மேல் அடுக்கில் இருக்கும் கனமான சர்க்கரைக் கிண்ணத்தைக் கீழே சிந்தாமல் ஜாக்கிரதையாக இறக்கி வைத்துக் கொள்ளவும். சரியான பதத்தில் (டிகிரி) காய்ச்சிய பாலும், ஃப்ரெஷ்ஷான டிகாக்ஷனும், சர்க்கரையும் இப்போது ரெடி. நல்ல டம்ளரில், வேண்டிய சர்க்கரை போட்டு, காய்ச்சிய பாலை ஊற்றி, டிகாக்ஷனையும் அதில் ஊற்றி, இரண்டு முறை டபரா டம்ளரால் ஆற்ற வேண்டும். எவ்வளவு பாலுக்கு, எவ்வளவு டிகாக்ஷன், சர்க்கரை அளவு என்பதெல்லாம், சொல்லிக் கொடுக்க முடியாத, அனுபவத்தில் பெறும் அறிவு !
காஃபி என்பதை டம்ளரில் கொண்டுவரும்போதே, கண்கள் அதில் வரும் மெல்லிய புகையைக் காண வேண்டும். மூக்கு அதன் மணத்தை நுகர வேண்டும். டம்ளரும், டபராவும் காதலுடன் உரசிக் கொள்ளும் சப்தமோ அல்லது, டேபிளில் அன்புடன் வைக்கப் படும்போது உண்டாகும் சப்தமோ, இனிய இன்னிசையாகக் காதில் விழ வேண்டும். பிறகு கையில் எடுத்து, ஒரு ஆத்து ஆத்தி, லேசாக நுரையை ஊதி, இரு உதடுகளுக்கு இடையில், டம்ளரின் விளிம்பைக் கவ்வி, நுனி நாக்கால், தீண்டும்போது, இந்த ஐம்புலன்களுக்கும் கிடைக்கும் இன்பத்தை வார்த்தையில் வர்ணிக்க, எந்தக் கவியாலும் முடியாது.
“ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம், ப்ரசன்ன வதனம் த்யாயேத், ஸர்வ விக்னோப ஸாந்தயே” என்ற ஸ்லோகம் எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம். அதன் அர்த்தமானது, வெள்ளுடை அணிந்தவனும், சந்திர நிறத்தைக் கொண்டவனும், நான்கு கரங்களை உடையவனும், ஒளி பொருந்திய முகத்தையும் கொண்டவனுமான, வினைகளை ஒழித்து, அமைதி தருவிக்கும் விஷ்ணு பகவானை த்யானம் செய்கிறேன் என்பதாகக் கொள்ளலாம்.
இந்த ஸ்லோகத்தை காஃபிக்கு உபமானமாக, காஞ்சி மகாப்பெரியவர் ஶ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், நகைச்சுவைக்காகக் சொன்னதாக ஒரு சம்பவம் உண்டு. அதாவது,
ஸுக்லம் – வெள்ளை. அதாவது பால்
விஷ்ணும் – கறுப்பு. அதாவது டிகாஷன்
சசிவர்ணம் – கறுப்பு வெள்ளை கலந்தது. அதாவது காஃபி
சதுர்புஜம் – நான்கு கைகள். அதாவது மனைவியின் இரு கைகள் காஃபியை கொடுக்க,
கணவரின் இரு கைகள் அதைப் பெற்றுக் கொள்ளும்
த்யாயேத் – நினைத்தல். அதாவது இப்படி காஃபி கொடுப்பதை மனதில் நினைப்பது
ப்ரஸன்ன வதனம் – மலர்ந்த முகம். அதாவது காஃபியை மனதில் நினைத்ததும் கணவரின் முகம் மலர்ந்து விடும்
ஸர்வ விக்னோப ஸாந்தயே – எல்லாக் கவலைகளும் நீங்குதல். அதாவது காஃபி குடித்தால் கவலை நீங்கி மனம் சாந்தமாகி விடும்.
இதுவல்லவோ காஃபியின் பெருமை ?
சிலர் பஜ்ஜி, மெது வடை, தோசை போன்றவற்றை, சூடான காஃபியில் தோய்த்து தின்று விட்டு, மிச்சம் இருக்கும் காஃபியை வாயில் கவிழ்ப்பார்கள். அவ்வாறு செய்பவர்கள் காஃபிக்கும், சாம்பாருக்கும் வித்தியாசம் அறியாத அப்பாவிகள். அவர்களை அவர்கள் நம்பும் கடவுள் காப்பாற்றட்டும். சமீபத்தில் கடும் காஃபி பிரியரைப் பற்றி ஒரு செய்தி வந்திருந்தது. இவர் ஒரு நாளைக்கு 25 காஃபியாவது அருந்தி விடுவாராம். கீழே இருக்கும் வீடியோவைப் பார்க்கவும்.
