General Travel

திரைக்குப் பின்னால்…

PRESS PLAY BUTTON FOR AUDIO READING

“இங்கேந்து சுமார் 200 கிலோமீட்டர் இருக்குமா?”

“ஓம். கொஞ்சம் கூடத்தான் ஆகும்”

“போய்ச் சேர ஒரு மூணு மணி நேரமாகுமா ?”

“ஓம். கொஞ்சம் கூடவே ஆகும். மலைப் பாதையூடாகப் பயணிக்க வேணும்.”

இலங்கைத் தமிழில் ஓட்டுநர் சதீஷ், நான் கேட்கும் கேள்விகளுக்கு கதைத்துக் கொண்டு வந்தார். ஆமாம் என்பதற்கு ஓம், ஓம் என்று சொல்லி வந்தது, மங்களகரமாகப் பட்டது.

வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதை. இரண்டு பக்கமும் பச்சைப் பசேல் என்று வனப் பகுதி. காரில் முன் இருக்கையில் நான். பின் இருக்கையில் என் மனைவி. இலங்கையில் கண்டி நகரத்திலிருந்து, கதிர்காமம் நோக்கிய பயணம்.

சமீப இந்தியப் பயணத்தில் ஒரு மூன்று நாட்கள் இடைச்செருகலாக இலங்கைப் பயணத்தை என் மனைவி சர்ப்ரைஸாக ஏற்பாடு செய்திருந்தாள். ரொம்ப நாட்களாக இலங்கைச் சுற்றுப் பயணம் செய்ய வேண்டும், முக்கியமாக நல்லூர், கதிர்காமம் முருக ஸ்தலங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற எங்கள் அவா, இந்த முறை முருகன் அருளால் நிறைவேறியது.

முதல் நாள் மாலை கொழும்பு நகரை அடைந்து, அடுத்த நாள் காலை, நல்லூருக்குப் புறப்பட்டோம். சுமார் 8 மணி நேரக் கார் பயணம். இலங்கையில் வடகோடியில் யாழ்ப்பாணம் (ஜா̀̀̀ஃப்னா) பகுதியில் உள்ளது நல்லூர். இங்குள்ள கந்தசுவாமி கோவில் உலகப் புகழ்பெற்றது. சாலை நல்ல ஒழுங்குடன் இருந்தது. செல்லும் வழியில் ஆங்காங்கே தமிழ் இனப் போரின் ஞாபகார்த்தமான அடையாளங்கள்.

நல்லூர் சென்றடைந்தபோது மாலை ஆறுமணி. இன்னும் அரை மணியில் கோவில் மூடிவிடுவார்கள் என்பதால், அவசரமாக உள்ளே ஓடினோம். கோவில் உள்ளே பிரகாரத்தில் ஒரு சிறிய தேரில் முருகப் பெருமானை அலங்கரித்து, ஊர்வலமாக அழைத்துச் சென்றது கண்கொள்ளா காட்சி. ஐம்பது, அறுபது பேர் சூழ்ந்த பக்தர் கூட்டம். பெரும்பாலோர் மலேசியாவிலிருந்து வந்திருந்த சுற்றுப் பயணிகள்.

உற்சவ முருகனை தேரிலிருந்து இறக்கி, சந்நிதியில் வள்ளி, தெய்வானைக்கு இடையில் நிறுத்தி, ஊஞ்சல் ஆட்டினார்கள். அப்போது, வள்ளிகல்யாணத்தில் பாடப்படும் ஆடிலூஞ்சல் பாடலின் சில வரிகளை ஒலிபரப்பினர். பிறகு தீப ஆராதனை. மூலவர் சந்நிதிக்குச் சென்றோம். இங்கு மூலவராக இருப்பது, வேல் மட்டுமே. அதற்கும் தீப ஆராதனை முடிந்து, விபூதி ப்ரசாதம், தித்திப்பு பண்டம் (பொங்கலும், புட்டும் கலந்த மாதிரி) வாங்கிக் கொண்டு, கோவிலின் வெளிப்புறம் வந்தோம். சில செல்̀ஃபி எடுத்த பின், ஓட்டலில் அன்றிரவு தங்கல்.