சமீப இந்தியப் பயணங்களில், பல இடங்களில் நாம் எதிர்பார்க்கும் சுவையில் காஃபி கிடைக்கிறது, திருச்சியில் ஆண்டார்தெரு முனையில், மரத்தடியின் கீழ் 15ரூ காஃபி அற்புதம். ஶ்ரீரங்கத்தில் முரளி காஃபி கடை பிரசித்தம். சென்னையில் தேர்ந்தெடுத்த இடங்களில் இருக்கும் சரவணபவன், சங்கீதா உணவகங்கள். ஏர்போர்ட், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே காஃபிகள் படு திராபை. ஹைவே வழித்தடங்களில் கும்பகோணம் டிகிரி காஃபி என்று போர்டு மாட்டி, கண்றாவி காஃபிகளை தைரியமாக விற்கிறார்கள். வெல்லம், அல்லது கருப்பட்டி சேர்த்த காஃபிகளுக்கு வித்தியாசமான சுவை இருந்தாலும், அது அவரவர் விருப்பம் சார்ந்தது.
காஃபி குடித்து முடிக்கும் வரை சூடு சீராக இருக்க வேண்டும். அதற்காக சிலர் ஃபிளாஸ்க்கில் எடுத்துப் போகும் காஃபியைக் குடிப்பார்கள். கூடவே கூடாது. அவ்வாறு செய்வது ஃப்ளாஸ் (flaws) என்பது பலருக்குப் புரிவதில்லை. ஃப்ரெஷ்ஷாகத் தயாரித்த டம்ளர் காஃபி தான் சுகம். அடிப்பாகம் பெருத்த நவீன கோப்பைகள் காஃபிக்கு ஒத்து வராது. பலர், பித்தளை டம்ளரில் காஃபி குடிப்பதற்கு, புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள். பித்தளை செட் டபரா, டம்ளர் இங்கே வால் மார்ட்டில் கிடைப்பதாக ரகசியம் உலவுகிறது. சரி மற்ற தேசங்களில் காஃபி எப்படி ?
சிங்கப்பூரில் ஹாக்கர் செண்டர் எனப்படும் சமூக சந்தைக் கடைகளில், ON THE GO என்று ப்ளாஸ்டிக் பைகளில் ஸ்ட்ரா வைத்து காஃபி விற்பார்கள். அதைப் பார்க்கும் போதெல்லாம் 10 புள்ளி நில அதிர்ச்சியாக, என் மனது சுக்கு நூறாகும். கோப்பையில் கேட்டாலும் தருவார்கள். அந்தக் கோப்பையோ முழங்கை வரை நீண்டிருக்கும். அதிக பட்சம் முப்பது நொடிகளில் ரசித்துக் குடித்து முடிக்க வேண்டிய பானத்தை, நாள் முழுதும் ஸ்ட்ரா வைத்து உறிஞ்சுவார்கள். உண்மையான காஃபி பிரியர்கள், இம்மாதிரி இடங்களில் காஃபி அருந்தவே மாட்டார்கள்.
வெளிநாடுகளில், பல விதமான காஃபி பானங்கள் விற்கப்படுகிறது. பதினைந்துக்கும் மேலான காஃபி வகைகள் உள்ளனவாம். வெனிலா காஃபி, கோகோ காஃபி, சாக்லேட் காஃபி, சின்னமன் காஃபி என்று தினுசு தினுசாகக் கிடைக்கும். இதில் ஐஸ்காஃபி என்று ஒன்று உண்டு. சூடாக இருக்க வேண்டிய காஃபியை மதம் மாற்றி, ஐஸ்காஃபி அல்லது COLD COFFEE என்று விற்பார்கள். என்னைப் பொருத்த வரை இது இயற்கைக்கு விரோதமான செயல். இந்தியக் காஃபிக்கு இணையான காஃபி வெளிநாடுகளில் கிடைப்பது அரிது. ஏனென்றால், இந்தியக் காஃபிகளில் சேர்க்கப்படும் சிக்கரி, வெளிநாடுகளில் சேர்க்கப்படுவதில்லை.