மறுநாள் காலை ஜாஃப்னா, நல்லூரிலிருந்து புறப்பட்டு, மாலை கண்டி வந்தடைந்தோம். உடனே, UNESCO அங்கீகாரம் செய்த World Heritage புத்தர் கோவில் சென்றோம். இங்கு புத்தரின் பல்லை பாதுகாத்து வருகிறார்கள். ஒரு தங்கப் பேழையில் வைத்து, ஒரு சிறிய தங்க கோபுரத்தால் மூடி, அந்த கோபுர தரிசனம் மட்டுமே நமக்குக் கிடைக்கிறது. பதினாறு வருடங்களுக்கு ஒரு முறைதான் அந்தப் பல் மக்களுக்குக் காட்டப்படும். சமீபத்தில் 2025 ஏப்ரலில் இதைக் காண வந்த மக்களின் கூட்டம் 10 கி.மீ மேலே நீண்டிருந்தது.

அன்று இரவு கண்டியில் தங்கி, மறு நாள் காலை கதிர்காமம் நோக்கிச் சென்ற போது தான் மேலே குறிப்பிட்ட உரையாடல் நடந்தது. பொதுவாக கண்டி கதிர்காமம் என்று சேர்த்துச் சொல்வார்கள் (காசி-ராமேஸ்வரம் போல). ஆனால், கண்டியிலிருந்து சுமார் 220 கி.மீ. தூரத்தில் இருப்பது கதிர்காமம்.

மலைப்பாதையில் கார் சென்று கொண்டிருந்தபோது, ஒரு வளைவில் திடீரென்று ப்ரேக் போட்டுக் காரை நிறுத்திய சதீஷ், “அங்கன பாருங்கள், ஒரு பாம்பு குறுக்க போகுது” என்றார்.

ஆம், சாலையின் இரண்டு பக்கமும் மற்ற வாகனங்கள் நின்று விட, மாலை நேர சூரியக் கதிரில், மின்னும் பொன்னென, மிக நீளமான ஒரு பாம்பு, மிக மெதுவாக நெளிந்து, நெளிந்து சாலையைக் குறுக்கே கடந்தது. அது கடந்து மறு பகுதிக்குச் சென்று காட்டில் மறையும் வரை எந்த வாகனமும் நகரவில்லை. பிறகு புறப்பட்டு, சில கிலோ மீட்டர் சென்றபின்பு, மலைப் பாதையின் சாலை ஓரங்களில் சில அழகான மயில்கள் காணக் கிடைத்தன. அதன் அகவல் ஒலியும் காதில் கேட்டது.

மேலும் தொடர்ந்த பயணத்தில், கதிர்காமம் என்ற பெயர்ப் பலகை தென்பட ஆரம்பித்தது. “ஆறரை மணி பூசைக்குள் சென்று விடலாம். இன்னும் சில கிலோ மீட்டர், காட்டுப் பகுதிக்குள் ஓட்ட வேணும். யானைகள் குறுக்கே வரும்” என்றார் டிரைவர்.

அவர் சொன்னபடியே, வனப் பாதைக்குள் கார் நுழைந்த அடுத்த நிமிடம், சாலையின் வலது ஓரத்தில் அமைதியாக ஒரு யானை நின்று கொண்டிருந்தது. அதைக் கடந்த சிறிது நேரத்தில் இன்னொரு யானை, எதிரில் நேராக காரை நோக்கி மெதுவாக அசைந்து வந்தது. ஓட்டுனர் உடனே ரிவர்ஸில் காரை பின்னே செலுத்த, யானையும் எங்கள் காரை நோக்கி வந்து கொண்டிருந்தது. மாலதியும் பயம் கலந்த ஆர்வத்துடன் விநாயகர் நாமாவளி சொல்லிக் கொண்டிருந்தாள்.

இந்த சேஸிங் சில நிமிடங்கள் நீடிக்க, யானைக்குப் பின்னே எதிரில் வந்த லாரி, யானைக்கும், எங்கள் காருக்கும் குறுக்காக நிறுத்தி, எங்கள் காரை முன்னே நோக்கிச் செல்ல உதவியது. அப்பாடி தப்பித்தோம் என்ற நிம்மதி.

“இந்த மாதிரி பெரிய வண்டி, இப்படி ஹெல்ப் பண்ணுவாங்க. எங்களுக்கு இதெல்லாம் பழக்கம்தான். பயம் வேண்டாம்”, என்ற ஓட்டுனர் சதீஷ், காரை வேகமாகச் செலுத்தினார். இப்போது இன்னொரு யானை, சாலையின் இடது புறத்தில். ஆனால் அதுபாட்டுக்கு, அசை போட்டபடி அமைதியாக நின்று கொண்டிருந்தது.

Elephant Sight towards Kadhirkamam, Sri Lanka

மாலை சுமார் ஆறு மணிக்கு, கதிர்காமம் கோவிலை அடைந்தோம். பெரிய நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்தியக் கோவில் போல் கோபுரங்களோ, மண்டபங்களோ இல்லை. முகப்பில் ஒரு வளைவு, சிங்கள எழுத்துக்களில் பெயர் தாங்கி நிற்கிறது. கோவிலுக்குச் செல்லும் முன், மாணிக்க கங்கை என்ற ஆற்றுப் பாலத்தைக் கடக்க வேண்டும். நல்ல விளக்கொளியுடன் படித்துறை அமைந்துள்ளது. பக்தர்கள், மாணிக்க கங்கையில் நீராடிய பின், கோவிலுக்கு வருகின்றனர்.

இலக்கியங்களும், புராணங்களும் கந்தப் பெருமானின், புனிதத் தலமாக கதிர்காமத்தைக் கொண்டாடுகின்றன. அருணகிரிப்பெருமான் பல திருப்புகழ் பாடல்களில் மிகவும் சிலாகித்த இடம். ஆறு கதிர்ப் பொறிகளால் தோன்றிய கந்தப் பெருமான், வள்ளி மீது அன்பு கொண்டு, இத்தலத்தில் அவளைத் திருமணம் செய்ததால் கதிர்காமம் என்று பெயர் பெற்றது என, கோவில் தல வரலாறு சொல்கிறது.

தனி சந்நிதியாக விநாயகர், மாணிக்க விநாயகர் என்ற பெயருடன். எனக்கு உடனே திருச்சி மலைக்கோட்டை அடிவார மாணிக்க விநாயகர் ஞாபகம் வந்தது. அர்ச்சகர் நல்ல தமிழில், சுருக்கமாகக் கதிர்காமக் கோவிலின் வரலாற்றைச் சொன்னார். இங்குள்ள தெய்வங்கள் சந்நிதி எல்லாம் திரையால் மூடப்பட்டிருக்கும். திரைக்குள் என்ன இருக்கிறது என்பது யாரும் அறியாதது. நியமிக்கப்பட்ட பரம்பரை குருமார்கள் மட்டுமே திரைக்குள் சென்று பூசை செய்ய முடியும். மாணிக்கவிநாயகரின் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட திரையைத்தான் நாம் தரிசிக்க முடியும். அதேபோல், வள்ளி, தெய்வானையுடன் மயில் மீதமர்ந்த முருகனின் வண்ண ஓவியத் திரைதான் நாம் பார்க்க முடியும்.

மாணிக்க விநாயகரைத் திரையில் தரிசித்தபின், பக்கத்தில் அமைந்துள்ள முருகன் சந்நிதிக்குச் சென்றோம். சிறிய சந்நிதி. நடுவில் வழிவிட்டு, இரண்டு பக்கமும், தடுப்பு போட்ட பகுதியில் பக்தர்களுக்கு அனுமதி. இரண்டு பக்கவாட்டிலும் மேலே வரிசையாக மணிகள். அதைப் பூசையின் போது அடிப்பதற்கு, பக்தர்கள் நின்றிருந்தனர். ஷெனாய் மாதிரி ஒரு வாத்தியமும், ஒரு பெரிய மத்தளமும் இசைக்கிறார்கள்.