பால், சர்க்கரை சேர்க்காத கருப்பு காஃபி இங்கே எல்லாக் கடைகளிலும் கிடைக்கும். அமெரிக்கர்கள், இந்தக் கருப்பு காஃபியில் டோனட் என்னும் இனிப்பு பன்-வடையை, பஜ்ஜி, வடை போல் தோய்த்து தின்று, மிச்சக் காஃபியை குடிப்பர். பால், சர்க்கரை கலக்காத இந்தக் கருப்பு காஃபி உடலுக்கு நல்லது என்பது பொது அபிப்பிராயம். ஆனால் கலப்பு இருந்தால் தானே சுவை ? செப்பு கலக்காத தங்கமும் ஒரு தங்கமா ?
நவீன ஆரோக்கிய உடல் நலம் பேணுவதற்காக, கலோரி கணக்கு பார்த்து காஃபியை தவிர்ப்பவர்கள்/குறைப்பவர்கள், அல்லது மேற்கண்ட வீடியோ மாமா போல் அரை மணிக்கு ஒருதரம் காஃபி அருந்துபவர்கள் என்று பலவகை ஜீவராசிகள் இந்தப் பிரபஞ்ச மாயையில் உண்டு. காஃபி என்பது அவரவர் தனி விருப்பம். குடி குடியைக் கெடுக்கும் என்ற எச்சரிக்கை காஃபி பானத்திற்கு பொருந்தாது என்பது பேருண்மை. நம் உடம்பில் அழையா விருந்தாளியாக குடியிருக்கும், இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால் போன்றவற்றுக்கு காஃபி பானம் ஆகாது என்று சொல்லி, லிமிட் யுவர் காஃபின் இன்டேக் என்று அறிவுறுத்தும் டாக்டரின் மருத்துவ வளாகத்தில் குறைந்தது இரண்டு காஃபி கடைகளாவது இருக்கின்றன.
சரி போதும்பா காஃபி புராணம்… நீ எப்படி காஃபி குடிக்கிறேனு சொல்லு என்ற உங்களின் அக்கறையான மைண்ட்-வாய்ஸ் எனக்கு கேட்கிறது. கண்ணுக்குத் தெரியாத தேவதைகள் ஆசிர்வதித்த நாளாக எனக்கு அமைந்திருந்தால், அன்று மனைவி போட்டுத் தரும் ருசியான ஃபில்டர் காஃபி கிடைக்கும். அல்லது, சில வார இறுதி நாட்களில் என் மகள் வீட்டில், அவள் போடும் சுவையான ஃபில்டர் காஃபியை அருந்த அழைப்பாள். இரண்டும் கிடைக்காவிட்டால், ‘யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க’ என்று பாடிக்கொண்டு, நானே போட்டுக் கொள்ளும் டேஸ்டர்ஸ் சாய்ஸ் நெஸ்கஃபே தான் பெரும்பாலும். இல்லாவிட்டால், வெளியில் போகும்போது, ஸ்டார்பக்சுக்குப் போய் ஐந்து டாலர் பதிமூணு செண்ட் கொடுத்து, கிட்டத்தட்ட நம் ஃபில்டர் காஃபியின் சுவைக்கு அருகில் நெருங்கும் “டபுள் ஷாட் டால் லாட்டே வித் ஒன் ரா சுகர்” வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்.
எப்போதும் எதிர்பார்த்த காஃபி கிடைக்காவிட்டால் குடி முழுகிப் போய்விடுமா என்ன ? கிடைத்த சுவையே போதுமே என்று மனத்திருப்தி கொள்ளும் ஞான நிறைவைப் பல வருட காஃபி தியானத்தில் உணர்ந்தோர்கள், சந்தேகமில்லாமல் உத்தமர்களே !!
Sekar, you missed to include my filter coffee in your blog.
Nicely written Sekar. My father pour coffee in Dosa and eat. As u said, many people have different taste to have coffee.
Thanks Ram
Hi Murali, Yes, you do make good coffee. Thanks for reading and giving your feedback.
Sekara, Super. Thoughtfully written. A Good Coffee in the morning, makes u as cheerful as u do half an exercise.
Duration of the taste in the tongue decides the quality 😁.
Do write on many exotic items like vathakuzambu etc.
காலையில் எனக்கு தினமும் ஆனந்தம்,
ஆனந்தா காபியுடன்!!!!!!!☕
சுவையினில் சிலிர்ப்பென்ற ஒன்று
நடையினில் துடிப்பென்ற ஒன்று
அமைந்திடும் வரம் பெற்ற வாழ்வு
மனைவியின் கரம் பட்ட காஃபி
உசிலைமணி பாஷையில் சொன்னா,
பேஷ், பேஷ், ரொம்ப நன்னாருக்கு👌👌👌
Brilliant write up. Your yearning and constant pursuit for pure coffee stands out….The title should have been Sekar’s Coffee Satyagraham.. similar to Gandhi Ji’s Salt Satyagraham….