ஒரு பெரிய திரையில் வண்ண ஓவியமாக ஆறுமுகம் கொண்ட முருகன். இரண்டு பக்கமும், வள்ளி, தெய்வானை. மயில் மீது ஆரோகணம். மயிலின் காலடியில் பாம்பு. சட்டென எங்களுக்கு, காரில் கதிர்காமம் வரும் வழியில், பாம்பு, மயில், யானை என்று பார்த்த காட்சி, திரையில் தரிசிக்கப் போவதை, நேரில் காட்டிய தெய்வ சாட்சியாக மனதில் பட்டது.

Kadhirkamam Murugan Sanctum

வெள்ளுடை அணிந்த சிங்கள குருமார்கள்தான் திருப்பணி செய்கிறார்கள். திரைச்சீலைக்குள் ஓரிருவர் மட்டுமே சென்று வருகின்றனர். உள்ளே என்ன என்பது பொதுவாக யாரும் அறிந்ததில்லை.

திரைக்கு முன்னே, இரண்டு சிங்களப் பெண்கள், சிறு அபினயத்துடன் ஆரத்தி எடுக்கிறார்கள். அப்போது இரண்டு பக்கங்களிருந்தும் பக்தர்கள் மணி அடிக்கிறார்கள். பக்கத்துக்கு 12 வெண்கல மணிகளுக்கு மேல் இருக்கும். கூடவே ஷெனாய், மத்தளம் வாசிக்கிறார்கள். ஆரத்தி முடிந்ததும், நியமிக்கப்பட்ட குருமார்கள், திரைச்சீலைக்குள் சென்று பூசை செய்கிறார்கள். பிறகு வெளியில் வந்து திரைச்சீலையில் கைவைத்து வணங்குகிறார்கள். பிறகு பெரிய கம்பில் இரு பக்கமும் பிரசாத மூட்டைகளைக் கட்டி, வாசலிலிருந்து, காவடி போல் தோளில் வைத்து ஒருவர் எடுத்து வருகிறார். அது பிறகு திரைச்சீலைக்குள் செல்கிறது. இவ்வாறு சிங்கள பௌத்த முறைப்படியே, முருகனுக்கு ஆராதனை நடை பெறுகிறது.

பிறகு எல்லோருக்கும் விபூதி, தீர்த்தம் தருகிறார்கள். கூடவே ப்ரசாதமாக சர்க்கரைப் பொங்கல் அளிக்கப்படுகிறது. பொங்கலை ருசித்தபடி, தனிச் சந்நிதிகளான திரையால் மூடப்பட்ட வள்ளி, தெய்வானைத் திருவுருங்களை வழிபட்டோம். இங்கு தெய்வானை முருகனிடன் கோபித்துக் கொண்டு (இத்தலத்தில் முருகன் வள்ளியை மணந்து கொண்டதால்), முருகனுக்கு முகம் காட்டாமல், எதிர்த் திசையில் இருக்கிறார்.

இந்த திரைச் சீலையால் கருவறையை மூடும் வழக்கம், பின்னாட்களில்தான் வந்திருக்க வேண்டும். ஏனென்றால் பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரி நாதர் இத்தலத்தில் இவ்வாறு பாடியுள்ளார்:

NALLUR KANDASWAMY TEMPLE – Pictures / Video

KANDY – BUDDHA’s TOOTH – Video:

KADHIRKAMAM – Pictures / Videos:

4 thoughts on “திரைக்குப் பின்னால்…

  1. Dear guruji

    Thanks a lot for the detailed inputs. Now it’s getting added to our bucket list. Looks like lord Murugan guided you throughout the path with different appearances.

  2. Excellent write up Sekarji… felt like I visited kadirgamam. love the emphasis on ‘selfie s’😀

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *